டெல்லிக்கு பேரணி சென்ற விவசாயிகள் மீது போலீஸார் கண்ணீர் புகை குண்டு வீச்சு

By KU BUREAU

பாட்டியாலா: டெல்லி நோக்கி பேரணி சென்ற விவசாயிகள் மீது ஹரியானா போலீஸார் கண்ணீர் புகை குண்டுகளை வீசினர்.

குறைந்தபட்ச ஆதரவு விலைக்கு சட்டபூர்வ உத்தரவாதம் அளிப்பது உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பஞ்சாப் விவசாயிகள் டெல்லி நோக்கி செல்லும் போராட்டத்தை தொடங்கினர். பஞ்சாப்பின் ஷம்பு எல்லையில் குவிந்திருந்த விவசாயிகளில் 101 பேர் நேற்று பேரணியாக சென்று ஹரியானாவுக்குள் நுழைந்தனர். அவர்களை தடுப்புகள் அமைத்து ஹரியானா போலீஸார் தடுத்தனர்.

அவர்களிடம் டெல்லி நோக்கி பேரணி செல்வதற்கான அனுமதியை கேட்டனர். போலீஸாரிடம் இருந்த 101 விவசாயிகளின் பெயர் பட்டியலும், பேரணியில் சென்றவர்களின் பெயர் பட்டியலும் ஒத்துப்போகவில்லை. பேரணி செல்லும் விவசாயிகளை அடையாளம் கண்டபின்பே, அவர்களை பேரணிக்கு அனுமதிப்போம் என போலீஸார் கூறினர். ஆனால், பட்டியலில் உள்ளவர்களின் பெயர்களை போலீஸார் அடையாளம் காண விவசாயிகள் அனுமதிக்கவில்லை. அவர்கள் கும்பலாக முன்னேறி சென்றனர்.

இதனால் தடுப்புகளை நோக்கி வந்த விவசாயிகள் மீது போலீஸார் தொடர்ச்சியாக கண்ணீர் புகை குண்டுகளை வீசினர். சிலர் மீது பெப்பர் ஸ்பிரே அடிக்கப்பட்டது. கண்ணீர் புகை குண்டுகளை எதிர்கொள்ள விவசாயிகள் தயார் நிலையில் வைத்திருந்தனர். அவர்களிடம் பாதுகாப்பு கண்ணாடி, ஈரமான சணல் பை முகமூடி ஆகியவை இருந்தது.

பேரணியில் பங்கேற்ற விவசாயிகள் தலைவர் சர்வன் சிங் பாந்தர் கூறுகையில், ‘‘ பேரணியில் பங்கேற்றுள்ள 101 விவசாயிகளின் பட்டியலை ஏற்கெனவே அளித்துவிட்டோம். அடையாள அட்டையை சரிபார்த்தபின்பு எங்களை பேரணிக்கு அனுமதிக்கலாம். நாங்கள் ஒத்துழைப்பு அளிக்கத் தயார். நாங்கள் ஓழுங்குடன் பேரணியை தொடர்ந்து மேற்கொள்கிறோம். ஆனால் போலீஸார் தொடர்ந்து கண்ணீர் புகை குண்டுகளை வீசுகின்றனர். நாங்கள் எந்தவித தியாகத்துக்கும் தயார். எங்கள் பிரச்சினைக்கு பிரதமர்தான் தீர்வு காண வேண்டும். இல்லையென்றால் நாங்கள் டெல்லி நோக்கி பேரணி செல்வோம்’’ என்றார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE