புதுடெல்லி: அம்பேத்கரின் பாரம்பரியத்தை அழிக்கவும், பட்டியல் மற்றும் பழங்குடி சமூகத்தினை அவமதிக்கவும் பரம்பரியமாக ஒரு குடும்பத்தால் வழிநடத்தப்படும் கட்சியொன்று ஆண்டாண்டு காலமாக எப்படி தந்திரங்களில் ஈடுபட்டது என்பதை இந்திய மக்கள் மீண்டும், மீண்டும் பார்த்திருக்கிறார்கள் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து பிரதமர் மோடி வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், ‘காங்கிரஸும் அதன் அழுகிய சுற்றுச்சூழலும் தங்களின் தீங்கிழைக்கும் பொய்களால் பல வருடங்களாக அவர்கள் செய்த தவறுகளை, குறிப்பாக டாக்டர் அம்பேத்கரை அவமதித்ததை மறைக்க முடியும் என்று நினைத்தால், அவர்கள் மிகவும் தவறாக நினைக்கிறார்கள்.
டாக்டர் அம்பேத்கரின் பாரம்பரியத்தை அழிக்கவும், பட்டியல் மற்றும் பழங்குடி சமூகத்தினை அவமதிக்கவும் பரம்பரியமாக ஒரு குடும்பத்தால் வழிநடத்தப்படும் கட்சியொன்று ஆண்டாண்டு காலமாக எப்படி தந்திரங்களில் ஈடுபட்டது என்பதை இந்திய மக்கள் மீண்டும் மீண்டும் பார்த்திருக்கிறார்கள்.
அம்பேத்கரை ஒரு முறை அல்ல இரண்டு முறை தேர்தலில் தோற்கடித்தது, அவருக்கு எதிராக பண்டித நேரு பிரச்சாரம் செய்தது, அவரின் இழப்பை தன்மான பிரச்சனையாக்கியது, அவருக்கு பாரத ரத்னா தர மறுத்தது, நாடாளுமன்ற மைய மண்டபத்தில் அவரது உருவப்படத்துக்கு பெருமைக்குரிய இடத்தை வழங்க மறுத்தது போன்றவை காங்கிரஸ் கட்சி அம்பேத்கருக்கு எதிராக செய்திருக்கும் பாவங்களின் பட்டியல்.
காங்கிரஸ் கட்சி அவர்களின் ஆட்சி காலத்தில் பட்டியல் மற்றும் பழங்குடியின சமூகத்துக்கு எதிராக நடந்த படுகொலைகளை அவர்களால் மறைக்க முடியாது. நீண்ட காலம் ஆட்சியில் இருந்த காங்கிரஸ் கட்சி, பட்டியல் மற்றும் பழங்குடி சமூகங்கள் அதிகாரம் பெறுவதற்கு எதையும் செய்யவில்லை.
கடந்த பத்தாண்டுகளாக டாக்டர் பாபாசாகேப் அம்பேத்கரின் தொலைநோக்குப் பார்வையை நிறைவேற்ற நமது அரசு அயராது உழைத்துள்ளது. 25 கோடி மக்களை வறுமையில் இருந்து அகற்றுவது, எஸ்சி/எஸ்டி சட்டத்தை வலுப்படுத்துவது, ஸ்வச் பாரத், பிரதம மந்திரி ஆவாஸ் யோஜனா, ஜல் ஜீவன் மிஷன், உஜ்வாலா யோஜனா போன்ற நமது அரசின் முதன்மைத் திட்டங்களான எந்தத் துறையாக இருந்தாலும், அவை ஒவ்வொன்றும் ஏழை மற்றும் ஒதுக்கப்பட்ட மக்களின் வாழ்க்கையைத் தொட்டவை.
டாக்டர் அம்பேத்கருடன் தொடர்புடைய ஐந்து முக்கிய இடங்களான பஞ்சதீர்த்தை மேம்படுத்த எங்கள் அரசு பாடுபட்டுள்ளது. பல தசாப்தங்களாக சைத்ய பூமிக்கான நிலம் தொடர்பான பிரச்சினை நிலுவையில் உள்ளது. எங்கள் அரசாங்கம் பிரச்சினையைத் தீர்த்தது மட்டுமல்ல, நான் அங்கு பிரார்த்தனை செய்யச் சென்றேன்.
டாக்டர் அம்பேத்கர் தனது கடைசி ஆண்டுகளை கழித்த டெல்லியில் உள்ள 26, அலிபூர் சாலையையும் நாங்கள் உருவாக்கியுள்ளோம். லண்டனில் அவர் வசித்த வீடும் அரசால் கையகப்படுத்தப்பட்டுள்ளது. டாக்டர் அம்பேத்கரைப் பொறுத்தவரை, நமது மரியாதை முழுமையானது" என்று பிரதமர் மோடி கூறியுள்ளார்.
அரசியலமைப்புச் சட்டத்தின் 75வது ஆண்டைக் குறிக்கும் விவாதத்தின் போது மாநிலங்களவையில் உரையாற்றிய அமித் ஷா, "பி.ஆர். அம்பேத்கரின் பெயரை பயன்படுத்துவது இப்போது ஒரு "பேஷன்" ஆகிவிட்டது. எதற்கெடுத்தாலும் அம்பேத்கர், அம்பேத்கர், அம்பேத்கர், அம்பேத்கர், அம்பேத்கர், அம்பேத்கர் என்று பேசுகிறார்கள். கடவுளின் பெயரை இவ்வாறு பலமுறை சொன்னாலாவது அவர்களுக்கு சொர்க்கத்தில் இடம் கிடைத்திருக்கும்’ எனப் பேசியது சர்ச்சையாக வெடித்துள்ளது.