வயநாடு மக்களவைத் தொகுதி இடைத் தேர்தலில் பிரியங்கா காந்தி அமோக வெற்றி

By KU BUREAU

கேரளாவின் வயநாடு மக்களவைத் தொகுதி இடைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிட்ட பிரியங்கா காந்தி 6,22,338 வாக்குகள் பெற்று அமோக வெற்றி பெற்றுள்ளார்.

கடந்த மக்களவை தேர்தலில் காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி கேரளாவின் வயநாடு, உத்தர பிரதேசத்தின் ரேபரேலி ஆகிய இரு தொகுதிகளில் போட்டியிட்டு வென்றார். வயநாடு தொகுதியில் அவர் 3.64 லட்சம் வாக்குகள் பெற்றிருந்தார். இரண்டு தொகுதியில் வென்றதால், வயநாடு எம்.பி பதவியை ராஜினாமா செய்தார்.

இதையடுத்து வயநாடு மக்களவை தொகுதிக்கு நடைபெற்ற இடைத் தேர்தலில் காங்கிரஸ் சார்பில் அதன் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி களம் இறக்கப்பட்டார். இங்கு கடந்த 13-ம் தேதி தேர்தல் நடைபெற்றது. அதன் முடிவுகள் நேற்று வெளியாயின. அதில் பிரியங்கா காந்தி 6,22,338 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். இவரை எதிர்த்து போட்டியிட்ட இந்திய கம்யூனிஸ்ட் வேட்பாளர் சத்யன் மொகேரி 2,22,407 வாக்குகள் பெற்றார். இவரை 4.10 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் பிரியங்கா காந்தி தோற்கடித்தார். இங்கு பாஜக சார்பில் போட்டியிட்ட நவ்யா ஹரிதாஸ் 1,09,939 வாக்குகள் பெற்றார்.

தனது அமோக வெற்றிக்கு நன்றி தெரிவித்து எக்ஸ் தளத்தில் பிரியங்கா காந்தி விடுத்துள்ள செய்தியில் கூறியிருப்பதாவது: வயநாடு சகோதர, சகோதரிகளே நீங்கள் என் மீது வைத்த நம்பிக்கைக்கு நான் நன்றிக்கடன் பட்டுள்ளேன். இது உங்களின் வெற்றி. நாளுமன்றத்தில் நான் உங்கள் குரலாக ஒலிப்பேன். என்னை தேர்தலில் நிறுத்திய எனது குடும்பத்தினர், எனக்காக பிரச்சாரம் செய்து வெற்றி பெறச் செய்த கட்சி தொண்டர்கள், ஐக்கிய ஜனநாயக முன்னணி கூட்டணி கட்சியினருக்கு நன்றி. எனது சகோதாரர் ராகுல், அனைவரையும் விட தைரியமானவர். எனது பின்னால் இருந்து என்னை எப்போதும் வழிநடத்துவதற்கு நன்றி. இவ்வாறு பிரியங்கா காந்தி கூறியுள்ளார்

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE