மக்களவையில் ‘ஒரே நாடு, ஒரே தேர்தல்’ மசோதா தாக்கல்: மக்களவைத் தேர்தல், மாநில மற்றும் யூனியன் பிரதேச சட்டப்பேரவைகளின் தேர்தல்களை ஒரே காலகட்டத்தில் நடத்தி முடிக்க, பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு முடிவு செய்தது. இதற்கான மசோதா மக்களவையில் செவ்வாய்க்கிழமை தாக்கல் செய்யப்பட்டது. மத்திய சட்ட அமைச்சர் அர்ஜுன் ராம் மேக்வால் இந்த மசோதாவை தாக்கல் செய்தார்.
முன்னதாக, இந்த திட்டம் தொடர்பாக ஆய்வு செய்ய முன்னாள் குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் தலைமையில் குழு அமைக்கப்பட்டது. அந்தக் குழு தனது அறிக்கையில், இந்த மசோதா சட்டமானால் அது நாட்டுக்கு நன்மை பயக்கும் என தெரிவித்தது. மேலும், இந்த மசோதாவை நிறைவேற்ற அரசியல் சாசனத்தில் மேற்கொள்ளப்பட வேண்டிய திருத்தங்கள் குறித்தும் சுட்டிக்காட்டியது. இந்தத் திருத்தங்களை மத்திய அமைச்சரவை சமீபத்தில் ஏற்றது. இதையடுத்தே, ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டத்துக்காக அரசியல் சாசனத்தில் 129-வது திருத்தத்தை மேற்கொள்வதற்கான மசோதா, மக்களவையில் அறிமுகம் செய்யப்பட்டது.
மக்களவையில் ஆதரவு, எதிர்ப்பு வாக்குகள் விவரம்: அரசியல் சாசன திருத்தம் கோரும் ‘ஒரே நாடு, ஒரே தேர்தல்’ மசோதாவுக்கு மக்களவையில் ஆதரவு இருக்கிறதா என்பதை அறிய வாக்கெடுப்பு நடத்துமாறு எதிர்க்கட்சிகள் சபாநாயகரை கேட்டுக் கொண்டன. இதனை சபாநாயகர் ஓம் பிர்லா ஏற்று, வாக்கெடுப்பு நடத்தினார். இதில், இந்த மசோதாவுக்கு ஆதரவாக 269 உறுப்பினர்களும், எதிராக 198 உறுப்பினர்களும் வாக்களித்தனர்.
ஜேபிசி பரிசீலனைக்கு அனுப்பப்படும் மசோதா! - மக்களவையில், ‘ஒரே நாடு, ஒரே தேர்தல்’ மசோதா மீதான விவாதத்தில் பேசிய திமுக எம்.பி டி.ஆர்.பாலு, “இந்த மசோதாவை ஜேபிசி எனப்படும் நாடாளுமன்ற கூட்டுக் குழுவின் பரிசீலனைக்கு அனுப்ப வேண்டும்” என வலியுறுத்தினார். இதற்கு, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா ஒப்புக்கொண்டார்.
இதையடுத்து, இந்த மசோதா நாடாளுமன்ற கூட்டுக் குழுவின் பரிசீலனைக்கு அனுப்பப்படுகிறது. இக்குழு 90 நாட்களில், இந்த மசோதா குறித்து ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்யும். தேவைப்பட்டால் காலக்கெடு நீட்டிக்கப்படும். கூட்டுக் குழுவில் பாஜகவுக்கு பெரும்பான்மை இருப்பதால், அங்கு இந்த மசோதா ஏற்கப்படும் என்ற கருத்தும் நிலவுகிறது. ஜேபிசி பரிசீலனைக்குப் பின், இந்த மசோதா மீது மக்களவை மற்றும் மாநிலங்களவையில் விவாதிக்கப்பட்டு, வாக்கெடுப்புக்கு விடப்படும் என்பது கவனிக்கத்தக்கது.
மசோதாவை திரும்பப் பெற வலியுறுத்தும் காங்கிரஸ்: ‘ஒரே நாடு, ஒரே தேர்தல்’ மசோதாவை எதிர்த்து மக்களவையில் பேசிய காங்கிரஸ் எம்.பி. மணீஷ் திவாரி, “ஒரே நாடு, ஒரே தேர்தல் மசோதா மூலம் அரசியலமைப்பின் அடிப்படைக் கோட்பாட்டின் மீது தாக்குதல் நடத்தப்படுகிறது. இந்த மசோதாவை பரிசீலிப்பது இந்த அவையின் சட்ட திறனுக்கு அப்பாற்பட்டது. அதைத் திரும்பப் பெறுமாறு அரசாங்கத்தை வலியுறுத்துகிறோம்” என்று கூறினார்.
திரிணமூல் காங்கிரஸ் காட்டம்: மக்களவையில் திரிணமூல் காங்கிரஸ் எம்.பி கல்யாண் பானர்ஜி பேசும்போது, “ஒரே நாடு; ஒரே தேர்தல் மசோதா அரசியலமைப்பின் அடிப்படை கட்டமைப்பை பாதிக்கிறது. சட்டப்பிரிவு 82 மற்றும் துணைப்பிரிவு 5 அனைத்து அதிகாரத்தையும் தேர்தல் ஆணையத்துக்கு வழங்குகிறது. உலகம் அழியும் வரை ஒரே கட்சியால் ஆட்சி அமைக்க முடியாது” என்று ஆவேசமாக கூறி, இந்த மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்தார். இதேபோல் பல்வேறு எதிர்க்கட்சிகளின் உறுப்பினர்களும் கடும் எதிர்ப்பை பதிவு செய்தனர்.
வங்கதேச இந்துக்களுக்கு ஆதரவாக எம்.பி.க்கள் ஆர்ப்பாட்டம்: வங்கதேசத்தில் இந்துக்கள், கிறிஸ்தவர்கள் உள்ளிட்ட சிறுபான்மையினருக்கு எதிரான அட்டூழியங்களை கண்டித்து எதிர்க்கட்சி எம்பிக்கள் நாடாளுமன்ற வளாகத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். காங்கிரஸ் எம்பி பிரியங்கா காந்தி உள்ளிட்ட சுமார் 50 எம்பிக்கள் இந்த ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
பாஜக பாசம்: திமுக Vs அதிமுக ‘பழனிசாமியின் பயப் பட்டியல்’ - கே.என்.நேரு சாடல்: “பழனிசாமியின் பயப் பட்டியல் நீளம். பாஜக மீதான பாசமும் அதிகம். அதனால்தான், அதிமுக பொதுக் குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களில் திமுக அரசுக்கு எதிரான தீர்மானங்களுக்கு ‘கண்டனம்’ என்றும், மோடி அரசுக்கு எதிரான தீர்மானங்களில் ‘வலியுறுத்தல்’ என்றும் சொல்லி பாஜக பாசத்தை வெளிப்படுத்தியிருக்கிறார்” என சாடியுள்ளார் திமுக மூத்த அமைச்சர் கே.என்.நேரு.
அதேவேளையில், “2026-க்குப் பிறகு திமுகவின் முழு ஆதரவை பாஜகவுக்கு அளித்து மத்திய அமைச்சர் பொறுப்புகளை பெற திமுக தயாராகிவிட்டது” என்று அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார்.
கேரள மருத்துவக் கழிவுகள்: அண்ணாமலை எச்சரிக்கை - “கேரள கம்யூனிஸ்ட் அரசுடன் திமுக அரசு உறவாடிக் கொண்டிருக்கும் அதே வேளையில், கேரள மாநிலத்தின் பயோமெடிக்கல், பிளாஸ்டிக் மற்றும் இறைச்சிக் கழிவுகளின் குப்பைக் கிடங்காக நமது தென்மாவட்டங்கள் மாற்றப்பட்டிருக்கின்றன.
இனியும் இதே போன்ற நிகழ்வுகள் தொடர்ந்தால், வரும் 2025 ஜனவரி முதல் வாரத்தில், பொதுமக்களைத் திரட்டி, இந்த உயிரியல் மருத்துவக் கழிவுகள் மற்றும் குப்பைகளை லாரிகளில் ஏற்றிச் சென்று, கேரளாவில் கொண்டு கொட்டுவோம். முதல் லாரியில் நானும் செல்வேன்” என்று பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை எச்சரிக்கை விடுத்துள்ளார்.
ஃபாலோ ஆன் தவிர்த்த இந்திய அணி! - ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியின் நான்காவது நாள் ஆட்ட நேர முடிவில், 9 விக்கெட்டுகளை இழந்த இந்திய அணி 252 ரன்களைச் சேர்த்துள்ளது. இதன் மூலம் இந்தியா ஃபாலோ ஆனை தவிர்த்தது.
சென்னை, செங்கை, காஞ்சி, திருவள்ளூருக்கு ஆரஞ்சு அலர்ட் - தென்மேற்கு வங்கக் கடல் பகுதிகளில் நிலவும் காற்றழுத்த தாழ்வு பகுதி அடுத்த இரு தினங்களில், மேலும் வலுப்பெற்று, மேற்கு -வடமேற்கு திசையில், தமிழக கடலோரப் பகுதிகளை நோக்கி நகரக்கூடும். இதன் காரணமாக, புதன்கிழமை சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. இந்த நான்கு மாவட்டங்களில் கன முதல் மிக கனமழையும், விழுப்புரம், கடலூர் மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மாஸ்கோ குண்டுவெடிப்பில் ரஷ்ய படை அதிகாரி பலி: மாஸ்கோவில் மின்சார ஸ்கூட்டரில் மறைத்து வைக்கப்பட்டிருந்த வெடிகுண்டு வெடித்ததில், ரஷ்யாவின் அணுசக்தி பாதுகாப்பு படையின் பொறுப்பதிகாரியான மூத்த ஜெனரல் கொல்லப்பட்டதாக அந்நாட்டு புலனாய்வு குழு தெரிவித்துள்ளது.