புதுடெல்லி: நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகளின் தொடர் முழக்கம் காரணமாக மக்களவை 9-வது நாளான நேற்று நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது.
அதானி விவகாரத்தில் நாடாளுமன்ற கூட்டுக் குழு விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன. அத்துடன் உ.பியில் சம்பல் பகுதியை பார்வையிட சென்ற மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் நடு வழியில் தடுத்து நிறுத்தப்பட்டது தொடர்பாகவும் விவாதிக்க வேண்டும் என கோரி எதிர்க்கட்சிகள் முழக்கமிட்டன. இதைத் தொடர்ந்து மக்களவை நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது.
மோடி-அதானி ஸ்டிக்கர் ஒட்டி போராட்டம்: அதானி விவகாரத்தில் விசாரணை கோரி வரும் எதிர்க்கட்சிகள் நேற்று வித்தியாசமான போரட்டத்தில் ஈடுபட்டனர். இண்டியா கூட்டணி கட்சி எம்.பி.க்கள் அதானியும் மோடியும் ஒன்று என்ற ஸ்டிக்கரை ஒட்டிக்கொண்டு, அதானியை பிரதமர் பாதுகாப்பதாக முழக்கமிட்டனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்த மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா, நாடாளுமன்ற உறுப்பினர்கள்
தேசியக் கொடியை தவிர வேறு எந்த பேட்ஜ்களையும் அணியக்கூடாது. இது, அவையின் விதிகளுக்கு எதிரானது என எம்.பி.க்களை எச்சரித்தார்.
» ஜார்க்கண்டில் 2 பெண்கள் உட்பட 11 அமைச்சர்கள் பதவியேற்பு
» இந்தியாவில் முதலீடு செய்வது லாபகரமானது: மேக் இன் இந்தியா திட்டத்துக்கு ரஷ்ய அதிபர் புதின் பாராட்டு
ராகுல் காந்தி தனது வெள்ளை நிறை டி-சர்ட்டின் பின்னால் இந்த ஸ்டிக்கரை ஒட்டிக்கொண்டு போராட்டத்தில் ஈடுபட்டார். அப்போது அவர் கூறுகையில், “ அதானி குழும தலைவர் கவுதம் அதானிக்கு எதிராக விசாரணை நடத்தினால், அது தனக்கு எதிராக திரும்பும் என்பதை பிரதமர் மோடி உணர்ந்துள்ளார். அதன் காரணமாகவே, விசாரணைக்கு உத்தரவிடாமல் அதானியை பிரதமர் பாதுகாத்து வருகிறார்" என்றார்.
மசோதா நிறைவேற்றம்: விமான போக்குவரத்து துறையில் மறுசீரமைப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வர்த்தகம் செய்வதை எளிதாக்கும் வகையில் பாரதிய வாயுயன் விதேயக் 2024 மசோதா கடந்த ஆகஸ்ட் மாதம் 9-ம் தேதி மக்களவையில் நிறைவேற்றப்பட்டது. இந்த நிலையி்ல் மாநிலங்களவையில் இந்த மசோதா குரல் வாக்கெடுப்பு மூலம் நேற்று நிறைவேறியது.