மகா விகாஸ் அகாடி கூட்டணியில் இருந்து சமாஜ்வாதி கட்சி வெளியேறியது

By KU BUREAU

மும்பை: பாபர் மசூதி இடிப்பு தொடர்பாக உத்தவ் தாக்கரே கட்சியின் சர்ச்சைக்குரிய கருத்து காரணமாக, மகாராஷ்டிராவில் மகா விகாஸ் அகாடி (எம்விஏ) கூட்டணியில் இருந்து சமாஜ்வாதி கட்சி வெளியேறியது.

மகாராஷ்டிராவில் சமீபத்திய சட்டப்பேரவை தேர்தலில் எதிர்க்கட்சிகளின் எம்விஏ கூட்டணியில் சமாஜ்வாதி கட்சி இடம்பெற்றிருந்தது. 2 தொகுதிகளில் அக்கட்சி வெற்றி பெற்றது.

இந்நிலையில் பாபர் மசூதி இடிப்பு தினத்தை முன்னிட்டு உத்தவ் தாக்கரேவின் நெருங்கிய உதவியாளர் மிலிந்த் நர்வேகர் 'எக்ஸ்' தளத்தில் நேற்று முன்தினம் ஒரு பதிவை வெளியிட்டிருந்தார். பாபர் மசூதி இடிக்கப்படும் படத்துடன் கூடி அப்பதிவில், “இதை செய்தவர்களுக்காக நான் பெருமிதம் கொள்கிறேன்" என்று மறைந்த சிவசேனா நிறுவனர் பால் தாக்கரே கூறிய வார்த்தைகள் இருந்தன.

இதையடுத்து மகாராஷ்டிர சமாஜ்வாதி தலைவர் அபு அசீம் ஆஸ்மி வெளியிட்ட 'எக்ஸ்' பதிவில், “நாளேடு ஒன்றில் சிவசேனா (உத்தவ்) கொடுத்துள்ள விளம்பரத்தில் பாபர் மசூதியை இடித்தவர்களுக்கு வாழ்த்து தெரிவிக்கப்பட்டுள்ளது. உத்தவ் தாக்கரேயின் நெருங்கிய உதவியாளரும் மசூதி இடிக்கப்பட்டதை பாராட்டி பதிவிட்டுள்ளார். நாங்கள் எம்விஏ கூட்டணியில் இருந்து வெளியேறுகிறோம். இது தொடர்பாக சமாஜ்வாதி தலைவர் அகிலேஷ் யாதவிடம் பேசிவிட்டேன். எம்விஏ கூட்டணியில் ஒரு கட்சி இவ்வாறு பேசினால் அக்கட்சிக்கும் பாஜகவுக்கும் என்ன வித்தியாசம் உள்ளது. அவர்களுடன் நாங்கள் ஏன் இருக்க வேண்டும்?” என்று கூறியுள்ளார்.

இந்நிலையில் மின்னணு வாக்கு இயந்திரங்களில் முறைகேடு செய்து தேர்தலில் மகாயுதி கூட்டணி வெற்றி பெற்றுள்ளதாக கூறி மகாராஷ்டிர சட்டப்பேரவையில் இருந்து எம்விஏ கட்சிகள் நேற்று வெளிநடப்பு செய்தன. அக்கட்சிகளின் புதிய எம்எல்ஏக்கள் நேற்று பதவியேற்கவில்லை. எனினும் சமாஜ்வாதி கட்சி இதனை ஏற்கவில்லை. அக்கட்சியின் 2 எம்எல்ஏக்கள் நேற்று பதவியேற்றனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE