லக்னோ: உத்தரப் பிரதேசத்தின் சம்பல் நகரில் வெடித்த திடீர் கலவரத்தில் 4 பேர் உயிரிழந்தனர். அங்கே பள்ளிகளுக்கு விடுமுறை, இணைய சேவை முடக்கம், போலீஸ் பாதுகாப்பு என பதற்றமான சூழல் நிலவுகிறது. சம்பலில் என்னதான் நடக்கிறது?. சர்ச்சைக்குரிய ஜமா மசூதி ஆய்வு விவகாரத்தால் சம்பல் பகுதியில் பதற்றம் அதிகரிப்பதன் பின்னணி என்ன?
உத்தரப் பிரதேச மாநிலம் சம்பல் நகரில் ஜமா மசூதி கட்டப்படுவதற்கு முன்பாக அந்த இடத்தில் இந்து கோயில் இருந்ததாகவும், எனவே அந்த இடத்தில் ஆய்வு நடத்தி உண்மை தன்மையை சரிபார்க்க கோரியும் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இதையடுத்து, அந்த மசூதியில் ஆய்வு நடத்த நீதிமன்றம் உத்தரவிட்டது. இதைத்தொடர்ந்து, தொல்லியல் துறை அதிகாரிகள் ஆய்வு மேற்கொள்வதற்காக சம்பல் பகுதியில் உள்ள ஜமா மசூதிக்கு ஞாயிற்றுக்கிழமை காலை சென்றனர்.
அப்போது, அங்கு கூடியிருந்த மக்கள், மசூதியில் ஆய்வு நடத்துவதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இருப்பினும், நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் மசூதியை ஆய்வு செய்வதில் அதிகாரிகள் உறுதியாக இருந்தனர். இதையடுத்து, அந்தப் பகுதியில், போராட்டக்காரர்களுக்கும், பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீஸாருக்கும் இடையே மோதல் வெடித்தது.
நடந்தது என்ன என்பதை மொரதாபாத் மண்டல ஆணையர் ஆஞ்சநேய குமார் சிங், “ஒரு வழக்கறிஞர் தலைமையில் தொல்லியல் ஆய்வுக் குழு பணியை தொடங்கியபோது, மசூதிக்கு அருகில் கூடிய கூட்டம், அதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தது. அப்போது, ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கூடிய நிலையில், மசூதிக்குள் போலீஸார் நுழைவதை அந்த கும்பல் தடுக்க முயன்றது.
» கடந்த 10 ஆண்டுகளில் 853 ஐஆர்எஸ் அதிகாரிகள் விருப்ப ஓய்வு: வெளியான ஷாக் தகவல்
» முதல் நாளிலேயே அனல் பறந்த அதானி விவகாரம்: நாடாளுமன்றம் நாள் முழுவதும் ஒத்திவைப்பு
அப்போது, கூட்டத்தில் இருந்த சிலர் போலீஸாரை நோக்கி கற்களை வீசி தாக்குதல் நடத்த தொடங்கினர். பத்துக்கும் மேற்பட்ட வாகனங்களுக்கு அந்த கும்பல் தீவைத்து வன்முறையில் ஈடுபட்டது. இதையடுத்து, கலவரத்தை கட்டுப்படுத்த போலீஸார் கண்ணீர் புகை குண்டுகளை வீசி கும்பலை கலைத்தனர்.
இந்த வன்முறை சம்பவத்தில் 3 பேர் உயிரிழந்தனர். 30-க்கும் மேற்பட்ட போலீஸார் காயமடைந்தனர். உயிரிழந்தவர்கள் உள்ளூரை சேர்ந்த நயீம், பிலால், நவ்மன் என்று அடையாளம் காணப்பட்டுள்ளது. ஜமா மசூதி அமைந்துள்ள பகுதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது” என்று தெரிவித்தார்.
இந்தக் கலவரத்தைத் தொடர்ந்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சம்பல் பகுதியில் 24 மணி நேரத்துக்கு இணைய சேவை துண்டிக்கப்பட்டுள்ளது. பனிரெண்டாம் வகுப்பு வரை அனைத்து பள்ளிகளுக்கும், கல்லூரிகளுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. பொதுக் கூட்டங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
மக்கள் கற்கள், சோடா பாட்டில்கள் அல்லது வெடிக்கக் கூடிய பொருட்களை வாங்க, பதுக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. சம்பல் பகுதிக்குள் வெளியாட்கள், சமூக அமைப்புகளைச் சார்ந்தோர், மக்கள் பிரதிநிதிகள் முன் அனுமதியின்றி வரக்கூடாது என தடை விதிக்கப்பட்டுள்ளது.
சம்பல் கலவரம் தொடர்பாக 2 பெண்கள் உள்பட 25 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக உள்ளூர் காவல் துறை தெரிவித்துள்ளது. கலவரம் தொடர்பாக நீதிபதி விசாரணை நடத்தப்படும் என்றும், கலவரத்தில் தொடர்புடையோர் மீது தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கிழ் வழக்கு பதிவு செய்யப்படும் என்றும் அதிகாரிகள் தரப்பில் தெரிவித்துள்ளனர்.
மேலும், இந்த விவகாரம் தொடர்பாக 400 பேர் மீது ஏழு வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. சம்பலின் சமாஜ்வாதி கட்சி எம்.பி., ஜியாவுர் ரஹ்மான் பார்க் மற்றும் அவரது கட்சி சகாவான இக்பால் மஹ்மூத்தின் மகன் நவாப் சுஹைல் இக்பால் ஆகியோர் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
"சதித்திட்டத்தின் ஒரு பகுதியாக முஸ்லிம்கள் குறிவைக்கப்பட்டு கொல்லப்பட்டனர். சம்பலில் நடந்த கல் வீச்சு சம்பவம் அரசாங்கத்தால் செய்யப்பட்ட கலவரம். சம்பவத்தின் போது எங்கள் எம்.பி. ஜியாவுர் ரஹ்மான் சம்பலில் கூட இல்லை. இருந்த போதிலும் அவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. எங்களிடம் உள்ள அனைத்து வீடியோக்களிலும், இது அரசாங்கத்தின் கலவரம் என்று எங்களுக்குத் தெரியும். தேர்தல் முறைகேடுகளில் இருந்து கவனத்தைத் திசைதிருப்ப இந்த வன்முறையைத் திட்டமிட்டுள்ளனர்” என்றார்
இது தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல்காந்தி, "நிர்வாகம் அனைத்து தரப்பு கருத்துகளையும் கேட்கவில்லை. உணர்ச்சியற்ற முறையில் செயல்பட்டது. இது சூழலைக் கெடுத்து, மரணங்களுக்கு வழிவகுத்தது, இதற்கு பாஜகதான் பொறுப்பு. இந்துக்களுக்கும் முஸ்லிம்களுக்கும் இடையே பிளவை பாஜக உருவாக்கி வருகிறது. இது மாநிலத்திற்கோ அல்லது நாட்டுக்கோ நல்லது அல்ல. அமைதி மற்றும் நல்லிணக்கத்திற்கு முயல வேண்டும். இந்த விவகாரத்தில் உச்ச நீதிமன்றம் விரைவில் தலையிட வேண்டும்” என்று கேட்டுக்கொள்கிறேன்.
காங்கிரஸ் எம்.பி. பிரியங்கா காந்தி, “சம்பலில் ஏற்பட்ட பதற்றத்திற்கு மாநில அரசாங்கமே பொறுப்பு. இவ்விவகாரத்தில் உச்ச நீதிமன்றம் தலையிட வேண்டும். எப்படியேனும் அமைதி காக்குமாறு மக்களிடம் நான் கேட்டுக்கொள்கிறேன்” என்று அவர் கூறினார்.
உத்தரப் பிரதேச அரசின் முன்னெச்சரிக்கை நடவடிக்கையின் காரணமாக, சம்பல் நகரில் அமைதி திரும்பும் என எதிர்பார்க்கப்படுகிறது.