நாடாளுமன்ற வளாகத்தில் ராகுல், பிரியங்கா போராட்டம்

By KU BUREAU

புதுடெல்லி: அதானி விவகாரம் தொடர்பாக நாடாளுமன்ற வளாகத்தில் ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி நேற்று போராட்டம் நடத்தினர்.

லஞ்ச வழக்கில் அதானிக்கு அமெரிக்க நீதிமன்றம் பிடிவாரன்ட் பிறப்பித்த விவகாரம் தொடர்பாக நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் விவாதிக்க வேண்டும் என்று காங்கிரஸ் வலியுறுத்தி வருகிறது.

இந்த கோரிக்கையை முன்னிறுத்தி மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, வயநாடு தொகுதி எம்பி பிரியங்கா காந்தி மற்றும் இண்டியா கூட்டணியை சேர்ந்த எம்பிக்கள் நாடாளுமன்ற வளாகத்தில் நேற்று போராட்டம் நடத்தினர்.

கையில் அரசமைப்பு சாசன புத்தகத்தை ஏந்தியபடி நாடாளுமன்ற வளாகத்தில் அவர்கள் பேரணியாக சென்றனர். அப்போது அதானி விவகாரம் குறித்து இரு அவைகளிலும் விவாதிக்க வேண்டும் என்று எதிர்க்கட்சி எம்பிக்கள் கோஷமிட்டனர்.

பிரியங்கா காந்தி நிருபர்களிடம் கூறும்போது, “நாட்டின் ஒற்றுமைக்காக எனது அண்ணன் ராகுல் காந்தி கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை 4,000 கி.மீ. தொலைவு பாதயாத்திரை மேற்கொண்டார். நாட்டின் நலனுக்காக அவர் தொடர்ந்து போராடி வருகிறார். தற்போது அதானி விவகாரம் குறித்து நாடாளுமன்றத்தில் விவாதிக்க வேண்டும் என்று வலியுறுத்தி வருகிறோம். ஆனால் விவாதம் நடத்த ஆளும் பாஜக அஞ்சுகிறது" என்று குற்றம் சாட்டினார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE