மகாராஷ்டிர புதிய முதல்வரை தேர்வு செய்வதில் பிரதமர் மோடியின் முடிவை ஏற்பேன் என சிவசேனா (ஏக்நாத்) தலைவர் ஏக்நாத் ஷிண்டே தெரிவித்துள்ளார்.
மகாராஷ்டிர சட்டப்பேரவைத் தேர்தலில் ஆளும் மகாயுதி கூட்டணி மொத்தம் உள்ள 288-ல் 230 இடங்களில் வெற்றி பெற்று ஆட்சியை தக்கவைத்தது. இக்கூட்டணியில் இடம்பெற்றுள்ள பாஜக 132 இடங்களில் வென்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்தது. சிவசேனா (ஷிண்டே) 57, தேசியவாத காங்கிரஸ் (அஜித் பவார்) 41 இடங்களில் வெற்றி பெற்றன.
இந்நிலையில், முதல்வர் பதவியை மீண்டும் ஏக்நாத் ஷிண்டேவுக்கே வழங்க வேண்டும் என அவரது கட்சியினர் வலியுறுத்தி வருவதாகக் கூறப்படுகிறது. ஆனால், தனிப்பெரும் கட்சியாக பாஜக விளங்குவதால் அக்கட்சியின் தேவேந்திர பட்னாவிஸை முதல்வராக்க பாஜக விரும்புவதாகக் கூறப்படுகிறது. ஆட்சி அமைக்க 145 இடங்கள் தேவை என்ற நிலையில் பாஜகவுக்கு மேலும் 13 இடங்கள் மட்டுமே தேவைப்படுகிறது.
அதேநேரம், பாஜக ஆட்சி அமைக்க அஜித் பவார் கட்சி ஆதரவு அளிக்க முன்வந்துள்ளது. இதனால், ஷிண்டேவின் சிவசேனா ஆதரவு இல்லாவிட்டாலும் பாஜகவால் ஆட்சி அமைக்க முடியும். இதனிடையே, புதிய முதல்வரை தேர்வு செய்வது தொடர்பாக பாஜக மேலிடம் தீவிர ஆலோசனை நடத்தி வருகிறது. இதனால், முதல்வரை தேர்ந்தெடுப்பதில் இழுபறி நீடித்து வருகிறது. இந்நிலையில், ஏக்நாத் ஷிண்டே நேற்று முன்தினம் முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார்.
» சாதி பாகுபாடின்றி பொதுவாக பணியாற்றுங்கள்: புதிய காவலர்களுக்கு முதல்வர் ஸ்டாலின் அறிவுரை
இந்நிலையில், ஏக்நாத் ஷிண்டே நேற்று செய்தியாளர்களிடம் கூறும்போது, “பிரதமர் மோடி மற்றும் மத்திய அமைச்சர் அமித் ஷாவுடன் நான் தொலைபேசியில் தொடர்புகொண்டு பேசினேன். அப்போது, மகாராஷ்டிராவில் புதிய அரசு அமைவது தொடர்பாக எந்த முடிவு எடுத்தாலும் அதற்கு நான் தடையாக இருக்க மாட்டேன் என கூறிவிட்டேன். இந்த விவகாரத்தில் பாஜக மேலிடம் எடுக்கும் முடிவுக்கு சிவசேனா ஆதரவு அளிக்கும். எங்கள் குடும்பத்தின் தலைவர் மோடிதான். உங்கள் (மோடி) முடிவை பாஜகவினர் ஏற்பது போல நாங்களும் ஏற்போம். முதல்வர் பதவியை ஏற்றது முதல் ஒரு நாள் கூட நான் விடுப்பு எடுக்கவில்லை. என்னுடைய இறுதி மூச்சு இருக்கும் வரை மாநில மக்களுக்காக உழைப்பேன்” என்றார்.
விரைவில் முடிவு: மகாராஷ்டிர துணை முதல்வரும் பாஜக மூத்த தலைவருமான தேவேந்திர பட்னாவிஸ் கட்சியின் மேலிட தலைவர்களை சந்தித்து பேச உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்நிலையில் அவர் நேற்று செய்தியாளர்களிடம் கூறும்போது, “புதிய முதல்வர் யார் என்ற கேள்விக்கு விரைவில் பதில் கிடைக்கும். மகாயுதி கூட்டணியில் உள்ள 3 கட்சிகளைச் சேர்ந்த மூத்த தலைவர்கள் இணைந்து இது தொடர்பாக இறுதி முடிவு எடுப்பார்கள்” என்றார்