புஷ்பா - 2 திரைப்பட கூட்ட நெரிசலில் சிக்கி பெண் உயிரிழப்பு: நடிகர் அல்லு அர்ஜுன் மீது வழக்கு பதிவு

By என். மகேஷ்குமார்

ஹைதராபாத்: ஹைதராபாத்தில் புஷ்பா-2 திரைப்பட கூட்ட நெரிசலில் சிக்கி பெண் ஒருவர் உயிரிழந்தார். அவரது 9 வயது மகன் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

நடிகர் அல்லு அர்ஜுன் நடித்த புஷ்பா -2 திரைப்படம் நேற்று உலகம் முழுவதும் வெளியானது. தெலங்கானாவில் புதன்கிழமை இரவு 9.30 மணிக்கே பிரிமியர் ஷோக்கள் நடந்தன. இந்நிலையில் ஹைதராபாத் ஆர்டிசி கிராஸ் ரோடு அருகே உள்ள சந்தியா திரையரங்கில் பிரிமியம் ஷோவுக்கு புதன்கிழமை இரவு இப்படத்தின் நாயகன் அல்லு அர்ஜுன் வருவதாக அறிவிக்கப்பட்டது. இதனால் அவரை காணவும் அவருடன் அமர்ந்து சினிமா பார்க்கவும் கூட்டம் அலைமோதியது.

இந்நிலையில் தில்ஷுக் நகரை சேர்ந்த பாஸ்கர், அவரது மனைவி ரேவதி (39), இவர்களின் மகன்கள் ஸ்ரீதேஜ் (9), சன்விக் (7) ஆகிய 4 பேரும் புஷ்பா-2 படம் பார்க்க சந்தியா திரையரங்குக்கு வந்தனர். அதே சமயத்தில் அல்லு அர்ஜுனும் அங்கு வந்ததால் அவரை பார்க்க கூட்டம் அலைமோதியது. இதனால் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதையடுத்து அங்கிருந்த போலீஸார் கூட்டத்தை கலைக்க தடியடி நடத்தினர். இதில், ரேவதி, இவரது மகன் ஸ்ரீதேஜ் உள்ளிட்ட 3 பேர் தவறி கீழே விழுந்தனர். இவர்கள் மீது கூட்டம் ஏறி மிதித்து ஓடியது. இதில் காயம் அடைந்து உயிருக்கு போராடிய ரேவதி மற்றும் ஸ்ரீதேஜை அங்கிருந்தவர்கள் மீட்டு ஆந்திர மகிளா சபா மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை பலனின்றி ரேவதி உயிரிழந்தார். இவரது மகன் ஸ்ரீதேஜ் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

இதனிடையே முன்கூட்டியே பிரிமியர் ஷோவுக்கு அனுமதி வழங்கியதையும், அல்லு அர்ஜுன் இவ்வளவு கூட்டத்தில் ரசிகர்களிடையே அமர்ந்து திரைப்படத்தை காண வந்ததையும் பலர் கடுமையாக விமர்சித்து வருகின்றனர். அல்லு அர்ஜுனை கைது செய்ய வேண்டும், இறந்த பெண்ணின் குடும்பத்துக்கு அதிக இழப்பீடு வழங்க வேண்டும் எனவும் இவர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE