பாசம், துரோகம், சபதம்... மகாராஷ்டிராவில் ‘மகாயுதி’யின் மாஸ் வெற்றி வசமானது எப்படி?

By KU BUREAU

மகாராஷ்டிர சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக தலைமையிலான ஆளும் மகாயுதி கூட்டணி அமோக வெற்றி பெற்றிருக்கிறது. இந்த மாஸ் வெற்றி சாத்தியமானதன் பின்புலம் குறித்து பார்ப்போம்...

மகாராஷ்டிராவில் 288 சட்டப்பேரவைத் தொகுதிகள் உள்ளன. இந்த தொகுதிகளுக்கு ஒரே கட்டமாக நவம்பர் 20-ம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது. ஆளும் பாஜக - ஷிண்டேவின் சிவசேனா, அஜித் பவாரின் தேசியவாத காங்கிரஸ் அடங்கிய மகாயுதி கூட்டணிக்கும், காங்கிரஸ், உத்தவ் தாக்கரேவின் சிவசேனா, சரத் பவாரின் தேசியவாத காங்கிரஸ் அடங்கிய மகா விகாஸ் அகாடி கூட்டணிக்கும் இடையே நேரடி போட்டி நிலவியது.

மகாராஷ்டிராவில் ஆட்சி அமைக்க பெரும்பான்மைக்கு மொத்தம் 145 இடங்கள் தேவை என்ற நிலையில், பாஜக - ஏக்நாத் ஷிண்டே - அஜித் பவாரை உள்ளடக்கிய மகாயுதி கூட்டணி 235-க்கும் மேற்பட்ட இடங்களை வசமாவதை உறுதி செய்துள்ளது. இதன் மூலம், அங்கே ஆட்சி தக்கவைக்கப்படுகிறது. காங்கிரஸ், உத்தவ் தாக்கரே, சரத் பவார் அடங்கிய மகா விகாஸ் அகாடி கூட்டணிக்கு இந்தத் தேர்தலில் பலத்த அடி விழுந்துள்ளது. அந்த அணியால் 50 இடங்களைக் கூட நெருங்க முடியவில்லை.

தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள் பலவும் பாஜக கூட்டணிக்கே சாதகம் என்று கூறியிருந்தாலும், இந்த அளவுக்கு 210 பிளஸ் இடங்களைக் கைப்பற்றும் என கணிக்கவில்லை. இந்த வியத்தகு அமோக வெற்றி எப்படி சாத்தியாமனது என்பதை விரைவாகப் பார்ப்போம்.

2024 மக்களவைத் தேர்தலில் பாஜகவுக்குப் பின்னடைவைத் தந்த மாநிலங்​களில் மகாராஷ்டிரம் முக்கிய​மானது. மொத்தம் உள்ள 48 தொகுதி​களில் பாஜக ஒன்பது இடங்களி​லும், முதல்வர் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனா ஏழு இடங்களிலும் வென்றன. திகைத்​துப்போன மகாயுதி கூட்டணி அரசு, சட்டமன்றத் தேர்தலுக்கு முன்பாக ‘முக்​யமந்திரி மாஜி லட்கி பஹின் யோஜனா’ திட்டத்தைக் கொண்டு​வந்தது.

வறுமைக் கோட்டுக்குக் கீழே வாழும் பெண்களுக்கு மாதம் ரூ.1,500 வழங்கும் அந்தத் திட்டத்​துக்கு எதிராகத் தேர்தல் ஆணையத்தின் கதவுகளை எதிர்க்​கட்​சிகள் தட்டின. பலனில்லை. இப்படியான திட்டங்கள், தங்கள் சரிவைத் தவிர்க்கும் என உற்சாகமடைந்த மகாயுதி கூட்டணி, முன்பைவிட கூடுதல் சுறுசுறுப்புடன் இந்தத் தேர்தலை எதிர்​கொண்டது. மறுபுறம், மகாயுதி கூட்ட​ணியில் ஏகப்பட்ட குழப்​பங்கள் இருந்தாலும், தேர்தல் கள செயல்பாடுகள் சாதக விளைவுகளைத் தந்துள்ளன.

சாதிவாரிக் கணக்கெடுப்பு நடத்தப்​படும் என்று காங்கிரஸ் இடம்பெற்றுள்ள மகா விகாஸ் அகாடி கூட்டணி அறிவிக்க... “இது இந்துக்களைப் பிளவுபடுத்தும் முயற்சி. இந்துக்கள் ஒற்றுமையாக இருக்க வேண்டும்” என்று பாஜக தலைவர்கள் முழங்கியது தேர்தல் களத்தில் வெகுவாக எடுபட்டது.

‘ஒற்றுமையாக இல்லை​யென்​றால், அழிக்​கப்​பட்டு​விடு​வோம்’ என்று உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்​ய​நாத்தும், ‘ஒற்றுமையாக இருந்தால் பாதுகாப்பாக இருப்​போம்’ என்று பிரதமர் மோடி முன்வைத்த முழக்​கமும் இந்து மக்களை அணி திரட்ட வித்திட்டன என்கின்றனர் அரசியல் பார்வையாளர்கள்.

முதல்வர் ஏக்நாத் ஷிண்டேவைப் பொறுத்​தவரை, தான் பாஜகவின் கைப்பாவை அல்ல என்று நிரூபிக்க வேண்டிய கட்டாயத்துடன் முழு வீழ்ச்சில் செயல்பட்டதை இந்தத் தேர்தல் களத்தில் காண முடிந்தது.

பாஜகவுடன் கைகோத்​திருந்​தாலும் மதச்சார்பற்ற கட்சி என்கிற பிம்பத்தை விட்டுவிட விரும்பாத அஜித் பவாரின் தேசிய​வாதக் காங்கிரஸ் கட்சி, முஸ்லிம்​களை வேட்பாளர்களாக நிறுத்​தியதும் சாதகமாக அமைந்துள்ளது.

தெலங்​கா​னாவில் முஸ்லிம்​களுக்கு நான்கு சதவீதம் இடஒதுக்கீடு வழங்கப்​படு​வதுபோல, மகாராஷ்டிரத்​திலும் வழங்கப் பரிந்துரை செய்யப்​போவதாக தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி பேசியது பாஜகவுக்கு ஆயுதமானது. முஸ்லிம்​களின் வாக்குகளை அறுவடை செய்ய ‘வோட் ஜிகாத்​’தைக் காங்கிரஸ் கொண்டு​வருதாக ஃபட்னவீஸ் விமர்​சித்தது எடுபட்டது.

ஆர்எஸ்​எஸ்-ஐ சார்ந்​திருக்கும் தேவை பாஜகவுக்கு இல்லை என்கிற ரீ​தியில் பாஜக தேசியத் தலைவர் ஜே.பி.நட்டா பேசியது 2024 மக்களவைத் தேர்தலின்போது பாஜகவுக்குப் பின்னடைவைத் தந்தத​தாகப் பேசப்​பட்டது. ஆர்எஸ்​எஸ்​ஸுடன் நெருக்கமான உறவைப் பேணும் ஃபட்னவீஸ், இந்த முறை பிணக்கைத் தீர்த்து​விட்டார் என்கிறார்கள். ஆர்.எஸ்​.எஸ்​-சின் சகாயம் மீண்டும் கிட்டி​யது பாஜகவுக்குப் பலம் சேர்த்துள்ளதாக கருதப்​படு​கிறது.

தேர்தல் பிரச்சார கடைசி நாள் செய்தி​யாளர் சந்திப்பில், அதானி - மோடி குறித்து அதிரடியாக ராகுல் பேசியது பாஜகவுக்குப் பதற்றத்தை ஏற்படுத்​தி​னாலும், சரியான பதிலடி தரவும் அக்கட்​சி​யினர் தயங்க​வில்லை. ராஜீவ் காந்தி ஆட்சிக் ​காலத்​தில்தான் தான் வளர்ந்ததாக அதானியே குறிப்​பிட்டதாக பாஜவினர் சுட்டிக்​காட்​டினர். கூடவே, அதானி​யுடன் ராபர்ட் வதேரா, சசி தரூர் உள்ளிட்டோர் இருக்கும் ஒளிப்​படத்​தையும் வெளியிட்​டனர்.

ராஜஸ்​தானில் அசோக் கெலாட் முதல்வராக இருந்த​போதும், தெலங்​கா​னாவின் தற்போதைய காங்கிரஸ் ஆட்சி​யிலும் அதானி குழுமத்​துடன் கையெழுத்தான வணிக ஒப்பந்​தங்களையும் பட்டியலிட்​டது பாஜக. ஒரு கூட்டத்தில் அதானி​யுடன் சரத் பவாரும் அமர்ந்திருந்ததாக அஜித் பவார் கூறியிருந்த நிலையில், ராகுல் காந்தியின் இந்த உத்தி எதிர்​மறையான விளைவு​களையே ஏற்படுத்​தி இருக்​கிறது என்பதையே தேர்தல் முடிவுகள் காட்டுகின்றன.

மகா விகாஸ் அகாடி கூட்ட​ணியைப் பொறுத்​தவரை, காங்கிரஸின் பல வாக்குறுதிகளும், உத்திகளும் எடுபடாமல் போயுள்ளன. முதல்வர் நாற்காலி மீதான உத்தவ் தாக்கரேவின் கனவு இப்போது கலைந்து போயிருக்கிறது.

அதேபோல், அரசியல் அதிகாரத்​துக்​காகக் குடும்பத்தை உடைத்தார் என்று அஜித் பவாரைப் பற்றி ஆதங்கத்​துடன் பேசி வந்தார் சரத் பவார். இந்தத் தேர்தலில் தோல்வி அடைந்தது, சரத் பவாருக்குக் கவுரப் பிரச்சினை மட்டுமல்ல; அவரது மகள் சுப்ரியா சுலேவின் அரசியல் எதிர்​காலத்துக்கும் பின்னடைவாகவே கருதப்படுகிறது.

இந்தத் தேர்தலில் வாக்களித்த பிறகு முதல்வர் ஏக்நாத் ஷிண்டே கூறியதை இங்கே குறிப்பிட்டே ஆகவேண்டும். “மகா விகாஸ் அகாடி கூட்டணியின் இரண்டரை ஆண்டு கால ஆட்சியையும், மகாயுதி கூட்டணியின் இரண்டரை ஆண்டு கால ஆட்சியையும் மகாராஷ்டிர மக்கள் பார்த்துள்ளனர். நாங்கள் செய்த பணிகளுக்காகவும், வளர்ச்சிக்காவும் மக்கள் வாக்களிப்பர். ஸ்தம்பித்து கிடந்த வளர்ச்சி பணிகளை எல்லாம் நாங்கள் மீண்டும் தொடங்கினோம். கடந்த 5 ஆண்டுகளில், எங்களின் வளர்ச்சி பாதையை மக்கள் பார்த்துள்ளனர்.

மகாராஷ்டிர மாநிலத்தின் வளர்ச்சிக்காக உண்மையாக பணியாற்றியது யார் என மக்கள் அறிவர். பெண்கள், இளைஞர்கள், விவசாயிகள் மற்றும் மூத்த குடிமக்களுக்கு எனது அரசு அமல்படுத்திய நலத்திட்டங்களை மக்கள் அறிவர். மகாயுதி கூட்டணி அரசு அதிக பெரும்பான்மையுடன் வெற்றி பெறும்” என்ற முதல்வர் ஏக்நாத் ஷிண்டேவின் கூற்று இப்போது மெய்ப்பட்டுள்ளது.

அளவில்லா மசாலா அம்சங்களைக் கொண்ட பாலிவுட் திரைப்படங்களை நினைவுபடுத்தியது மகாராஷ்டிர சட்டமன்றத் தேர்தல் களம். ஆக... சபதம், பாசப் போராட்டம், பழிவாங்கும் வேட்கை, ஏமாற்றம், துரோகம், உள்ளடி வேலைகள், வைராக்கியம் என ஏகப்பட்ட அம்சங்களை உள்ளடக்கிய பான் இந்தியா மசாலா படம் போல நடந்த இந்த மகாராஷ்டிரா தேர்தலில், மாஸ் காட்டியிருக்கிறது பாஜக கூட்டணி!

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE