மதுபானக் கொள்கை ஊழல் வழக்கு: கேஜ்ரிவாலை விசாரிக்க அமலாக்கத்துறைக்கு அனுமதி

By KU BUREAU

புதுடெல்லி: மதுபானக் கொள்கை ஊழல் வழக்கில் முன்னாள் முதல்வர் அர்விந்த் கேஜ்ரிவாலை விசாரிக்க அமலாக்கத்துறைக்கு டெல்லி துணை நிலை ஆளுநர் வி.கே. சக்சேனா அனுமதி வழங்கியுள்ளார்.

சில உரிமதாரர்களுக்கு சாதகமாக மதுபானக் கொள்கை விதிகளை மாற்றியமைத்து, நிதி முறைகேடுகளுக்கு வழிவகுத்ததாக முதல்வர் அர்விந்த் கேஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி அரசு மீது குற்றச்சாட்டு எழுந்தது.

இதையடுத்து அர்விந்த் கேஜ்ரிவாலுக்கு எதிராக சட்டவிரோத பணமோசடி தடுப்புச் சட்டத்தின் (பிஎம்எல்ஏ) குற்றச்சாட்டின் கீழ் ஒரு வழக்கு முன்பு பதிவு செய்யப்பட்டது.

இதைத் தொடர்ந்து மதுபான கொள்கை ஊழல் வழக்கில் அமலாக்கத்துறை அதிகாரிகள், அர்விந்த் கேஜ்ரிவாலை கடந்த மார்ச் 21-ம் தேதி கைது செய்தனர். இதையடுத்து சிறை சென்ற கேஜ்ரிவால் சிறையிலிருந்தே முதல்வர் பணிகளை கவனித்து வந்தார். இதைத் தொடர்ந்து கடந்த செப்டம்பரில் சிறையிலிருந்து வெளியே வந்த கேஜ்ரிவால் தனது பதவியை ராஜினாமா செய்தார். இதைத் தொடர்ந்து ஆதிஷி சிங் மர்லேனா முதல்வர் பதவியை ஏற்றார் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளராகவும், டெல்லி யூனியன் பிரதேச எம்எல்ஏவாகவும் அவர் தனது பணியைத் தொடர்கிறார்.

இதனிடையே, டெல்லியில் அடுத்தாண்டு நடைபெறவுள்ள சட்டப்பேரவைத் தேர்தலுக்கு முன்னதாக மதுபானக் கொள்கை ஊழல் வழக்கை விசாரிக்க அர்விந்த் கேஜ்ரிவால் சார்பில் வழக்கறிஞர்கள் குழு கேட்டுக்கொண்டது. இதையடுத்து கடந்த 5-ம் தேதி கேஜ்ரிவாலுக்கு எதிரான வழக்கை மீண்டும் விசாரிக்க அமலாக்கத்துறை துணைநிலை ஆளுநரிடம் அனுமதி கோரியது.

பணமோசடி வழக்குகளில் அரசுப் பதவிகளை வகிக்கும் நபர்கள் மீது வழக்குத் தொடர துணைநிலை ஆளுநரின் அனுமதியை உச்ச நீதிமன்றம் கட்டாயமாக்கி இருந்தது. இதைத் தொடர்ந்தே இந்த அனுமதிக்காக அமலாக்கத்துறை காத்திருந்தது.

இந்நிலையில் அர்விந்த் கேஜ்ரிவாலை அமலாக்கத்துறை விசாரிக்க துணை நிலை ஆளுநர் வி.கே. சக்சேனாவால் நேற்று அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

அர்விந்த் கேஜ்ரிவாலை விசாரிக்க அனுமதி வழங்கியதற்கு டெல்லி பாஜக தலைவர் வீரேந்திர சச்தேவா வரவேற்றுள்ளார்.

இந்நிலையில், அர்விந்த் கேஜ்ரிவாலை விசாரிக்க அனுமதி வழங்கிய துணை நிலை ஆளுநரின் கடிதத்தின் நகலை ஆம் ஆத்மி கட்சி கோரியுள்ளது.

இதுகுறித்து முன்னாள் துணை முதல்வரும், ஆம் ஆத்மி கட்சியின் மூத்த தலைவருமான மணீஷ் சிசோடியா கூறும்போது, “அம்பேத்கர் குறித்து கருத்து தெரிவித்த மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா சர்ச்சையில் சிக்கியுள்ளார். அதிலிருந்து மக்களின் கவனத்தைத் திசை திருப்புவதற்காகவே இந்த முயற்சியை மத்தியில் ஆளும் பாஜக அரசு மேற்கொண்டுள்ளது” என்றார்.

இதுகுறித்து டெல்லி முதல்வர் அலுவலகத்தின் எக்ஸ் தளத்தில் கூறியதாவது: அர்விந்த் கேஜ்ரிவாலை விசாரிக்க துணை நிலை ஆளுநர் அனுமதி கொடுத்துவிட்டார் என்றால், அந்த கடிதத்தின் நகலை பொதுவெளியில் வெளியிடலாமே? அதை பொதுவில் வெளியிடுவதற்கு அவர்களுக்கு என்ன பிரச்சினை உள்ளது? மக்களை திசைதிருப்பவே இந்த முயற்சி. இதுபோன்ற சதித்திட்டங்களை நிறுத்துங்கள். உண்மையை வெளியே கொண்டு வாருங்கள். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE