புதுடெல்லி: தெலங்கானா மாநிலத்தில் சாதிவாரி கணக்கெடுப்பு பணிகள் 92 சதவீதம் முடிந்துவிட்டதாக அம்மாநில முதல்வர் ரேவந்த் ரெட்டி அறிவித்துள்ளார். இது சமூக நீதியை முன்னெடுப்பதில் காங்கிரஸ் கட்சியின் உறுதிப்பாட்டை மீண்டும் உறுதிப்படுத்துகிறது என்று கூறினார்.
அரசியலமைப்பு தினமான நேற்று டெல்லியின் தல்கடோரா ஸ்டேடியத்தில் நடந்த சம்விதன் ரக்ஷா அபியான் நிகழ்ச்சியில் பேசிய ரேவந்த் ரெட்டி, “கல்வி, வேலைவாய்ப்பு மற்றும் பிற்படுத்தப்பட்டோருக்கான இடஒதுக்கீடு போன்ற உரிமைகளை உறுதி செய்வதில் அரசியலமைப்பு பங்கு வகிக்க வேண்டும். பண்டிட் ஜவஹர்லால் நேரு, பாபாசாகேப் அம்பேத்கர், இந்திரா காந்தி போன்ற தலைவர்கள் இதற்காக பல பங்களிப்புகளை செய்துள்ளனர். விவசாய உச்சவரம்புச் சட்டத்தின் மூலம் ஏழைகளுக்கு நிலம் வழங்குவது முதல் கல்வி மற்றும் வாக்குரிமை மூலம் மக்களுக்கு அதிகாரம் அளிப்பது வரை காங்கிரஸ் கட்சி எப்போதும் சமூக நீதிக்கு துணை நிற்கிறது.
மண்டல் கமிஷன் மற்றும் உள்ளாட்சி நிர்வாகத்தில் பெண்களுக்கான இடஒதுக்கீட்டை அமல்படுத்துதல் உள்ளிட்டவற்றை ராஜீவ் காந்தி முதல் பி.வி.நரசிம்மராவ் வரை செய்தனர். அதேபோல, சாதிவாரி மக்கள்தொகைக் கணக்கெடுப்பில் காங்கிரஸ் தலைவர்கள் சோனியா காந்தி, மல்லிகார்ஜுன் கார்கே, மற்றும் ராகுல் காந்தி ஆகியோருக்கு பங்குண்டு. அனைவருக்கும் உரிமைகள் சமமாக விநியோகிக்கப்படுவதற்கு இத்தகைய நடவடிக்கைகள் அவசியம். தெலங்கானாவில் சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்படும் என ராகுல் காந்தி உறுதியளித்தார். இப்போது நாங்கள் 92 சதவீத பணிகளை முடித்துள்ளோம்.
அரசியலமைப்பு கொள்கைகளை பாஜக புறக்கணிக்கிறது. நாட்டில் இரண்டு குடும்பங்கள் உள்ளன. அரசியலமைப்பை அழிக்க முயலும் மோடியின் குடும்பம் மற்றும் அதைப் பாதுகாக்கப் போராடும் ராகுல் காந்தியின் குடும்பம். எனவே அரசியல் சட்டப் பாதுகாப்பிற்கான இயக்கத்தில் மக்களை பங்கேற்க வேண்டும்” என்றார்