டெல்லி சட்டப்பேரவை தேர்தலில் ஆம் ஆத்மியுடன் கூட்டணி கிடையாது: காங்கிரஸ் திட்டவட்ட அறிவிப்பு

By KU BUREAU

டெல்லி சட்டப்பேரவைத் தேர்தலில் ஆம் ஆத்மியுடன் கூட்டணி அமைக்க மாட்டோம் என்று காங்கிரஸ் திட்டவட்டமாக அறிவித்துள்ளது.

கடந்த மக்களவைத் தேர்தலின்போது காங்கிரஸ், ஆம் ஆத்மி கட்சிகள் இண்டியா கூட்டணியில் இடம்பெற்றிருந்தன. இந்த சூழலில் அடுத்த ஆண்டு தொடக்கத்தில் நடைபெற உள்ள டெல்லி சட்டப்பேரவைத் தேர்தலில் இரு கட்சிகளும் எதிரெதிர் அணியில் போட்டியிட முடிவு செய்துள்ளன.

இதுகுறித்து டெல்லி காங்கிரஸ் தலைவர் தேவேந்தர் யாதவ் கூறியதாவது: டெல்லியில் 7 மக்களவைத் தொகுதிகள் உள்ளன. கடந்த மக்களவைத் தேர்தலின்போது காங்கிரஸும் ஆம் ஆத்மியும் கூட்டணி அமைத்து போட்டியிட்டன. காங்கிரஸ் 3 தொகுதிகளிலும் ஆம் ஆத்மி 4 தொகுதிகளிலும் வேட்பாளர்களை நிறுத்தின. ஆனால் 7 தொகுதிகளிலும் இண்டியா கூட்டணி தோல்வியை தழுவியது. இது ஒரு பாடமாக அமைந்தது.

அடுத்த ஆண்டு தொடக்கத்தில் நடைபெற உள்ள டெல்லி சட்டப்பேரவைத் தேர்தலில் மொத்தமுள்ள 70 தொகுதிகளிலும் காங்கிரஸ் தனித்துப் போட்டியிடும். ஆளும் ஆம் ஆத்மி அரசு மீது மக்களுக்கு அதிருப்தி ஏற்பட்டிருக்கிறது. இது தேர்தலில் எதிரொலிக்கும். வரும் பேரவைத் தேர்தலில் காங்கிரஸுக்கு வெற்றிவாய்ப்பு அதிகமாக இருக்கிறது. காங்கிரஸ் சார்பில் வேட்பாளர்களை தேர்வு செய்யும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. முதல்கட்டமாக மாவட்ட அளவில் வேட்பாளர் தேர்வு நடைபெறும். பின்னர் மத்திய குழு வேட்பாளர்களை இறுதி செய்யும். இவ்வாறு தேவேந்தர் யாதவ் தெரிவித்தார்.

கடந்த 2020-ம் ஆண்டு நடைபெற்ற டெல்லி சட்டப்பேரவைத் தேர்தலில் ஆம் ஆத்மி 62 தொகுதிகளில் வெற்றி பெற்றது. பாஜகவுக்கு 8 இடங்கள் கிடைத்தன. காங்கிரஸுக்கு ஓரிடம்கூட கிடைக்கவில்லை.

வரும் டெல்லி சட்டப்பேரவைத் தேர்தலில் ஆம் ஆத்மி, பாஜக, காங்கிரஸ் இடையே மும்முனை போட்டி ஏற்பட்டிருக்கிறது. ஆம் ஆத்மி சார்பில் அண்மையில் முதல் வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டது. இதில் 11 வேட்பாளர்கள் இடம் பெற்றுள்ளனர். அவர்களில் 6 பேர், பாஜக, காங்கிரஸில் இருந்து ஆம் ஆத்மிக்கு மாறியவர்கள் ஆவர்

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE