புதுடெல்லி: டெல்லி நோக்கி பேரணியாக செல்ல முயன்ற விவசாயிகள் நேற்று ஹரியானா எல்லையில் தடுத்து நிறுத்தப்பட்டனர்.
வேளாண் பயிர்களின் குறைந்தபட்ச ஆதரவு விலைக்கு சட்டபூர்வ உத்தரவாதம் அளிக்க வேண்டும். வேளாண் கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும். வேளாண் துறையில் சீர்திருத்தங்களை அமல்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த பிப்ரவரி 13-ம் தேதி முதல் பஞ்சாப், ஹரியானா விவசாயிகள் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர். சம்யுக்தா கிசான் மோர்ச்சா, கிசான் மஸ்தூர் மோர்ச்சா சங்கங்கள் போராட்டத்துக்கு தலைமையேற்று வழிநடத்துகின்றன.
இந்த சூழலில் டெல்லி நோக்கி செல்லும் போராட்டத்தை விவசாயிகள் அறிவித்தனர். இதன்படி பஞ்சாப்-ஹரியானா எல்லையான ஷம்பு பகுதியில் இருந்து நேற்று மதியம் விவசாயிகள் பாதயாத்திரையை தொடங்கினர். இதை தடுக்க சிஆர்பிஎப், ஹரியானா காவல் துறையை சேர்ந்த நூற்றுக்கணக்கான போலீஸார் ஷம்பு எல்லையில் குவிக்கப்பட்டனர். பல்வேறு இடங்களில் சிமென்ட் சிலாப்புகள், முள்வேலி மூலம் தடுப்புகள் ஏற்படுத்தப்பட்டன.
முதல்கட்டமாக 101 விவசாயிகள் போலீஸ் தடுப்புகளை தாண்டி முன்னேறி செல்ல முயன்றனர். அவர்களை போலீஸார் தடுத்து நிறுத்தினர். கூட்டத்தை கலைக்க போலீஸார் தண்ணீரை பீய்ச்சி அடித்து, தடியடி நடத்தினர். கண்ணீர் புகைக்குண்டுகளையும் வீசினர். இதில் 8 விவசாயிகள் காயமடைந்தனர். உடனடியாக அவர்கள் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.
» பகலிரவு டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் ஸ்டார்க் வேகத்தில் இந்திய அணி 180 ரன்களுக்கு ஆட்டமிழப்பு
» ராஜஸ்தான் கோயிலுக்கு காணிக்கையாக 1 கிலோ தங்க கட்டி, ரூ.23 கோடி ரொக்கம்
முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக எல்லைப் பகுதிகளில் உள்ள 11 கிராமங்களில் இணைய சேவை துண்டிக்கப்பட்டது. ஹரியானாவில் இருந்து டெல்லி செல்லும் சாலைகள் முழுவதும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன.
இதுகுறித்து விவசாயிகள் சங்க தலைவர் தேஜ்வீர் சிங் கூறியதாவது: பல மாதங்களாக போராட்டம் நடத்தி வருகிறோம். மத்திய அரசு இதுவரை எங்களோடு பேச்சுவார்த்தை நடத்தப்படவில்லை. எனவே நாடாளுமன்றம் நோக்கி செல்லும் போராட்டத்தை தொடங்கி உள்ளோம். கடந்த 10 மாதங்களில் இருமுறை ஹரியானா எல்லையை தாண்ட முயற்சி செய்தோம். ஆனால் ஹரியானா போலீஸார் தடுத்து நிறுத்திவிட்டனர்.
இப்போதும் எங்களை முன்னேறவிடாமல் போலீஸார் தடுத்து நிறுத்தி உள்ளனர். எங்கள் தரப்பில் சில விவசாயிகள் படுகாயம் அடைந்து உள்ளனர். எனவே தற்காலிகமாக போராட்டத்தை கைவிட்டு உள்ளோம். மீண்டும் போராட்டத்தை தொடங்குவோம். இவ்வாறு தேஜ்வீர் சிங் தெரிவித்தார்.
விவசாய சங்க தலைவர் சர்வன் சிங் கூறியதாவது: எங்களது கோரிக்கைகளை மனுவாக அளிக்குமாறு மத்திய அரசு சார்பில் கோரப்பட்டது. இதன்படி கோரிக்கை மனுவை மத்திய அரசு அதிகாரிகளிடம் சமர்ப்பித்து உள்ளோம். எங்களது கோரிக்கைகளை பரிசீலிக்க ஒரு நாள் அவகாசம் வழங்கி உள்ளோம். அதற்குள் மத்திய அரசு பதில் அளிக்க வேண்டும். எங்களோடு பேச்சுவார்த்தை நடத்த முன்வர வேண்டும். இல்லையென்றால் டிசம்பர் 8-ம் தேதி மீண்டும் டெல்லி செல்லும் போராட்டத்தை தொடங்குவோம். இவ்வாறு சர்வன் சிங் தெரிவித்தார்