புதுடெல்லி: வங்கி திருத்த மசோதா வாடிக்கையாளர் சேவையை மேம்படுத்தும் என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.
கடந்த மழைக்கால கூட்டத்தொடரின்போது ஆகஸ்ட் 9-ம் தேதி வங்கி சட்டங்கள் (திருத்தம்) மசோதா 2024, மக்களவையில் அறிமுகம் செய்யப்பட்டது. இந்த மசோதாவை தற்போதைய குளிர்கால கூட்டத் தொடரில் நிறைவேற்ற மத்திய அரசு திட்டமிட்டு உள்ளது. மசோதா குறித்து மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மக்களவையில் நேற்று பேசியதாவது:
வங்கி திருத்த மசோதா வாடிக்கையாளர் சேவையை மேம்படுத்தும். அதோடு வங்கிகளின் நிர்வாகத்தையும் மேம்படுத்தும். முதலீட்டாளர்களின் முதலீடுகளுக்கு பாதுகாப்பு வழங்கும்.
ரிசர்வ் வங்கி சட்டம் 1944-ல் முக்கிய திருத்தம் மேற்கொள்ளப்பட்டு இருக்கிறது. இதேபோல வங்கி சீர்திருத்த சட்டம் 1949-ல் 12 திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டு உள்ளன. எஸ்பிஐ சட்டம் 1955-ல் இரு திருத்தங்கள் செய்யப்பட்டு உள்ளன. ஒட்டுமொத்தமாக மசோதாவில் 19 முக்கிய திருத்தங்கள் செய்யப்பட்டு உள்ளன.
» மகாராஷ்டிர முதல்வர் இன்று தேர்வு: ஏக்நாத் ஷிண்டே - தேவேந்திர பட்னாவிஸ் ஆலோசனை
» அதானி விவகாரத்தை எழுப்பி மக்களவையில் இருந்து எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு
புதிய மசோதாவின்படி ஒரு வங்கிக் கணக்குக்கு 4 நியமனதாரர்களை நியமிக்க முடியும். அறிக்கையிடல் காலக்கெடு ஒவ்வொரு மாதமும் 15-ம் தேதி மற்றும் கடைசி நாளுக்கு மாற்றப்படும். கூட்டுறவு வங்கிகளில் முழுநேர இயக்குநர்களின் பதவிக் காலம் 8 ஆண்டுகளில் இருந்து 10 ஆண்டுகளாக அதிகரிக்கப்படும். தணிக்கையாளர்களுக்கான ஊதியத்தை வங்கி நிர்வாகங்களே முடிவு செய்து கொள்ளலாம்.
இவ்வாறு அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.