அதானி விவகாரத்தை எழுப்பி மக்களவையில் இருந்து எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு

By KU BUREAU

புதுடெல்லி: மீண்டும் அதானி விவகாரத்தை எழுப்பி காங்கிரஸ் தலைமையில் இண்டியா கூட்டணி கட்சியினர் மக்களவையிலிருந்து நேற்று வெளிநடப்பு செய்தனர்.

கடந்த நவம்பர் 25-ம் தொடங்கிய நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் டிசம்பர் 20-ம் தேதி வரை நடைபெற உள்ளது. நாடாளுமன்றம் தொடங்கியது முதற்கொண்டே அதானி விவகாரம், சம்பல் வன்முறை, மணிப்பூர் நிலவரம் ஆகிய பிரச்சினைகள் குறித்து நாடாளுமன்றத்தில் விவாதிக்க கோரி காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் தொடர்ச்சியாக அமளியில் ஈடுபட்டன. இதையடுத்து, இரண்டு அவைகளிலும் அலுவல் நடைபெறாமல் தொடர்ந்து ஒத்திவைக்கப்பட்டு வந்தது.

இந்த நிலையில், ஆறாவது நாளான திங்கள்கிழமை, மத்திய அரசும், எதிர்க்கட்சிகளும் நாடாளுமன்றத்தில் ஏற்பட்டுள்ள முட்டுக்கட்டையை சரி செய்வது தொடர்பாக பேச்சுவார்த்தையில் ஈடுபட்டன. அதன் பயனாக, அரசியலமைப்பு சட்டத்தின் மீதான விவாதத்தை மக்களவையில் டிசம்பர் 13 மற்றும் 14 தேதிகளிலும், மாநிலங்களவையில் டிசம்பர் 16 மற்றும் 17 தேதிகளிலும் நடத்துவதென ஒரு மனதாக முடிவு செய்யப்பட்டது.

இந்த நிலையில், அடுத்த நாளே அதானி விவகாரத்தை எழுப்பி மக்களவையிலிருந்து காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் நேற்று வெளிநடப்பு செய்து நாடாளுமன்றம் முன்பாக போராட்டத்தில் ஈடுபட்டன.

ஆனால், இண்டியா கூட்டணியில் அங்கம் வகிக்கும், மக்களவையில் மூன்று மற்றும் நான்காவது பெரிய கட்சிகளாக விளங்கும் சமாஜ்வாதி மற்றும் திரிணமூல் காங்கிரஸ் இந்த போரட்டத்தில் பங்கேற்கவில்லை.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE