அகர்தலா: அகர்தலாவில் உள்ள வங்கதேச துணைத் தூதரகத்தில் போராட்டக்காரர்கள் அத்துமீறி நுழைந்த சம்பவத்தில் 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 4 போலீஸார் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
திரிபுரா மாநிலம் அகர்தலாவில் வங்கதேச துணைத் தூதரகம் உள்ளது. இதன் முன்பு ஹிந்து சங்கர்ஷ் சமிதி அமைப்பினர் கடந்த திங்கட்கிழமை போராட்டம் நடத்தினர். வங்கதேசத்தில் இந்துக்கள் மீதான தாக்குதல்களை கண்டித்தும் இஸ்கான் முன்னாள் தலைவர் சின்மோய் கிருஷ்ண தாஸை விடுதலை செய்யக் கோரியும் இந்தப் போராட்டம் நடைபெற்றது. அப்போது இளைஞர்கள் சிலர் தூதரகத்தினுள் அத்துமீறி நுழைய முயன்றனர்.
இந்த சம்பவத்திற்கு திரிபுரா முதல்வர் மாணிக் சாகா கண்டனம் தெரிவித்தார். அமைதி வழியிலான போராட்டங்களை மட்டுமே அனுமதிக்க முடியும், இதுபோன்ற செயல்களை ஏற்க முடியாது என்று அவர் கூறினார்.
இந்நிலையில் இந்த சம்பவம் தொடர்பாக நியூ கேபிடல் காம்ப்ளக்ஸ் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டு 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மேலும் துணைத் தூதரக பாதுகாப்பு பணியில் அலட்சியமாக இருந்ததாக 3 சப்-இன்ஸ்பெக்டர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். போலீஸ் டிஎஸ்பி ஒருவர் காவல் துறை தலைமை அலுவலகம் வருமாறு பணிக்கப்பட்டுள்ளார்.
இந்த சம்பவம் தொடர்பாக மேற்கு திரிபுரா காவல் கண்காணிப்பாளர் கிரண் குமார் கூறுகையில், “இந்த சம்பவம் தொடர்பாக ஏற்கெனவே விசாரணையை தொடங்கிவிட்டோம். சட்டப்படி நடவடிக்கை எடுக்க உள்ளோம். துணைத் தூதரகத்தில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. மத்திய ரிசர்வ் போலீஸ் படை மற்றும் திரிபுரா மாநில ரைபில்ஸ் படை வீரர்கள் அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்" என்றார்.