அம்பேத்கருக்கு எதிராக பல பாவங்களை செய்தது காங்கிரஸ் கட்சிதான் என அவற்றுக்கான பட்டியலை வெளியிட்டு பிரதமர் நரேந்திர மோடி ஆவேசமாக கூறியுள்ளார்.
மாநிலங்களவையில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா அம்பேத்கருக்கு அவமரியாதையை ஏற்படுத்தும் வகையில் பேசியதாக கூறி காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடுமையாக எதிர்வினையாற்றி வருகின்றன.
இந்த நிலையில், காங்கிரஸ் கட்சிக்கு பதிலடி தரும் வகையில் அம்பேத்கருக்கு எதிராக அக்கட்சி பல பாவங்களை செய்துள்ளதாக பிரதமர் மோடி தனது எக்ஸ் வலைதள பக்கத்தில் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் மேலும் பட்டியலிட்டுள்ளதாவது:
அம்பேத்கரின் பாரம்பரியத்தை அழிக்கவும், எஸ்சி/எஸ்டி சமூகத்தை அவமானப்படுத்தவும் ஒரு வம்சத்தின் தலைமையிலான காங்கிரஸ் கட்சி எல்லா மோசமான தந்திரங்களிலும் ஈடுபட்டது. இதனை மறைக்க வேண்டும் என்று நினைத்தால் அவர்களால் முடியாது. இந்திய மக்கள் ஒவ்வொரு முறையும் காங்கிரஸ் கட்சியின் செயல்பாடுகளை உன்னிப்பாக கவனித்து வருகின்றனர்.
அம்பேத்கரை அவமானப்படுத்த வேண்டும் என்ற நோக்கில் ஒன்றுக்கு இரண்டு முறை அவரை தேர்தலில் தோற்கடித்தனர். அம்பேத்கருக்கு எதிராக நேரு பிரச்சாரம் செய்து அவரது இழப்பை கவுரப் பிரச்சினயாக்கினார். அம்பேத்கருக்கு பாரத ரத்னா விருதும் மறுக்கப்பட்டது. பெருமைக்குரிய நாடாளுமன்ற வளாகத்தின் மைய மண்டபத்தில் அம்பேத்கரின் படத்தை வைப்பதற்கு காங்கிரஸ் கட்சி இடம் கொடுக்க மறுத்தது.
இந்த நிலையில்தான், அம்பேத்கரை அவமதித்து, எஸ்சி/எஸ்டி சமூகத்தை புறக்கணித்த காங்கிரஸ் கட்சியின் இருண்ட வரலாற்றை அமித் ஷா நாடாளுமன்றத்தில் அம்பலப்படுத்தினார். அவர் முன்வைத்த உண்மைகள் காங்கிரஸ் கட்சியினரை தற்போது திகைப்படைய செய்துள்ளது. அதனால்தான் இப்போது அவர்கள் நாடகங்களில் ஈடுபட்டு வருகின்றனர். துரதிஷ்டவசமாக, உண்மை என்ன என்பது மக்களுக்கு தெளிவாக தெரியும் என்பது அவர்களுக்கு தெரிந்திருக்கவில்லை.
அம்பேத்கரின் கனவுகளை நனவாக்க கடந்த பத்தாண்டுகளாக பாஜக அரசு ஓய்வின்றி உழைத்து வருகிறது. 25 கோடி மக்களை வறுமையிலிருந்து மீட்டுள்ளோம். எஸ்சி/எஸ்டி சட்டத்தை வலிமையாக்கி உள்ளோம். தூய்மை இந்தியா, பிரதமர் வீடு கட்டும் திட்டம், ஜல் ஜீவன் மிஷன், உஜ்வாலா போன்ற எண்ணற்ற திட்டங்கள் ஏழை மற்றும் விளிம்புநிலை மக்களை சென்றடைந்துள்ளதை யாரும் மறுக்க முடியாது. இவ்வாறு பிரதமர் தனது பதிவில் தெரிவித்துள்ளார்.