டெல்லி பல்கலைக்கழக மாணவர் சங்கத் தேர்தல்: காங்கிரஸ் மாணவர் சங்கம் வெற்றி!

By KU BUREAU

புதுடெல்லி: காங்கிரஸின் இந்திய தேசிய மாணவர் சங்கத்தின் (NSUI) குறிப்பிடத்தக்க வெற்றியாக, ஏழு ஆண்டு இடைவெளிக்குப் பிறகு டெல்லி பல்கலைக்கழக மாணவர் சங்கத் தேர்தலில் காங்கிரஸ் ஆதரவுடைய மாணவர் சங்கம் மீண்டும் வெற்றி பெற்றது.

இந்திய தேசிய மாணவர் சங்கம் தலைவர் உட்பட இரண்டு முக்கிய பதவிகளை வென்றாலும், பாஜக சார்பு அமைப்பான ஏபிவிபி மாணவர் சங்கம் துணைத் தலைவர் பதவியை வென்றதுடன், செயலாளர் பதவியையும் தக்க வைத்துக் கொண்டது.

டெல்லி பல்கலைக்கழக மாணவர் சங்கத் தேர்தலில் இந்திய தேசிய மாணவர் சங்கத்தின் ரவுனக் காத்ரி தலைவர் பதவிக்கு போட்டியிட்டு வெற்றி பெற்றார். ஆர்எஸ்எஸ் ஆதரவு அகில பாரதிய வித்யார்த்தி பரிஷத்தின் (ஏபிவிபி) ரிஷப் சவுத்ரியை 1,300 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார். டெல்லி பல்கலைக்கழகத்தின் புதிய தலைவராக வெற்றிபெற்ற காத்ரி 20,207 வாக்குகளையும், சவுத்ரி 18,864 வாக்குகளையும் பெற்றனர்.

ஏபிவிபியின் துணைத் தலைவர் வேட்பாளர் பானு பிரதாப் சிங் 24,166 வாக்குகளும், என்எஸ்யுஐயின் யாஷ் நந்தல் 15,404 வாக்குகளும் பெற்றனர். கூடுதலாக, ஏபிவிபியின் மித்ரவிந்த கரன்வால் 16,703 வாக்குகள் பெற்று என்எஸ்யுஐயின் நம்ரதா ஜெப் மீனாவை தோற்கடித்து செயலாளர் பதவியை வென்றார்.

தேர்தல் முடிவுகள் வெளியான உடனேயே காங்கிரஸின் மாணவர் பிரிவைச் சேர்ந்தவர்கள் பெருமளவில் கூடி, முழக்கங்களை எழுப்பி, தங்கள் தலைவர்களை வாழ்த்தி கொண்டாட்டங்களை தொடங்கினர். ஏபிவிபியின் 10 கால ஆதிக்கத்திற்குப் பிறகு டெல்லி பல்கலைக்கழகத்தின் செல்வாக்குமிக்க மாணவர் அமைப்பில் காங்கிரஸ் கட்சியின் மாணவர் சங்கம் வெற்றி பெற்றுள்ளது.

டெல்லி பல்கலைக்கழக மாணவர் சங்கம் என்பது பல்கலைக்கழகத்தின் உறுப்பு கல்லூரிகள், அமைப்புகள் மற்றும் கற்பித்தல் துறைகளைச் சேர்ந்த மாணவர்களுக்கான பிரதிநிதி அமைப்பாகும். டெல்லி பல்கலைக்கழக மாணவர் சங்கத்தின் பதவிகாலம் ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் 16 முதல் அடுத்த ஆண்டு ஆகஸ்ட் 15 வரை இருக்கும்.

டெல்லி பல்கலைக்கழக மாணவர் சங்க தேர்தல் முடிவுகள் முதலில் செப்டம்பர் 28 அன்று, தேர்தலுக்கு ஒரு நாள் கழித்து அறிவிக்க திட்டமிடப்பட்டது, ஆனால் டெல்லி உயர் நீதிமன்ற உத்தரவு காரணமாக தாமதமானது. தேர்தல் பிரசாரத்தின் போது ஏற்பட்ட குளறுபடிகளை அகற்றும் வரை தேர்தல் முடிவுகளை வெளியிட நீதிமன்றம் தடை விதித்தது.

டெல்லி பல்கலைக்கழக மாணவர் சங்கத்தின் நான்கு பதவிகளுக்கான தேர்தலில் 21 வேட்பாளர்கள் பங்கேற்றனர். தலைவர் பதவிக்கு 8 பேரும், துணைத் தலைவர் பதவிக்கு 5 பேரும், செயலாளர் மற்றும் இணைச் செயலாளர் பதவிக்கு தலா 4 பேரும் போட்டியிட்டனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE