அரசுப் பேருந்துகளில் இருந்து குட்கா, மதுபான விளம்பரங்கள் நீக்கப்படும்: இமாச்சலப் பிரதேச அரசு அறிவிப்பு

By KU BUREAU

சிம்லா: அரசுப் பேருந்துகளில் இருந்து குட்கா மற்றும் மதுபான விளம்பரங்களை அகற்ற முடிவு செய்துள்ளதாக இமாச்சலப் பிரதேச துணை முதல்வரும், போக்குவரத்து அமைச்சருமான முகேஷ் அக்னிஹோத்ரி அறிவித்தார். இமாச்சல் சாலைப் போக்குவரத்துக் கழகத்தின் (HRTC) சமீபத்திய இயக்குநர்கள் குழு (BOD) கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டது.

சிம்லாவில் செய்தியாளர் சந்திப்பில் பேசிய துணை முதல்வர் அக்னிஹோத்ரி, “சுமார்1,000 பழைய பேருந்துகளை மாற்றுவதன் மூலம் இமாச்சல் சாலைப் போக்குவரத்துக் கழகத்தை நவீனமயமாக்க திட்டமிட்டுள்ளோம். இதில் 327 மின்சார பேருந்துகள், 250 சிறிய பேருந்துகள் மற்றும் 100 மினி டெம்போ பேருந்துகள் இணைகிறது. ஒரே ஏலதாரர் காரணமாக 24 வோல்வோ பேருந்துகளுக்கான டெண்டர்கள் நிராகரிக்கப்பட்டுள்ளது.

அரசுப் பேருந்துகளில் இருந்து குட்கா மற்றும் மதுபான விளம்பரங்களை அகற்றும் முடிவு, போதைப் பழக்கத்தை கட்டுப்படுத்தி ஆரோக்கியமான சமுதாயத்தை மேம்படுத்துவதற்கான அரசின் பெரிய முயற்சியின் ஒரு பகுதியாகும். மக்கள் நலனுக்கு முன்னுரிமை அளிப்பது, சேவைகளை மேம்படுத்துவது மற்றும் மாநிலத்தின் போக்குவரத்து உள்கட்டமைப்பை வலுப்படுத்துவது போன்றவற்றை நோக்கமாகக் கொண்டு இந்த மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.

விவசாயிகள் பால் மற்றும் காய்கறிகளை கொண்டு செல்வதற்கான லக்கேஜ் கட்டணத்தில் இருந்து விலக்கு அளிக்கப்படுகிறது. இந்த நடவடிக்கை கிராமப்புற பொருளாதாரத்தை ஆதரிக்கவும், விவசாயத் துறையை மேம்படுத்தவும் வடிவமைக்கப்பட்டுள்ளது. விவசாயிகள் தங்கள் விளைபொருட்களை சந்தைக்குக் கொண்டு வரவும், அதன் மூலம் மாநிலத்தின் பொருளாதாரத்தை வலுப்படுத்தவும் இந்த திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளோம்.

ஹெச்ஆர்டிசி பேருந்துகளில் கிரெடிட், டெபிட், யுபிஐ மற்றும் நேஷனல் மொபிலிட்டி கார்டு அமைப்புகள் உள்ளிட்ட மேம்பட்ட தொழில்நுட்பங்களை அறிமுகப்படுத்தியுள்ளோம். இந்தியாவில் இதுபோன்ற நடவடிக்கைகளை செயல்படுத்தும் முதல் மாநிலம் இமாச்சலப் பிரதேசம் ஆகும். இது தினமும் கிட்டத்தட்ட ஐந்து லட்சம் பயணிகளுக்கு சேவையை வழங்குகிறது" என்று அவர் கூறினார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE