கொல்கத்தா: மேற்கு வங்கத்தில் இடைத்தேர்தல் நடைபெற்ற 6 தொகுதிகளிலும் திரிணமூல் காங்கிரஸ் கட்சி அபார வெற்றி பெற்றது.
13 மாநிலங்களில் உள்ள 48 சட்டமன்றத் தொகுதிகள் மற்றும் 2 மக்களவைத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டு வருகிறது.
மேற்கு வங்க சட்டசபை இடைத்தேர்தலில் மம்தா பானர்ஜியின் திரிணமூல் காங்கிரஸ் கட்சி அனைத்து தொகுதிகளிலும் அமோக வெற்றி பெற்றுள்ளது. 2021 மற்றும் 2016 தேர்தல்களில் பாஜக வென்ற அலிபுர்துவார் மாவட்டத்தில் உள்ள மதரிஹாட் தொகுதியை திரிணமூல் காங்கிரஸ் கட்சி இம்முறை கைப்பற்றியது. இந்த தொகுதியில் திரிணமூல் வேட்பாளர் ஜெயபிரகாஷ் டோப்போ, பாஜக வேட்பாளரை விட 28,168 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றிபெற்றார்.
மேலும், சிதாய், ஹரோவா, நைஹாதி, தல்டாங்ரா மற்றும் மெதினிபூர் ஆகிய தொகுதிகளிலும் திரிணமூல் காங்கிரஸ் வேட்பாளர்கள் வெற்றி பெற்றுள்ளனர். இதில் ஹரோவா தொகுதியில் திரிணமூல் வேட்பாளர் ரபிபுல் இஸ்லாம், ஆல் இந்திய செக்குயூலர் பிரண்ட் வேட்பாளரை விட 157072 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றிபெற்றார். இந்த தொகுதியில் பாஜக 3ம் இடமும், காங்கிரஸ் 4ம் இடமும் பிடித்தன.
» மகாராஷ்டிராவின் அடுத்த முதல்வர் யார்? - தேவேந்திர பட்னாவிஸ் அதிரடி பதில்
» மகாராஷ்டிராவில் வாக்குச்சீட்டுகள் மூலம் மீண்டும் தேர்தல் நடத்தவேண்டும்: சஞ்சய் ராவத் கோரிக்கை
இந்த வெற்றியை அடுத்து, கொல்கத்தாவில் உள்ள முதல்வர் மம்தா பானர்ஜியின் வீட்டின் முன்பு திரிணமூல் தொண்டர்கள் கொண்டாட்டங்களை தொடங்கினர். கொல்கத்தா மருத்துவமனை பெண் மருத்துவர் பாலியல் வன்கொடுமை கொலை சம்பவத்தை முன்னிறுத்தி பாஜக மற்றும் எதிர்க்கட்சிகள் இந்த இடைத்தேர்தலில் மம்தாவுக்கு எதிராக தீவிர பிரச்சாரம் செய்தன.
இந்த வெற்றி குறித்து பேசிய மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, ‘மக்களுக்காக உழைக்க உங்களின் ஆசிகள் எங்களுக்கு உத்வேகம் அளிக்கிறது. நாம் அனைவரும் பொது மக்கள். அதுதான் எங்கள் அடையாளம். நாங்கள் ஜமீன்தார் அல்ல. நாங்கள் பாதுகாவலர்கள்” என்று அவர் வாழ்த்து தெரிவித்துள்ளார்.