காங்கிரஸின் அதீத நம்பிக்கையால் மகாராஷ்டிராவில் தோற்றோம்:  உத்தவ் தாக்கரே சிவசேனா ஆதங்கம்

By KU BUREAU

மும்பை: மகாராஷ்டிராவில் காங்கிரஸின் அதிக நம்பிக்கை மற்றும் சீட்-பகிர்வு பேச்சுவார்த்தையின் போது அதன் அணுகுமுறை மகா விகாஸ் அகாடியின் வாய்ப்புகளை அழித்தது என்று சிவசேனா (யுபிடி) கட்சியின் மூத்த தலைவர் அம்பாதாஸ் தன்வே கூறினார்.

288 உறுப்பினர்களைக் கொண்ட மகாராஷ்டிரா சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக தலைமையிலான மகாயுதி 230 இடங்களைக் கைப்பற்றி அபார வெற்றி பெற்றது. மகா விகாஸ் அகாடி வெறும் 46 இடங்களை மட்டுமே பெற்றது.

இந்த சூழலில் மகாராஷ்டிர சட்ட மேலவையின் எதிர்க்கட்சித் தலைவரும், சிவசேனா( உத்தவ் தாக்கரே அணி) மூத்த தலைவருமான அம்பாதாஸ் தன்வே பேசுகையில், "மக்களவைத் தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு, ஹரியானா, ஜம்மு-காஷ்மீர், மகாராஷ்டிராவில் காங்கிரஸ் அதீத நம்பிக்கையுடன் இருந்தது. இது முடிவுகளில் பிரதிபலித்தது. சீட் பங்கீடு பேச்சுவார்த்தையின் போது அதன் அணுகுமுறை எங்களை காயப்படுத்தியது. உத்தவ் தாக்கரே முதல்வராக முன்னிறுத்தப்பட்டிருக்க வேண்டும். அப்படிச் செய்யாதது எங்கள் வாய்ப்புகளுக்குப் பாதிப்பை ஏற்படுத்தியது. அவர்கள் முடிவுகளுக்கு முன்பே சூட் மற்றும் டையுடன் தயாராகிவிட்டனர்" என்று கூறினார்.

மகாராஷ்டிராவில் மகா விகாஸ் அகாதி கூட்டணியில் அதிகபட்சமாக சில மாதங்களுக்கு முன்பு நடந்த மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் 13 இடங்களைக் கைப்பற்றியது. இதனால் உற்சாகமடைந்த நானா படோல் தலைமையிலான காங்கிரஸ், மாநிலத் தேர்தலுக்கு முன்னதாக நடைபெற்ற தொகுதிப் பங்கீட்டுப் பேச்சுவார்த்தையின் போது கடுமையாக பேரம் பேசியதால், கூட்டணிக்குள் உரசல் ஏற்பட்டது. இறுதியில், காங்கிரஸ் 103 இடங்களில் போட்டியிட்டு 16 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றது. 89 இடங்களில் போட்டியிட்ட சிவசேனா (உத்தவ் அணி) 20 இடங்களை கைப்பற்ற முடிந்தது. மூன்றாவது கூட்டணி கட்சியான சரத் பவாரின் என்சிபி 87 இடங்களில் போட்டியிட்டு 10 இடங்களில் வெற்றி பெற்றது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE