முஸ்லிம்களின் வாக்குரிமையை பறிக்க வேண்டும் என்று பேசிய கர்நாடக மடாதிபதி சந்திரசேகரநாத சுவாமி மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
கர்நாடகாவில் வக்ஃபு வாரிய சொத்து விவகாரத்தில் விவசாயிகளுக்கு நோட்டீஸ் அனுப்பியதைக் கண்டித்து பெங்களூருவில் நேற்று முன்தினம் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அதில் பங்கேற்ற ஒக்கலிக வகுப்பை சேர்ந்த மடாதிபதி சந்திரசேகரநாத சுவாமி பேசும்போது, ''கர்நாடகாவில் விஜயாப்புரா, யாதகிரி, மண்டியா, பெல்லாரி உள்ளிட்ட மாவட்டங்களை சேர்ந்த விவசாயிகள், வக்ஃபு வாரியத்துக்கு சொந்தமான நிலத்தை திரும்ப ஒப்படைக்குமாறு அரசு நோட்டீஸ் அனுப்பி உள்ளது. பிறரின் சொத்துகளை அபகரிப்பதுதான் உங்கள் மதம் போதித்த தர்மமா? முஸ்லிம்களின் ஓட்டுக்காவே அரசியல்வாதிகள் இத்தகைய அரசியல் இறங்கியுள்ளனர். இந்தியா முன்னேற வேண்டுமென்றால் முதலில் முஸ்லிம்களின் வாக்குரிமையை பறிக்க வேண்டும். அவ்வாறு செய்து விட்டால் யாரும் அவர்களுக்காக பேச மாட்டார்கள்'' என்றார்
அவரது பேச்சின் வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியது. காங்கிரஸாரும் முஸ்லிம் அமைப்பினரும் மடாதிபதிக்கு கடும் கண்டனம் தெரிவித்தனர். இதனையடுத்து மடாதிபதி சந்திரசேகரநாத சுவாமி அளித்த விளக்கத்தில், ''முஸ்லிம்கள் குறித்த எனது பேச்சு தவறாக புரிந்து கொள்ளப்பட்டுள்ளது. ஆவேசத்தில் வாய் தவறி பேசிவிட்டேன். எனது வார்த்தைகள் முஸ்லிம்களை காயப்படுத்தி இருந்தால் அதற்காக மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன். அவர்களிடம் எனது வருத்தத்தையும் தெரிவித்து கொள்கிறேன்'' என்று தெரிவித்தார்.
இந்நிலையில் பெங்களூருவை சேர்ந்த சமூக ஆர்வலர் புனித் குமார், ஒக்கலிகா மடாதிபதி சந்திரசேகரநாத சுவாமி மீது நடவடிக்கை எடுக்கக்கோரி உப்பார்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின்பேரில் போலீஸார், மடாதிபதி மீது பாரதிய நியாய சன்ஹிதாவின் பிரிவு 299 உட்பட 3 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர். இதற்கு ஒக்கலிகா அமைப்பினரும் பாஜகவினரும் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்
» உ.பி. சம்பல் மசூதியில் ஆய்வு நடத்த தற்காலிக தடை: உச்ச நீதிமன்றம் உத்தரவு
» எதிர்க்கட்சிகளின் அமளியால் 4-வது நாளாக நாடாளுமன்றம் முடக்கம்