பதவி விலகினார் ஏக்நாத் ஷிண்டே: மகாராஷ்டிரா புதிய முதல்வர் பற்றி பாஜக மேலிடம் ஆலோசனை

By KU BUREAU

மும்பை: ம​காராஷ்டிரா​வில் 288 சட்டப்​பேரவை தொகு​திகள் உள்ளன. ஆட்சி அமைக்க 145 இடங்கள் தேவை. இந்நிலை​யில் கடந்த 20-ம் தேதி நடைபெற்ற தேர்​தலில் பாஜக, ஷிண்டே தலைமையிலான சிவசேனா, அஜித் பவாரின் தேசி​யவாத காங்​கிரஸ் ஆகிய கட்சிகள் மகாயுதி கூட்டணி 230 இடங்களை கைப்​பற்றியது. இதில் பாஜக 149 தொகு​தி​களில் போட்​டி​யிட்டு 132 தொகு​தி​களைக் கைப்பற்றியது, சிவசேனா 57, தேசி​யவாத காங்​கிரஸ் (அஜித்) 41 இடங்​களி​லும் வெற்றியை பதிவு செய்தன.

சிவசேனா (உத்​தவ்), சரத் பவாரின் தேசி​யவாத காங்​கிரஸ், காங்​கிரஸ் ஆகிய கட்சிகள் அடங்கிய மகாவி​காஸ் அகாடி கூட்டணி ஒட்டுமொத்​தமாக 46 இடங்களை மட்டுமே பெற்று படுதோல்​வியை சந்தித்​தது. வெற்றியை தொடர்ந்து மகாராஷ்டிர பாஜக​வின் முகமாக இருக்​கும் தேவேந்திர பட்னா​விஸ் முதல்வர் பதவியை ஏற்பார் என்றும், சிவசேனா மற்றும் தேசி​யவாத காங்​கிரஸ் கட்சிகளுக்கு தலா ஒரு துணை முதல்வர் வழங்​கும் என்றும் பாஜக வட்டாரங்கள் தெரிவிக்​கின்றன. ஆனால் ஏக்நாத் ஷிண்டே முதல்வர் பதவி​யில் நீடிக்க வேண்​டும் என்று சிவசேனா கட்சி​யின் மூத்த தலைவர்கள் விரும்​பு​கின்​றனர்.

இந்நிலை​யில், நேற்று முன்​தினம், தேவேந்திர பட்னா​விஸ் டெல்​லிக்​குச் சென்று மத்திய அமைச்சர் அமித் ஷா உள்ளிட்​டோருடன் ஆலோசனை நடத்​தி​யுள்​ளார். பின்னர் அவர் நேற்று காலை மும்பை திரும்​பினார். இதனிடையே, முதல்வர் ஏக்நாத் ஷிண்டே, துணை முதல்​வர்கள் தேவேந்திர பட்னா​விஸ், அஜித் பவார் உள்ளிடோர் மும்​பை​யில் உள்ள ராஜ்பவனில் மாநில ஆளுநர் சி.பி.ரா​தாகிருஷ்ணனை நேரில் சந்தித்​தனர். அப்போது முதல்வர் பதவியை ராஜினாமா செய்​வ​தாகக் கூறி ராஜினாமா கடிதத்தை ஆளுநரிடம், ஷிண்டே வழங்​கினார்.

இதைத்தொடர்ந்து புதிய அரசு பதவி​யேற்கும் வரை காபந்து முதல்​வராக நீடிக்​கு​மாறு ஷிண்​டேவை, ஆளுநர் கேட்டுக் கொண்​டார். அதிக இடங்​களில் வெற்றி, பட்னா​விஸுக்கு பெரு​கும் ஆதரவு போன்ற காரணங்​களால் அவருக்கே முதல்வர் பதவி வழங்​கப்​படும் என்று எதிர்​பார்க்​கப்​படு​கிறது. இதுதொடர்பாக ம​கா​யுதி கூட்​ட​ணித் தலை​வர்​களு​டன் பாஜக மேலிடம் ஆலோசனை நடத்துகிறது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE