புதுடெல்லி: ஓபிஎஸ் மீதான சொத்துக் குவிப்பு வழக்கில், மறு விசாரணைக்கு உத்தரவிட்ட சென்னை உயர் நீதிமன்ற உத்தரவுக்கு இடைக்கால தடைவிதித்து உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
2001 – 2006 காலக்கட்டத்தில் வருவாய்த் துறை அமைச்சராக இருந்தபோது, வருமானத்திற்கு அதிகமாக ஒரு கோடியே 77 லட்சம் ரூபாய் சொத்து சேர்த்ததாக, ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்டோர் மீது 2006-ம் ஆண்டில் தமிழ்நாடு லஞ்ச ஒழிப்புத்துறை வழக்குப்பதிவு செய்தது. இதனையடுத்து 2012-ம் ஆண்டு இந்த வழக்கில் ஆதாரங்கள் கிடைக்கவில்லை என சிவகங்கை நீதிமன்றம், வழக்கை ரத்து செய்து உத்தரவிட்டது.
இந்த நிலையில் 11 ஆண்டுகளுக்குப் பிறகு இந்த வழக்கை மீண்டும் மறுஆய்வுக்கு எடுத்த நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், ஓபிஎஸ் உள்ளிட்டோரை விடுவித்து சிவகங்கை நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்தார். வழக்கை மீண்டும் விசாரிக்கவும், மதுரை எம்.பி, எம்எல்ஏக்கள் சிறப்பு நீதிமன்றத்திற்கு அதன் விசாரணையை மாற்றி ஆணையிட்டார்.
இதனிடையே இந்த வழக்கு விசாரணைக்கு தடை விதிக்க கோரி, உச்ச நீதிமன்றத்தில் ஓ.பன்னீர் செல்வம் தரப்பு மனு தாக்கல் செய்தது. இந்த வழக்கு நீதிபதிகள் ரிஷிகேஷ் ராய் மற்றும் எஸ்.வி.என். பாட்டில் ஆகியோர் அடங்கிய அமர்வில் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.
» அதானி குழுமத்திடமிருந்து அதிக விலைக்கு மின்சாரம் வாங்குவது ஏன்? - திமுக அரசுக்கு அன்புமணி கேள்வி
» கோவாவில் திருமணம்: திருப்பதியில் சுவாமி தரிசனம் செய்த கீர்த்தி சுரேஷ் தகவல்!
அப்போது ஓ.பன்னீர் செல்வம் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் ஏற்கனவே முடித்து வைக்கப்பட்ட பல வழக்குகளை தாமாக முன்வந்து விசாரித்து வருகிறார். இது தொடர்பாக சிலர் உச்ச நீதிமன்றத்தை அணுகி நிவாரணம் பெற்றுள்ளனர். அந்த வகையில் தம் மீதான விசாரணைக்கு தடை விதிக்க வேண்டும் என்று ஓபிஎஸ் சார்பில் உச்ச தெரிவிக்கப்பட்டது.
இதனைக்கேட்ட உச்ச நீதிமன்ற நீதிபதிகள் சென்னை உயர்நீதிமன்ற உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டனர். இது தொடர்பாக தமிழக அரசு 4 வாரங்களில் பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை ஒத்திவைத்தனர்.