விஜய் பரபரப்பு பேச்சு: ‘எல்லோருக்குமான தலைவர் அம்பேத்கர்’ புத்தக வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு பேசிய தமிழக வெற்றிக் கழகத்தில் தலைவர் விஜய் பேசுகையில், “ சமூக நீதி பேசும் இங்கிருக்கும் அரசு, வேங்கைவயல் பிரச்சினையில் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. தமிழக மக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை பாதுகாப்புடன் முழுமையாக அளிக்கும், மக்களை நேசிக்கும் ஒரு நல்ல அரசுதான் இதற்கான தீர்வு.
இங்கு நடக்கும் பிரச்சினைகளுக்கு சம்பிரதாயத்துக்காக ட்வீட் போடுவதும், சம்பிரதாயத்துக்காக அறிக்கை விடுவதும், மக்களுடன் இருப்பதாக காட்டிக்கொள்வதும், சம்பிரதாயத்துக்காக மழை தண்ணியில் நின்று போட்டோ எடுப்பதிலும் எனக்கு கொஞ்சமும் உடன்பாடில்லை. என்ன செய்வது நாமும் சம்பிரதாயத்துக்கு சில நேரங்களில் அப்படி செய்யவேண்டியுள்ளது.
இறுமாப்புடன் 200 வெல்வோம் என்று எகத்தாள முழக்கமிடும் மக்கள் விரோத ஆட்சியாளர்களுக்கு, என் மக்களுடன் இணைந்து நான் விடுக்கும் எச்சரிக்கை என்னவென்றால், நீங்கள் உங்கள் சுயநலத்துக்காக பல வழிகளில் பாதுகாத்து வரும் உங்களின் கூட்டணி கணக்குகள் அனைத்தையும், 2026-ல் மக்களே மைனஸ் ஆக்கிவிடுவார்கள்.
விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவனால் இன்று வரமுடியாமல் போனது. அம்பேத்கரின் புத்தக வெளியீட்டு விழாவில் கூட கலந்துகொள்ள முடியாத அளவுக்கு கூட்டணி கட்சிகள் சார்ந்து எவ்வளவு நெருக்கடி இருக்கும் என்பதை என்னால் யூகிக்க முடிந்தாலும், அவரின் மனது முழுக்க முழுக்க நம்முடன் தான் இருக்கும்” என விஜய் பேசினார்.
» மேட்டூர் மின்வாரிய தொழிற்சாலை ஊழியர்களை இடமாற்றம் செய்ய நடவடிக்கை
» பிறப்பால் இனி ஒருவர் முதலமைச்சராக கூடாது - விஜய் முன்பாக கொந்தளித்த ஆதவ் அர்ஜுனா!
விஜய் மேடையை ‘தவிர்த்த’ திருமாவளவன் விளக்கம்: ‘எல்லோருக்குமான தலைவர் அம்பேத்கர்’ நூல் வெளியீட்டு விழாவில் விஜய்யுடன் பங்கேற்காதது குறித்து விசிக தலைவர் திருமாவளவன் விளக்கம் அளித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில், “தவெக தலைவர் விஜய்யின் மாநாட்டு உரைக்கு முன்பு, நூல் வெளியீட்டு விழாவுக்கு அவர் வருவதை அறிந்தபோதும்கூட, அந்த நிகழ்வில் நான் பங்கேற்பதை பதிப்பகத்தாரிடம் உறுதி செய்துவிட்டேன். இந்த நிலையில், அவரது மாநாட்டு உரைக்கு பிறகு, தொலைநோக்கு பார்வையுடன் முடிவெடுக்கும் அரசியல் நெருக்கடியை எதிர்கொள்ள வேண்டிய சூழலுக்கு விசிக ஆளானது. ‘விஜய்யை கொண்டே விழா நடத்தட்டும்’ என்று மிக மிக தொடக்க நிலையிலேயே அவர்களிடம் கூறிவிட்டேன்.
இந்த நிலையில், ‘விஜய்யோடு மேடையேறும் துணிச்சல் திருமாவளவனுக்கு இல்லையா. திமுகவின் அச்சுறுத்தலுக்கு பணிந்துவிட்டாரா’ என்று கேட்பவர்கள், ‘ஏன் ஏற்கெனவே இசைவு அளித்த திருமாவளவனை விட்டுவிட்டு நிகழ்ச்சியை நடத்த முடிவெடுத்தனர்’ என்று கேட்கவில்லை. விஜய்யை மிகப் பெரிய சக்தியாகவும், நம்மை ஒரு ‘துக்கடா’வாகவும் எடைபோடுபவர்கள் எவ்வாறு நமக்காக வாதிடுவார்கள். ‘தான் பங்கேற்காவிட்டாலும் பரவாயில்லை; விஜய் பங்கேற்கட்டும்’ என திருமாவளவன் பெருந்தன்மையோடு ஒதுங்கியுள்ளார் என்று பேச இங்கே யார் உண்டு.
‘ஆதவ் அர்ஜுனாவின் கட்டுப்பாட்டில் சிக்கியிருக்கிறார் திருமா. அதனால்தான் அவர்மீது நடவடிக்கை எடுக்க தயங்குகிறார்’ என்று கூறும் அதே நபர்கள்தான், ‘திமுகவுக்கு அஞ்சுகிறார். அதனால்தான் இந்த நிகழ்வில் பங்கேற்காமல் தவிர்த்துவிட்டார்’ என்றும் முன்னுக்கு பின் முரணாக பேசுகின்றனர்.
ஆதவ் அர்ஜுனாவின் கட்டுப்பாட்டில் இருப்பது உண்மை என்றால், அவர் அழைத்தும்கூட ஏன் இந்த நிகழ்வில் பங்கேற்கவில்லை? அதேபோல, திமுக அச்சுறுத்துவது உண்மையாக இருந்தால், அதற்கு பணிந்து ஆதவ் அர்ஜுனா மீது ஏன் இன்னும் நடவடிக்கை எடுக்கவில்லை? இப்படி கேள்வி எழுவது இயல்பு. ஆனால், அப்படியெல்லாம் யாரும் சிந்திக்கமாட்டார்கள். கூட்டணியில் இருந்து நான் வெளியே வருவேன் என்ற எண்ணம் நிறைவேறாததால், வாய்க்கு வந்தபடி அவதூறுகளை அள்ளி வீசுகின்றனர். அதற்கு செவிமடுக்க வேண்டாம். வழக்கம்போல கடந்து செல்வோம்” திருமாவளவன் கூறியுள்ளார்.
புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி - டிச.11, 12-ல் கனமழை வாய்ப்பு: இந்திய பெருங்கடல் மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளின் மேல் வெள்ளிக்கிழமை ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இது, சனிக்கிழமை வாக்கில், தெற்கு வங்கக்கடலின் மத்திய பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகக் கூடும். இது மேற்கு - வடமேற்கு திசையில் நகர்ந்து, 12-ம் தேதி வாக்கில் தென்மேற்கு வங்கக் கடல் பகுதிகளில் இலங்கை - தமிழகம் கடற்கரையை நோக்கி நகரக் கூடும்.
இதன் காரணமாக, டிசம்பர் 11-ம் தேதி மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை மற்றும் ராமநாதபுரம் மாவட்டங்கள், காரைக்கால் பகுதியில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. டிசம்பர் 12-ம் தேதி செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை மற்றும் ராமநாதபுரம் மாவட்டங்கள், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
“அம்பேத்கரின் சமத்துவ பாதையில்...” - முதல்வர் ஸ்டாலின்: நாடு முழுவதும் அம்பேத்கர் நினைவு தினம் வெள்ளிக்கிழமை அனுசரிக்கப்பட்டது. “கல்வியின் மகத்துவத்தை உணர்த்தி, தனது பேரறிவால் சமத்துவத்துக்கும் நீதிக்கும் பாதை சமைத்தவர் அம்பேத்கர். அண்ணலின் அறிவொளியில் சமத்துவச் சமுதாயத்துக்கான பாதையில் நடைபோடுவோம்” என்று முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார்.
எதிர்தரப்பு சாட்சியாக இபிஎஸ், சசிகலாவை விசாரிக்க உத்தரவு: கோடநாடு கொலை மற்றும் கொள்ளை வழக்கில் எதிர்தரப்பு சாட்சியாக முன்னாள் முதல்வரான எடப்பாடி பழனிசாமி மற்றும் வி.கே.சசிகலாவை விசாரிக்க சென்னை உயர் நீதிமன்றம் அனுமதியளித்து உத்தரவிட்டுள்ளது.
‘அதானியை முதல்வர் சந்திக்கவில்லை’ - அமைச்சர் செந்தில் பாலாஜி - “தொழிலதிபர் அதானியை முதல்வர் ஸ்டாலின் சந்திக்கவும் இல்லை. அதானி நிறுவனத்துடன் நேரடியாகச் சூரிய ஒளி மின்சாரம் பெற எந்த ஒப்பந்தமும் போடவும் இல்லை. பொய்த் தகவல்களைத் தொடர்ந்து பரப்புவோர் மீது கடும் சட்டபூர்வ நடவடிக்கை எடுக்கப்படும்” என்று அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார்.
காங். எம்.பி இருக்கையில் பணம் - பாஜக அமளி: மாநிலங்களவையில் காங்கிரஸ் எம்.பி அபிஷேக் மனு சிங்விக்கு ஒதுக்கப்பட்ட இருக்கை எண் 222-ல் 500 ரூபாய் நோட்டுக்கள் 100 எண்ணிக்கையில் கண்டெடுக்கப்பட்டதாக மாநிலங்களவை தலைவர் ஜக்தீப் தன்கர் தெரிவித்ததை அடுத்து, பாஜக எம்பிக்கள் கடும் அமளியில் ஈடுபட்டனர்.
இதனிடையே, அவைத்தலைவரின் அறிவிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்துப் பேசிய எதிர்க்கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, “இந்த விவகாரம் குறித்து முழுமையாக விசாரித்தால்தான் அது யாருடைய பணம் என்பது தெரிய வரும். விசாரணையை முடிக்காமல் அவைத் தலைவர் உறுப்பினரின் பெயரைக் கூறி இருக்கக்கூடாது” என தெரிவித்தார்.
முதல்வர் ஸ்டாலின் மீது இபிஎஸ் விமர்சனம்: அதிமுக ஆட்சியில் தொடங்கப்பட்ட நலத் திட்டங்களுக்கு ஸ்டிக்கர் ஒட்டி ஆட்சி நடத்தி வருகிறார் முதல்வர் ஸ்டாலின் என்று அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி கூறினார்.
பேரிடர் பாதித்த பகுதிகளாக புதுச்சேரி, காரைக்கால் அறிவிப்பு: ஃபெஞ்சல் புயலால் பாதிக்கப்பட்டதன் காரணமாக, பேரிடர் பாதித்த பகுதிகளாக புதுச்சேரி, காரைக்கால் ஆகியவை அறிவிக்கப்பட்டுள்ள. இது குறித்து புதுச்சேரிக்கான வருவாய்த் துறை சிறப்புச் செயலர் குலோத்துங்கன் வெளியிட்ட உத்தரவில், ‘புதுச்சேரி யூனியன் பிரதேசத்துக்கு உட்பட்ட புதுச்சேரி, காரைக்கால், ஏனாம் பிராந்தியங்கள் புயலால் கடுமையாகப் பாதிக்கப்பட்டதால், இப்பகுதிகள் இயற்கை பேரிடர் பாதித்த பகுதிகளாக அறிவிக்கப்படுகின்றன’ என்று தெரிவித்துள்ளார்.
180 ரன்களில் சுருண்டது இந்திய அணி: ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2-வது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்த இந்திய அணி 180 ரன்களை மட்டுமே சேர்த்தது. இதில் ஆஸ்திரேலிய பவுலர் மிட்செல் ஸ்டார்க் 6 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார்.
கண்ணீர் புகை குண்டுகள் வீசி விவசாயிகள் தடுத்து நிறுத்தம்: விவசாயிகள் மீது டெல்லி சலோ போராட்டத்தை டெல்லி அருகே ஷம்பு எல்லையில் தடுத்து நிறுத்திய போலீஸார், தடுப்புகளை மீறிச் செல்ல முயன்ற விவசாயிகள் மீது கண்ணீர் புகைக் குண்டுகளை வீசினர்.
வேளாண் பயிர்களின் குறைந்தபட்ச ஆதரவு விலைக்கு சட்டபூர்வ உத்தரவாதம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ‘டெல்லி சலோ’ போராட்டத்தை பஞ்சாப் - ஹரியானா எல்லையில் உள்ள ஷம்பு என்ற இடத்தில் இருந்து விவசாயிகள் வெள்ளிக்கிழமை மதியம் தொடங்கினர்.
விவசாயிகள் கைகளில் கொடிகளை ஏந்தியவாறு கோஷங்களை எழுப்பிக்கொண்டு பேரணியை தொடங்கி, தேசிய நெடுஞ்சாலை 44-ல் வந்து கொண்டிருந்தபோது, போலீஸாரால் அமைக்கப்பட்டிருந்த இரும்பு வேலியை அகற்றினர். இதனையடுத்து போலீஸார் அமைத்திருந்த காங்கிரீட் தடுப்பு அருகே வந்தபோது, அவர்கள் மீது கண்ணீர் புகைக் குண்டுகளை போலீஸார் வீசினர்.
இதையடுத்து, பலரும் சிதறி ஓடினர். இதனால், போராட்டத்தில் ஈடுபட்டவர்களில் பலரும் காயமடைந்தனர். இதனால், ஷம்பு எல்லையில் தொடர்ந்து பதற்றம் நிலவி வருகிறது. இதனிடையே, நரேந்திர மோடி அரசு அனைத்து விவசாய விளைபொருட்களையும் குறைந்தபட்ச ஆதரவு விலையில் கொள்முதல் செய்யும் என்று மத்திய விவசாயத் துறை அமைச்சர் சிவராஜ் சிங் சவுகான் மாநிலங்களவையில் தெரிவித்தார்.
ரெப்போ விகிதம் 6.5% ஆக தொடர ஒப்புதல்: இந்திய ரிசர்வ் வங்கியின் நிதிக் கொள்கைக் குழு தொடர்ந்து 11-வது முறையாக வங்கிகளுக்கான ரெப்போ வட்டி விகிதத்தை மாற்றாமல் 6.5 சதவீதமாக வைத்திருக்க முடிவு செய்துள்ளது.