டங்ஸ்டன் சுரங்க உரிமையை உடனடியாக ரத்து செய்ய வேண்டும்: பிரதமர் மோடிக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்

By KU BUREAU

மதுரை மாவட்டத்தில் இந்துஸ்தான் ஜிங்க் நிறுவனத்துக்கு வழங்கப்பட்ட டங்ஸ்டன் சுரங்க உரிமையை உடனே ரத்து செய்ய வேண்டும். மாநில அரசின் அனுமதியின்றி சுரங்க உரிம ஏலங்களை நடத்த கூடாது என சுரங்க அமைச்சகத்துக்கு அறிவுறுத்த வேண்டும் என்று பிரதமர் மோடிக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.

இதுகுறித்து முதல்வர் ஸ்டாலின் நேற்று எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது: மதுரை மாவட்டத்தில் டங்ஸ்டன் சுரங்கம் அமைக்க மத்திய அரசு உரிமம் வழங்கியதால், அப்பகுதியில் பதற்றமான நிலை ஏற்பட்டுள்ளது. எனவே, தாங்கள் உடனடியாக தலையிட்டு, மத்திய அரசு வழங்கியுள்ள உரிமத்தை ரத்து செய்ய வேண்டும்.

மேலும், இதுபோன்ற முக்கியமான கனிமங்களின் சுரங்க உரிமங்களை மத்திய அரசு ஏலம் விடுவதால் ஏற்படும் பாதிப்புகள் குறித்த தமிழக அரசின் கவலைகளை, தமிழக நீர்வளத் துறை அமைச்சர் கடந்த ஆண்டு அக்டோபர் 3-ம் தேதி எழுதிய கடிதம் மூலமாக ஏற்கெனவே மத்திய அரசுக்கு தெரிவிக்கப்பட்டது. துரதிர்ஷ்டவசமாக, மத்திய நாடாளுமன்ற விவகாரங்கள், நிலக்கரி மற்றும் சுரங்கத் துறை அமைச்சர், கடந்த ஆண்டு நவம்பர் 2-ம் தேதி எழுதிய கடிதத்தில், ‘நாட்டின் நலன்களுக்காக, சுரங்க அமைச்சகத்தின் முக்கியமான கனிமங்களை ஏலம் விடுவதை தடுக்க முடியாது’ என்று குறிப்பிட்டு, தமிழக அரசின் கோரிக்கையை நிராகரித்திருந்தார்.

இதற்கிடையே, மதுரை மாவட்டம் நாயக்கர்பட்டியில் டங்ஸ்டன் சுரங்கம் அமைக்க இந்துஸ்தான் ஜிங்க் நிறுவனத்தை தகுதியான நிறுவனமாக தேர்வு செய்து மத்திய சுரங்கத் துறை கடந்த 7-ம் தேதி அறிவித்துள்ளது. இந்த பகுதியில் கவட்டையம்பட்டி, எட்டிமங்கலம், ஏ.வல்லாளபட்டி, அரிட்டாபட்டி, கிடாரிப்பட்டி, நரசிங்கம்பட்டி ஆகிய கிராமங்கள் உள்ளன. இதில் அரிட்டாபட்டி கிராமம் பல்லுயிர் பெருக்க வரலாற்று தலம். குடைவரை கோயில்கள், சிற்பங்கள், சமண சின்னங்கள், தமிழ் பிராமி எழுத்துகள், பஞ்சபாண்டவர் கல் படுக்கைகள் உள்ளிட்ட தொல்பொருள் நினைவு சின்னங்களுக்கு பிரபலமானது. இப்பகுதியில் எந்த சுரங்க நடவடிக்கை மேற்கொண்டாலும், ஈடுசெய்ய முடியாத அளவுக்கு சேதங்களை ஏற்படுத்தும்.

தவிர, மக்கள்தொகை அதிகம் உள்ள கிராமங்களில், வணிக ரீதியாக இதுபோன்று சுரங்கம் தோண்டுவது கண்டிப்பாக கிராம மக்களை வெகுவாக பாதிக்கும். இதனால் தங்கள் வாழ்வாதாரம் பறிபோய்விடுமோ என்ற அச்சத்தில் உள்ள அப்பகுதி மக்களுக்கு மத்திய அரசின் இந்த நடவடிக்கை மிகுந்த வேதனையை ஏற்படுத்தியுள்ளது. எனவே, இப்பகுதிகளில் இதுபோன்ற சுரங்கத் தொழிலை மேற்கொள்ள தமிழக அரசு ஒருபோதும் அனுமதிக்காது.

இதை கருத்தில் கொண்டு, மதுரை மாவட்டத்தில் இந்துஸ்தான் ஜிங்க் நிறுவனத்துக்கு வழங்கப்பட்ட டங்ஸ்டன் சுரங்க உரிமையை உடனே ரத்து செய்ய மத்திய சுரங்க அமைச்சகத்துக்கு உத்தரவிட வேண்டும். சம்பந்தப்பட்ட மாநில அரசின் அனுமதியின்றி சுரங்கம் தோண்டுவதற்கான ஏலங்களை விடக்கூடாது என்றும் சுரங்க அமைச்சகத்துக்கு அறிவுறுத்த வேண்டும். இவ்வாறு கடிதத்தில் முதல்வர் தெரிவித்துள்ளார்

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE