ஒரே நாடு, ஒரே தேர்தல் மசோதாவை ஜேபிசி-க்கு அனுப்ப தீர்மானம் நிறைவேற்றம்

By KU BUREAU

ஒரே நாடு, ஒரே தேர்தல் மசோதாவை நாடாளுமன்ற கூட்டுக் குழுவுக்கு (ஜேபிசி) அனுப்ப மக்களவையில் நேற்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடர் கடந்த நவம்பர் 25-ம் தேதி தொடங்கியது. இந்த கூட்டத் தொடரில் அதானி விவகாரத்தை எழுப்பி எதிர்க்கட்சிகள் கடும் அமளியில் ஈடுபட்டன. இதனால் நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் பல நாட்கள் முடங்கின. இதன்பிறகு ஆளும் தேசிய ஜனநாயக கூட்டணி, எதிர்க்கட்சிகளின் இண்டியா கூட்டணி இடையே உடன்பாடு எட்டப்பட்டு இரு அவைகளும் செயல்பட தொடங்கின.

கடந்த நவம்பர் 26-ம் தேதி பழைய நாடாளுமன்ற கட்டிடத்தில் அரசியமைப்பு தினத்தின் 75-வது ஆண்டு விழா கொண்டாடப்பட்டது. இதுதொடர்பாக இரு அவைகளிலும் சிறப்பு விவாதம் நடைபெற்றது. இந்த சூழலில் கடந்த 17-ம் தேதி மத்திய சட்ட அமைச்சர் அர்ஜுன் ராம் மேக்வால், மக்களவையில் ஒரே நாடு, ஒரே தேர்தல் மசோதாவை அறிமுகம் செய்தார்.

இதற்கு எதிர்க்கட்சி எம்பிக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதைத் தொடர்ந்து மசோதாவை தாக்கல் செய்யலாமா, வேண்டாமா என்பது குறித்து வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. மசோதாவுக்கு ஆதரவாக 269 பேரும், எதிராக 198 பேரும் வாக்களித்தனர்.

இதைத் தொடர்ந்து ஒரே நாடு, ஒரே தேர்தல் மசோதா மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டது. இந்த மசோதா தொடர்பாக ஆளும் கூட்டணி, இண்டியா கூட்டணி எம்பிக்கள் இடையே காரசாரமான வாக்குவாதங்கள் நடைபெற்றன. இறுதியில் நாடாளுமன்ற கூட்டுக் குழு (ஜேபிசி) பரிசீலனைக்கு மசோதாவை அனுப்ப சட்ட அமைச்சர் அர்ஜுன் ராம் மேக்வால் பரிந்துரை செய்தார். இதன்படி 39 எம்பிக்கள் அடங்கிய ஜேபிசி அமைக்கப்பட்டு உள்ளது. குளிர்கால கூட்டத் தொடரின் இறுதி நாளான நேற்று ஒரே நாடு, ஒரே தேர்தல் மசோதாவை ஜேபிசி-க்கு அனுப்ப மக்களவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

ஒரே நாடு, ஒரே தேர்தல் மசோதாவை நிறைவேற்ற நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் மூன்றில் இரண்டு பங்கு ஆதரவு தேவை. இதன்படி மக்களவையில் மொத்தமுள்ள 543 எம்பிக்களில் ஆளும் கூட்டணிக்கு 362 எம்பிக்களின் ஆதரவு தேவை. இதேபோல மாநிலங்களவையில் மொத்தமுள்ள 245 எம்பிக்களில் 164 எம்பிக்களின் ஆதரவு தேவை. ஆளும் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு மூன்றில் இரண்டு பங்கு ஆதரவு இல்லாத நிலையில் அனைத்து கட்சிகளிடமும் கருத்தொற்றுமையை ஏற்படுத்த தீவிர முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE