பாட்னா: பிஹார் மாநிலத்தில் 4 தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில், பிரசாந்த் கிஷோரின் ஜன் சுராஜ் கட்சியின் 3 வேட்பாளர்கள் டெபாசிட் இழந்தனர்.
பீகார் மாநிலத்தின் 4 தொகுதிகளில், பாஜக கட்சி ராம்கர், தாராரி இடங்களிலும், ஹெச்ஏஎம் கட்சி இமாம்கஞ்ச் தொகுதியிலும், ஐக்கிய ஜனதா தளம் பெலகஞ்ச் தொகுதியிலும் வெற்றி பெற்றது. இதில் இமாம்கஞ்ச் தொகுதியில் மட்டும் ஜன் சுராஜ் வேட்பாளர் டெபாசிட்டை தக்கவைத்தார். இமாம்கஞ்சில் ஜிதன் மஞ்சியின் மருமகள் தீபா, ஆர்ஜேடி வேட்பாளரை 5945 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார். இத்தொகுதியில் ஜன் சுராஜ் வேட்பாளர் ஜிதேந்திர பாஸ்வான் 37,103 வாக்குகள் பெற்று மூன்றாவது இடத்தைப் பிடித்தார்.
இந்த நிலையில், பாரதிய ஜனதா கட்சி தலைமையிலான கூட்டணி ஆட்சியில் மாநிலம் பின்தங்கிய போதிலும், சட்டமன்ற இடைத்தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றி பெற்றது கவலைக்குரிய விஷயம் என்று ஜன் சுராஜ் கட்சியின் தலைவர் பிரசாந்த் கிஷோர் கூறியுள்ளார்.
தேர்தல் வியூகவாதியாக இருந்து கட்சி ஆரம்பித்த பிரசாந்த் கிஷோரின், தேர்தல் அறிமுகமானது சட்டமன்ற இடைத்தேர்தலில் தாக்கத்தை ஏற்படுத்தவில்லை. தேர்தல் முடிவுகள் வெளியான சிறிது நேரத்திலேயே பாட்னாவில் செய்தியாளர்களிடம் பேசிய பிரசாந்த் கிஷோர், “பெலகஞ்சில் அனைத்து முஸ்லிம் வாக்குகளும் ஐக்கிய ஜனதா தள வேட்பாளருக்கு சென்றன. இமாம்கஞ்சில் ஜன் சுராஜ் வேட்பாளர், தேசிய ஜனநாயகக் கூட்டணியின் வாக்குகளைப் பறித்தார். இல்லையெனில், ஜிதன் மஞ்சியின் ஹிந்துஸ்தானி அவாம் மோர்ச்சாவின் வெற்றி வித்தியாசம் அதிகமாக இருந்திருக்கும்.
» மஞ்சள், வேம்பால் மனைவி புற்றுநோயை வென்றதாக சொன்ன நவ்ஜோத் சித்து: மருத்துவ நிபுணர்கள் மறுப்பு
» ஏ.ஆர்.ரஹ்மான் - சாய்ரா பானு விவாகரத்து: அவதூறு பரப்பியவர்கள் மீது வழக்கு?
டெபாசிட்டை இழந்தது கவலைக்குரிய விஷயமாக இருக்கக்கூடாது. கவலைக்குரிய விஷயம் என்றால், பிஹாரில் இவ்வளவு காலம் ஆட்சி செய்தும், மாநிலத்தை முன்னேற்ற பாதைக்கு கொண்டுவருவதில் தோல்வியடைந்தாலும், தேசிய ஜனநாயகக் கூட்டணியின் வெற்றிபெறும் திறமைதான். எங்கள் போராட்டம் என்டிஏவுடன் தான் என்று நாங்கள் எப்போதும் கூறி வருகிறோம். அடுத்த ஆண்டு நடைபெறவிருக்கும் சட்டமன்றத் தேர்தலில் ஜன் சுராஜ் கட்சி அனைத்து தொகுதிகளிலும் தனித்துப் போட்டியிடும்” என்று அவர் கூறினார்.