மகாராஷ்டிர முதல்வர் இன்று தேர்வு: ஏக்நாத் ஷிண்டே - தேவேந்திர பட்னாவிஸ் ஆலோசனை

By KU BUREAU

மும்பை: மகாராஷ்டிர சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக, ஏக்நாத் ஷிண்டேவின் சிவசேனா அணி, அஜித் பவாரின் தேசியவாத காங்கிரஸ் அணி அடங்கிய மகாயுதி கூட்டணி அமோக வெற்றி பெற்றது.

மகாராஷ்டிராவின் புதிய முதல்வராக, பாஜக மூத்த தலைவர் தேவேந்திர பட்னாவிஸை நியமிக்க அந்த கட்சி தலைமை முடிவு செய்திருப்பதாகக் கூறப்படுகிறது. இதற்கு ஏக்நாத் ஷிண்டே தரப்பு ஆட்சேபம் தெரிவித்ததால் புதிய அரசு பதவியேற்பதில் சிக்கல் நீடித்து வந்தது.

ஏக்நாத் ஷிண்டே அனைத்து நிகழ்ச்சிகளையும் ரத்து செய்து விட்டு தனது சொந்த கிராமமான சாத்தாராவுக்கு சென்றார். உடல்நலக் குறைவு காரணமாக வீட்டில் இருந்தபடியே அவர் சிகிச்சை பெற்று வந்தார். இந்த சூழலில் தானேவில் உள்ள மருத்துவமனையில் அவர் நேற்று அனுமதிக்கப்பட்டார்.

இதன்பிறகு மருத்துவமனையில் இருந்து நேராக அவர் மும்பைக்கு திரும்பினார். அப்போது அவர் நிருபர்களிடம் கூறும்போது, 'நான் நலமாக இருக்கிறேன்' என்று தெரிவித்தார். புதிய அமைச்சரவை குறித்து நிருபர்கள் கேள்வி எழுப்பியபோது, பதில் அளிக்க மறுத்துவிட்டார். இதைத் தொடர்ந்து மும்பையில் உள்ள வீட்டில் சிவசேனா எம்எல்ஏக்களுடன் ஷிண்டே நேற்றிரவு முக்கிய ஆலோசனை நடத்தினார். இதில் பல்வேறு முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

மும்பையில் இன்று காலை 10 மணிக்கு பாஜக எம்ஏக்களின் கூட்டம் நடைபெறுகிறது. இதில் கட்சியின் மேலிட பார்வையாளர்களாக மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமனும் குஜராத் முன்னாள் முதல்வர் விஜய் ருபானியும் பங்கேற்க உள்ளனர். இந்த கூட்டத்தில் பாஜக எம்எல்ஏக்களின் கருத்துகளை மேலிட பார்வையாளர்கள் தனித்தனியாக கேட்டறிய உள்ளனர். இதன் அடிப்படையில் புதிய முதல்வர் தேர்வு செய்யப்பட உள்ளார்.

மும்பை ஆசாத் மைதானத்தில் நாளை மாலை 5 மணிக்கு பாஜக கூட்டணி அரசு பதவியேற்பு விழா நடைபெறுகிறது. இந்த விழாவில் பாஜகவை சேர்ந்த மூத்த தலைவர், முதல்வராக பதவியேற்க உள்ளார். அஜித் பவார் அணி, ஏக்நாத் ஷிண்டே அணியில் இருந்து இரு துணை முதல்வர்கள் பதவியேற்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பிரதமர் நரேந்திர மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, பாஜக முதல்வர்கள், மத்திய அமைச்சர்கள் விழாவில் பங்கேற்க உள்ளனர்.

புதிய அமைச்சரவையில் பாஜக சார்பில் 22 பேர் அமைச்சர்களாகவும் ஷிண்டே அணியில் 12 பேர், அஜித்பவார் அணியில் 10 பேர் அமைச்சர்களாக பதவியேற்பார்கள் என்று தகவல்கள் வெளியாகி உள்ளன.

உள்துறை, நிதித் துறை உள்ளிட்ட முக்கிய இலாகாக்கள் பாஜக வசம் இருக்கும். சட்டப்பேரவைத் தலைவர் பதவியையும் பாஜகவே பெறும் என்று அந்த கட்சி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

டெல்லியில் அஜித் பவார்: தேசியவாத காங்கிரஸ் தலைவர் அஜித் பவார் டெல்லியில் நேற்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்தித்துப் பேசினார். அப்போது தனது கட்சியின் அமைச்சர்கள் பட்டியலை அமித் ஷாவிடம் அவர் வழங்கினார். இந்த சந்திப்பின்போது பாஜக மூத்த தலைவர் தேவேந்திர பட்னாவிஸ் காணொலி வாயிலாக தனது கருத்துகளை கூறியதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE