சம்பல் மசூதி நிர்வாகத்தை ஒப்படைக்க கோரி நீதிமன்றத்தில் தொல்லியல் துறை மனு

By KU BUREAU

உத்தர பிரதேச மாநிலம் சம்பல் நகரில் முகலாயர் காலத்தில் கட்டப்பட்டதாக கூறப்படும் ஷாஹி ஜமா மசூதியை நிர்வகிக்கும் பொறுப்பை தங்களிடம் ஒப்படைக்க வேண்டும் என நீதிமன்றத்திடம் தொல்லியல் துறை அனுமதி கோரியுள்ளது.

சம்பல் ஜமா மசூதி அமைந்துள்ள இடம் கோயிலுக்கு சொந்தமானது எனவும், கோயிலை இடித்து அந்த மசூதி கட்டப்பட்டதாகவும் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

இதைத் தொடர்ந்து, நீதிமன்றத்தின் உத்தரவின் பேரில் நவம்பர் 24-ம் தேதி இந்திய தொல்லியல் துறையினர் ஜமா மசூதியை ஆய்வு நடத்த சென்ற போது வன்முறை வெடித்தது. அப்போது கலவரக்காரர்களை கட்டுப்படுத்த போலீஸார் நடத்திய துப்பாக்கி சூட்டில் 4 பேர் உயிரிழந்தனர். நூற்றுகணக்கானோர் காயமடைந்தனர்.

ஜமா மசூதி தொடர்பான ஆய்வறிக்கையை தொல்லியல் துறையின் சட்டப்பூர்வ பிரதிநிதி விஷ்ணு சர்மா நீதிமன்றத்தில் சமர்ப்பித்தார். அதில் கூறப்பட்டுள்ளதாவது:

ஜமா மசூதி 1920-ல் பாதுகாக்கப்பட்ட நினைவுச் சின்னமாக அறிவிக்கப்பட்டு இந்திய தொல்லியல் துறையின் (ஏஎஸ்ஐ) கீழ் கொண்டுவரப்பட்டது. ஏஎஸ்ஐ வழிகாட்டுதலின்படி பொதுமக்களின் அணுகலுக்கு அந்த மசூதி அனுமதிக்கப்பட வேண்டும். இந்த நிலையில், 2018 ஜனவரி 19-ல் ஜமா மசூதியின் நிர்வாக குழு, அங்கீகரிக்கப்படாத இரும்பு கட்டுமானங்களை மசூதிக்குள் நிறுவியது. இதுகுறித்து புகார் தெரிவிக்கப்பட்டதையடுத்து சட்ட நடவடிக்கையும் எடுக்கப்பட்டது. மசூதியின் நிர்வாக குழு அங்கீகரிக்கப்படாத பல மாற்றங்களை மசூதியில் செய்துள்ளது. இந்த சூழ்நிலையில், நினைவுச் சினனத்தின் மேலாண்மை மற்றும் கட்டமைப்பு மாற்றங்கள் மீது ஏஎஸ்ஐ தனது அதிகாரத்தை தக்க வைத்துக் கொள்ள வேண்டிய அவசியம் ஏற்பட்டு உள்ளது. எனவே, மசூதியின் கட்டுப்பாட்டையும், நிர்வாகத்தையும் தொல்லியல் துறையிடம் வழங்க அனுமதிக்க வேண்டும்.

இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த விவகாரம், விரைவில் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE