சாத்தனூர் அணை அலர்ட் முதல் ‘ஒரே நாடு ஒரே தேர்தல்’ சலசலப்பு வரை | டாப் 10 விரைவுச் செய்திகள்

By KU BUREAU

சாத்தனூர் அணை நீர் திறப்பு - 4 மாவட்டங்களுக்கு அலர்ட் - திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள சாத்தனூர் அணையில் இருந்து தென்பெண்ணையாற்றில் விநாடிக்கு 13,000 கனஅடி தண்ணீர் வெள்ளிக்கிழமை திறந்துவிடப்பட்டது. இதையடுத்து, நான்கு மாவட்டங்களின் கரையோர கிராமங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டது.

இது குறித்து நீர்வளத் துறை வெளியிட்டுள்ள 6-வது வெள்ள அபாய எச்சரிக்கை செய்திக் குறிப்பில், “கிருஷ்ணகிரி அணை மற்றும் பாம்பாறு அணையில் இருந்து தண்ணீர் திறப்பது அதிகரிக்கப்பட்டுள்ளது. இதனால் சாத்தனூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதன் காரணமாக, அணையில் இருந்து தென்பெண்ணையாற்றில் படிப்படியாக தண்ணீர் திறப்பது அதிகரிக்கப்படும். திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, விழுப்புரம், கடலூர் மாவட்டங்களில் செல்லும் தென்பெண்ணையாறு கரையோர கிராமங்களில் வசிப்பவர்கள் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சமீபத்தில் ஃபெஞ்சல் புயலுக்கு அதி கனமழை பெய்த போது, 117 அடி வரை நீர்மட்டம் இருந்ததால், ஒரே நேரத்தில் விநாடிக்கு 1.68 லட்சம் கனஅடி தண்ணீர் வெயியேற்றப்பட்டதால், 4 மாவட்டங்கள் வெள்ளத்தில் மூழ்கியது.

இந்நிலையில், குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதியால், கனமழைக்கு வாய்ப்பு உள்ளது என வானிலை ஆய்வு மையம் கடந்த ஒரு வாரமாக எச்சரித்து வந்தபோதும், 119 அடி உயரம் கொண்ட சாத்தனூர் அணையின் நீர்மட்டத்தை முன்கூட்டியே குறைக்கவில்லை. அணையின் நீர்மட்டம், கடந்த ஒரு வாரமாக கிட்டத்தட்ட 118 அடியாக பராமரிக்கப்பட்டுள்ளது. முழு கொள்ளளவுக்கு ஒரு அடி மட்டுமே குறைவாக வைக்கப்பட்டிருந்தது.

இதன் எதிரொலியாக, அணைக்கு நீர்வரத்து அதிகரிக்க தொடங்கியதும், அணையில் இருந்து தென்பெண்ணையாற்றில் வெளியேற்றப்படும் தண்ணீரின் அளவும் அதிகரிக்கப்பட்டுள்ளது. முன்கூட்டியே அணையின் நீர்மட்டத்தை, குறைந்தபட்சம் 4 அடி வரை குறைவாக வைத்திருந்தால், அணையில் இருந்து தண்ணீர் வெளியேற்றப்படுவதும், குறைவாகவே இருந்திருக்கும் என்ற கருத்து நிலவுகிறது.

புதுச்சேரியில் கிராமப் பகுதிகளில் மீண்டும் வெள்ள எச்சரிக்கை: “சாத்தனூர் மற்றும் வீடூர் அணையிலிருந்து உபரி நீர் அதிகம் திறக்கப்படுவதன் காரணமாக வெள்ள அபாயம் ஏற்படும் சூழல் உள்ளது. அதனால், சங்கராபரணி மற்றும் தென்பெண்ணை ஆறு அருகில் கரையோரம் வசிக்கும் பொதுமக்கள் அருகில் உள்ள அரசு நிவாரண முகாம்களில் பாதுகாப்பாக தங்க அறிவுறுத்தப்பட்டுள்ளனர்” என்று புதுச்சேரி ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

சென்னையில் வெளுத்து வாங்கிய கனமழை: சென்னையில் புதன்கிழமை இரவு முதல் விட்டு விட்டு வெளுத்து வாங்கிய மழை காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. வியாழக்கிழமை பகல் 2 மணி வரையில் பதிவான மழை நிலவரப்படி, நெற்குன்றத்தில் 10 செ.மீ, மீனம்பாக்கத்தில் 8 செ.மீ, அண்ணா பல்கலைக்கழகத்தில் 7 செ.மீ, தரமணியில் 7 செ.மீ, பூந்தமல்லியில் 6 செ.மீ, நந்தனத்தில் 6 செ.மீ, கொளப்பாக்கம் 5 செ.மீ, டெல்டா மாவட்டங்களில் மயிலாடுதுறை மாவட்டத்தில் 11 செ.மீ மழை பதிவாகியுள்ளது.

76 இடங்களில் கனமழை பதிவு - “கடந்த 24 மணி நேரத்தில், தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வடகிழக்குப் பருவமழை மிக தீவிரமாக உள்ளது. அதிகபட்சமாக நாகப்பட்டினம் மாவட்டம் கோடியக்கரையில் 18 செ.மீ மழை பதிவாகியுள்ளது. 4 இடங்களில் மிக கனமழையும், 72 இடங்களில் கனமழையும் பதிவாகியுள்ளது. வங்கக் கடலில் நிலவி வரும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி வலு குறையும்” என்று இந்திய வானிலை ஆய்வு மையத்தின் தென் மண்டலத் தலைவர் பாலச்சந்திரன் வியாழக்கிழமை கூறியுள்ளார்.

மேலும், வடகிழக்குப் பருவமழையைப் பொறுத்தவரையில், கடந்த அக்.1-ம் தேதி முதல் இதுவரை, தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் பதிவான மழையின் அளவு 47 செ.மீ. இந்தக் காலக்கட்டத்தின் இயல்பளவு 40 செ.மீ. இது இயல்பைவிட 16% அதிகம் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

13 மாவட்டங்களுக்கு கனமழை வாய்ப்பு: வங்கக் கடலில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி அடுத்த 12 மணி நேரத்தில், மேற்கு - வடமேற்கு திசையில் நகர்ந்து, படிப்படியாக வலுகுறைந்து தென்தமிழக பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு பகுதியாக நிலவக்கூடும். இதன் காரணமாக, வெள்ளிக்கிழமை நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், தேனி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், ராமநாதபுரம், சிவகங்கை, தென்காசி, தூத்துக்குடி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மழையால் அச்சம் வேண்டாம்: அமைச்சர் - தமிழக முதல்வர் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருவதால், மழைக்காக பயப்பட வேண்டிய அவசியமில்லை என வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் தெரிவித்தார்.

பெரியார் நினைவகத்தை திறந்து வைத்தார் முதல்வர்: கேரளாவின் வைக்கத்தில் நடைபெற்ற “வைக்கம் போராட்டம் நூற்றாண்டு நிறைவு விழா”-வில், புதுப்பிக்கப்பட்ட தந்தை பெரியார் நினைவகம் மற்றும் பெரியார் நூலகத்தை தமிழக முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார்.

இந்த நிகழ்வில் அவர் பேசும்போது, “வைக்கம் என்பது ஒரு தனிப்பட்ட வெற்றி அல்ல; தொடர் வெற்றிகளுக்கான தொடக்கம். உயர்ந்த சாதி - தாழ்த்தப்பட்ட சாதி, ஏழை - பணக்காரன், ஆண் - பெண் ஆகிய பாகுபாடுகளுக்கு எதிரான நம்முடைய போராட்டத்தை நாம் தொடர வேண்டும். முன்பு இருந்ததை விட வேகமாக செயல்பட வேண்டும்” என்று பேசினார்.

இரண்டு நாட்களே நடந்த பேரவை: ராமதாஸ் சாடல் - “நடப்பாண்டில் ஒட்டுமொத்தமாக 18 நாட்களுக்கு மட்டும்தான் பேரவைக் கூடியிருக்கிறது. அதிக நாட்களுக்கு அவைக் கூட்டம் நடைபெற்றால் தாங்கள் அதிக அளவில் அம்பலப்பட்டு விடுவோம் என்ற அச்சத்தின் காரணமாகவே மிகக்குறைந்த நாட்களுக்கு அவையை திமுக அரசு நடத்துகிறது” என்று பாமக நிறுவனர் ராமதாஸ் விமர்சித்துள்ளார்.

‘மோடி அரசால் பொருளாதாரத்தை மீட்டெடுக்க முடியவில்லை’ - மத்திய அரசின் கொள்கைகள் பொருளாதாரத்தை மீட்டெடுப்பதில் தோல்வியடைந்து விட்டது என்று காங்கிரஸ் கட்சி குற்றம்சாட்டியுள்ளது. மேலும், அரசின் யுக்திகள் கார்ப்பரேட் நிறுவனங்களின் வரிகளைக் குறைத்து, சம்பளம் வாங்கும் மத்திய வர்க்கத்தினர் மீது வரியைச் சுமத்துவது முதலீடு மற்றும் பணியமர்த்தல் அதிகரிப்பு இல்லாமல், ஒரு பெரிய அளவிலான ஏகபோகத்தினை உருவாக்கியுள்ளது என்றும் சாடியுள்ளது.

ஒரே நாடு ஒரே தேர்தல் - ஸ்டாலின் எதிர்ப்பு: தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது சமூகவலைதளப் பக்கத்தில் வெளியிட்ட பதிவில், “ஒரே நாடு, ஒரே தேர்தல் மசோதா என்ற கொடூரமான மசோதாவை நாடாளுமன்றத்தில் அறிமுகப்படுத்த மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இது நடைமுறைக்கு மாறான ஜனநாயக விரோத நடவடிக்கை. மாநிலங்களின் குரல்களை அழித்து, கூட்டாட்சித் தன்மையை சிதைத்து, ஆட்சியை சீர்குலைக்கும். இந்தியாவே எழுக! இந்திய ஜனநாயகத்தின் மீதான இந்த தாக்குதலை முழு பலத்துடன் எதிர்ப்போம்” என்று கூறியுள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE