பாரம்பரிய கேரளா கசவு புடவை, கையில் அரசியல் சாசன புத்தகம்: வயநாடு எம்.பி.யாக பதவியேற்றார் பிரியங்கா

By KU BUREAU

புதுடெல்லி: முதல் முறையாக தேர்தலில் போட்டியிட்டு நாடாளுமன்றத்துக்குள் நுழைந்த காங்கிரஸ் பொது செயலர் பிரியங்கா காந்தி (52), அரசியல் சாசன புத்தகத்தை கையில் ஏந்தி வயநாடு தொகுதி மக்களவை எம்.பி.யாக நேற்று பதவியேற்றுக் கொண்டார். இவருக்கு, மக்களவை தலைவர் ஓம் பிர்லா பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.

சோனியா, ராகுல் காந்தி ஏற்கெனவே எம்.பி.யாக உள்ள நிலையில் ஒரே குடும்பத்தை சேர்ந்த மூன்றாவது எம்.பி.யாக பிரியங்கா காந்தி நாடாளுமன்றத்துக்குள் நுழைந்துள்ளார். தீவிர அரசியலில் ஈடுபட்டு 5 ஆண்டுகளுக்கு பிறகு தேர்தலில் போட்டியிட்ட அவர் தற்போது எம்.பி.யாக தேர்வாகியுள்ளார்.

பதவியேற்பு நிகழ்வின்போது, கேரள பாரம்பரியத்தை போற்றும் வகையில் கசவு புடவையை பிரியங்கா காந்தி அணிந்திருந்தார். பதவியேற்பு விழாவில், அவரது தாய் சோனியா காந்தி, கணவர் ராபர்ட் வதேரா, மகன் ரெய்ஹான், மகள் மிராயா கலந்துகொண்டனர்.

முன்னதாக, நாடாளுமன்றத்துக்குள் நுழைந்த பிரியங்காவுக்கு காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே உட்பட பல்வேறு கட்சி தலைவர்களும் வாழ்த்து தெரிவித்தனர். பதவியேற்புக்கு பிறகு தனது சகோதரரும், மக்களவை எதிர்க்கட்சி தலைவருமான ராகுல் காந்தியிடம் பிரியங்கா காந்தி வாழ்த்து பெற்றார். மகாராஷ்டிர மாநிலம் நாந்தேட் மக்களவை தொகுதி இடைத்தேர்தலில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டு வெற்றிபெற்ற ரவீந்திர சவான், மராத்தி மொழியில் பதவிப் பிரமாணம் எடுத்துக் கொண்டார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE