வாஷிங்டன்: பிஹார் உண்மையில் தோல்வியடைந்த மாநிலம் என்றும், அதன் அனைத்துத் துறை வளர்ச்சிக்கும் மிகப்பெரிய முயற்சிகள் தேவை என்றும் ஜன் சுராஜ் தலைவர் பிரசாந்த் கிஷோர் கூறியுள்ளார்.
ஜன் சுராஜ் கட்சியின் அமெரிக்க பிரிவு தொடங்கப்பட்ட பிறகு பீஹாரி புலம்பெயர் சமூகத்துடன் காணொலி மூலமாக பேசிய பிரசாந்த் கிஷோர், “பிஹார் ஒரு நாடாக இருந்தால், அது உலகின் 11 வது பெரிய நாடாக இருக்கும். மக்கள் தொகை அடிப்படையில் நாம் ஜப்பானை முந்தியுள்ளோம். ஆனால், பிஹாரின் நிலைமையை மேம்படுத்துவதில் சமூகம் "நம்பிக்கையற்றதாக" மாறியிருப்பது மிகப்பெரிய சவாலாக உள்ளது. நீங்கள் நம்பிக்கையற்றவர்களாக மாறும்போது, உடனடி உயிர்வாழும் தேவைகள் மிகவும் அதிகமாகிவிடுகின்றன.
இருப்பினும், நாம் அனைத்தையும் இழக்கவில்லை.
கடந்த இரண்டரை ஆண்டுகளாக நாங்கள் பிஹாரில் பணி செய்து வருவதால் சில நம்பிக்கைகள் நிச்சயமாக உள்ளன. ஆனால் இதை ஒரு உறுதியான தேர்தல் முடிவாகவும், மேலும் ஒரு நிர்வாக முடிவாகவும் மாற்றுவதற்கு நேரம் எடுக்கும். குறைந்தபட்சம் ஐந்து-ஆறு ஆண்டுகளுக்கு வேலை செய்ய வேண்டும். 2025ல் ஜன் சுராஜின் அரசாங்கம் அமைக்கப்பட்டாலும், இந்த தீவிரத்துடன் நாங்கள் தொடர்ந்து கடினமாக உழைத்தாலும், 2029- 2030க்குள் பிஹார் நடுத்தர வருமானம் கொண்ட மாநிலமாக மாறினால் அது பெரிய விஷயம். ஏனென்றால் அனைத்து வளர்ச்சி அளவுருக்களிலும் பிஹார் உண்மையில் தோல்வியடைந்த மாநிலமாகும்” என்றார்
மேலும், “தோல்வியடைந்த மாநிலங்களின் குணாதிசயங்கள் இங்குள்ள மக்கள்தொகையில் தெரியும். உதாரணமாக சில சமயங்களில் நாம் நினைக்கிறோம், சூடானில் உள்ள மக்கள் ஏன் 20 ஆண்டுகளாக உள்நாட்டுப் போரில் போராடுகிறார்கள். ஏனென்றால் நீங்கள் அந்தத் தோல்வியடைந்த நிலையில் இருக்கும்போது, மக்கள் தங்கள் குழந்தைகள் சூடானில் எப்படிப் படிப்பார்கள் என்று கவலைப்படவில்லை.
» “நான் அரசியலுக்கு வந்திருந்தால் எல்லாவற்றையும் இழந்திருப்பேன்” - ரஜினி பேச்சு
» வாரத்தின் முதல் நாளில் மகிழ்ச்சி: தங்கம் விலை சவரனுக்கு ரூ.800 குறைந்தது
நான் உங்களை பயமுறுத்த முயற்சிக்கவில்லை. ஆனால் களநிலவர உண்மைகள் மற்றும் நீண்ட பயணத்தை குறித்து உணர்த்துகிறேன். 2025ல் பிஹார் சட்டசபை தேர்தலில் ஜன் சுராஜ் வெற்றி பெறும். அதில் எந்த சந்தேகமும் இல்லை. எனது தேர்தல் புரிதலின் அடிப்படையில், நாங்கள் வெற்றி பெறுவோம் என்பதை நான் தெளிவாக பார்க்கிறேன். ஜன் சுராஜ் ஆட்சிக்கு வந்தால், பள்ளிக் கல்வியை மேம்படுத்துவதே எனது முதன்மையான பணி. மாநிலம் தழுவிய மதுவிலக்கை நீக்கிய பின் கிடைக்கும் வருவாயில் இருந்து இதற்கு நிதி அளிக்கப்படும்” என்று அவர் கூறினார்.
அக்டோபரில் மிகுந்த ஆரவாரத்துடன் தொடங்கப்பட்ட ஜன் சுராஜ், சமீபத்திய பிஹார் சட்டமன்ற இடைத்தேர்தலில் தாக்கத்தை ஏற்படுத்தத் தவறிவிட்டது. அக்கட்சியின் வேட்பாளர்கள் ஒரு தொகுதியைத் தவிர மற்ற அனைத்திலும் டெபாசிட் இழந்துள்ளனர். இந்த இடைத்தேர்தலில் ஆளும் தேசிய ஜனநாயக கூட்டணி 4 தொகுதிகளிலும் வெற்றி பெற்றது.