புதுடெல்லி: விவசாயிகளுக்கு சொத்து அடமானம் இன்றி வழங்கப்படும் வேளாண் கடன் வரம்பை ரூ.2 லட்சமாக உயர்த்த ரிசர்வ் வங்கி உத்தரவிட்டுள்ளது.
சிறு மற்றும் குறு விவசாயிகளுக்கு இதுவரை சொத்து அடமானம் இன்றி ரூ.1.6 லட்சம் வேளாண் கடன் வழங்கப்பட்டு வந்தது. தற்போது விவசாய பணிகளுக்கான முதலீடு அதிகரித்துள்ளதால், இந்த கடன் தொகையை ரூ.2 லட்சமாக உயர்த்த அனைத்து வங்கிகளுக்கும் ரிசர்வ் வங்கி உத்தரவிட்டுள்ளது. இந்த புதிய உத்தரவு மூலம் ஒவ்வொரு சிறு மற்றும் குறு விவசாயியும், அடுத்தாண்டு ஜனவரி 1-ம் தேதி முதல் வேளாண் மற்றும் வேளாண் சார்ந்த தொழில்களுக்கு ரூ.2 லட்சம் வரை கடன் பெற முடியும்.
புதிய கடன் வசதிகளுக்கான வழிகாட்டுதல்களை விரைவாக அமல்படுத்தவும், கடன் தொகை உயர்வு குறித்த விழிப்புணர்வை விவசாயிகள் அனைவருக்கும் தெரியப்படுத்துவதை உறுதி செய்யவும் வங்கிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளன. ரிசர்வ் வங்கியின் இந்த நடவடிக்கை, விவசாய கடன் அட்டை மூலம் வேளாண் கடன் பெறுவதை எளிதாக்கும். மேலும் மத்திய அரசின் மாற்றியமைக்கப்பட்ட வட்டி மானிய திட்டத்துக்கும் ஊக்குவிப்பாக இருக்கும். இத்திட்டத்தின் கீழ் 4 சதவீத வட்டியில் ரூ.3 லட்சம் வரை வேளாண் கடன் வழங்கப்படுகிறது.
வேளாண்துறையில் பணப்புழக்கத்தை அதிகரித்து, விவசாய பணிகளுக்கான முதலீட்டுக்கு நிதி வசதியை ஏற்படுத்தி கொடுத்து, விவசாயிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் முயற்சியாக இந்த நடவடிக்கை உள்ளது. விவசாயத்துக்கு கடன் வசதியை அதிகரிப்பது, வேளாண் பொருளாதார வளர்ச்சிக்கு உதவும் என வேளாண் வல்லுனர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
» வயநாடு நிலச்சரிவு நிவாரணம் கோரி மத்திய அரசுக்கு எதிராக பிரியங்கா காந்தி போராட்டம்
» முக்கொம்பில் நீர் வரத்து அதிகரிப்பு: உடைப்புகளை அடைக்க 10 ஆயிரம் மணல் மூட்டைகள் தயார்
இது குறித்து மத்திய வேளாண் துறை அமைச்சகம் விடுத்துள்ள அறிக்கையில், ‘‘ விவசாய முதலீடு அதிகரித்து, விவசாயிகளுக்கான கடன் வசதியை மேம்படுத்த வேண்டிய தேவை ஏற்பட்டுள்ள நிலையில், வேளாண் கடன் வரம்பை அதிகரிக்கும் முடிவு எடுக்கப்பட்டுள்ளது’’ என தெரிவித்துள்ளது.