ஹைதராபாத்: தெலங்கானா மாநிலம், ஹைதராபாத் எல்.பி. நகர் ஆர்டிசி காலனி பகுதியைச் சேர்ந்த வர்ஷா, தினேஷ், வம்சி, பாலு, விநாயக், மணிகண்டா ஆகிய 6 பேரும் யாதாத்ரி புவனகிரி மாவட்டம், பூதான் போச்சம்பல்லி கிராமத்துக்கு நேற்று அதிகாலையில் காரில் புறப்பட்டு சென்றனர்.
அனைவரும் 19 முதல் 23 வயதுக்கு உட்பட்டவர்களே. இவர்கள் சென்ற கார் ஜலால்பூர் சென்றபோது, ஒரு வளைவில் திடீரென நிலைதடுமாறி சாலையின் இடதுபுறம் உள்ள ஏரியில் விழுந்து விபத்துக்குள்ளானது.
இந்த கோர விபத்தில் மணிகண்டா என்பவர் மட்டும் காரின் கண்ணாடியை உடைத்து உயிர் தப்பி உள்ளார். மற்ற 5 பேரும் நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தனர். ஏற்கெனவே இரவு நடந்த பார்ட்டி யில் அனைவரும் மது அருந்தி உள்ளனர். அதன் பிறகு கள் குடிக்க வேண்டும் எனும் ஆசையில் அனைவரும் இரவோடு இரவாக காரில் சென்றபோது விபத்து நடந்துள்ளது.
காரையும், சடலங்களையும் போலீஸார் மீட்டனர். பின்னர் சடலங்களை பிரேத பரிசோத னைக்காக புவனகிரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதனிடையே, அப்பகுதி மக்கள் சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். அடிக்கடி விபத்து நடக்கும் இந்த வளைவில் அறிவிப்பு பலகை வைப்பதுடன் வேகத்தடை அமைக்க வேண்டும் என பலமுறை கூறியும் எந்த அதிகாரியும் நடவடிக்கை எடுக்கவில்லை என அவர்கள் குற்றம் சாட்டினர்.
» அமைச்சர் பொன்முடி மீது சேறு வீசியதாக பாஜக பிரமுகர் உட்பட 2 பேர் மீது வழக்கு பதிவு
» கேள்விகளுக்கு பதில்தர வேண்டியது அரசின் கடமை: செந்தில் பாலாஜிக்கு அண்ணாமலை பதில்
இதையடுத்து இது தொடர்பாக விரைவில் நடவடிக்கை எடுப்பதாக போலீஸார் உறுதி அளித்த பின்னர் கிராம மக்கள் தங்களின் போராட்டத்தை கைவிட்டனர்.