அமராவதி: ஆந்திராவில் ஜெகன்மோகன் ஆட்சியில் சந்திரபாபு நாயுடுவை கைது செய்த மூத்த ஐபிஎஸ் அதிகாரி என்.சஞ்சய், நிதி முறைகேடு செய்ததாக சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.
தெலுங்கு தேசம் கட்சி தலைவர் சந்திரபாபு நாயுடு, கடந்த ஜெகன்மோகன் ரெட்டி ஆட்சியில் இரவோடு இரவாக கைது செய்யப்பட்டார். ஆந்திர திறன் மேம்பாடு கழக நிதியில் முறைகேடு நடந்ததாக கடந்த ஆண்டு செப்டம்பரில் கர்னூலில் சந்திரபாபு கைது செய்யப்பட்டார். இவரை அப்போதைய சிஐடி கண்காணிப்பாளரும், மூத்த ஐபிஎஸ் அதிகாரியுமான என்.சஞ்சய் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினார்.
இந்நிலையில் கடந்த ஜெகன்மோகன் ஆட்சியில் சஞ்சய் பல்வேறு முறைகேடுகளில் ஈடுபட்டதாக வந்த புகார்களின் அடிப்படையில் அவற்றை விசாரிக்குமாறு விஜிலென்ஸ் அதிகாரிகளுக்கு தற்போதைய முதல்வர் சந்திரபாபு நாயுடு உத்தரவிட்டார்.
அதன்பேரில் விசாரணை நடத்திய அதிகாரிகள், "ஐபிஎஸ் அதிகாரி சஞ்சய், ஜெகன் ஆட்சியில் தீயணைப்பு படையின் மாநில அதிகாரியாக பணியாற்றியபோது, ரூ.1.19 கோடிக்கு முறைகேடு செய்ததற்கான ஆதாரங்கள் இருப்பதாக அறிக்கை தாக்கல் செய்தனர். அதன்பேரில், அகில இந்திய சிவில் சர்வீஸ் சட்டம் 3(1)-ன் கீழ் சஞ்சயை சஸ்பெண்ட் செய்வதாக ஆந்திர அரசு அறிவித்துள்ளது. மேலும் இந்த வழக்கு முடியும் வரை அவர் விஜயவாடா நகரை விட்டு எங்கும் செல்லக் கூடாது என உத்தரவிட்டுள்ளது.