ராஞ்சி: ஜார்க்கண்டில் மொத்தமுள்ள 81 தொகுதிகளில் இண்டியா கூட்டணி 47 தொகுதிகளில் முன்னிலையில் உள்ளது. பாஜக கூட்டணி வெறும் 32 தொகுதிகளில் மட்டுமே முன்னிலையில் உள்ளது.
ஜார்க்கண்ட் மாநிலத்தில் 81 சட்டப்பேரவைத் தொகுதிகள் உள்ளன. இந்த தொகுதிகளுக்கு கடந்த 13, 20 ஆகிய தேதிகளில் 2 கட்டங்களாக வாக்குப்பதிவு நடைபெற்றது. ஜார்க்கண்டில் ஆளும் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா, காங்கிரஸ் கூட்டணிக்கும், பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணிக்கும் இடையே நேரடி போட்டி நிலவுகிறது.
ஜார்க்கண்டில் பாஜக 68 இடங்களிலும், அனைத்து ஜார்க்கண்ட் மாணவர் சங்கம் (ஏஜேஎஸ்யு) 10 இடங்களிலும், ஜனதா தளம் (ஐக்கிய) 2 இடங்களிலும், லோக் ஜனசக்தி கட்சி (ராம் விலாஸ்) 1 இடத்திலும் போட்டியிட்டன. அவர்களுக்கு போட்டியாக முதல்வர் ஹேமந்த் சோரன் தலைமையிலான ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா (ஜேஎம்எம்) 41 இடங்களிலும், காங்கிரஸ் 30 இடங்களிலும், ராஷ்ட்ரிய ஜனதா தளம் 6 இடங்களிலும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்-லெனினிஸ்ட்) 4 இடங்களிலும் போட்டியிட்டன.
தற்போதைய நிலவரப்படி மொத்தமுள்ள 81 தொகுதிகளில் ஆளும் ஜேஎம்எம் தலைமையிலான இண்டியா கூட்டணி 47 இடங்களிலும், பாஜக கூட்டணி 32 இடங்களிலும் முன்னிலை வகிக்கின்றன. இதில் பாஜக 30 தொகுதிகளிலும், ஜேஎம்எம் 26 தொகுதிகளிலும், காங்கிரஸ் 15 தொகுதிகளிலும், ஆர்ஜேடி 4 தொகுதிகளிலும், சிபிஎம்-எல் 2 தொகுதிகளிலும், ஏஜேஎஸ்யு மற்றும் எல்ஜேபி தலா ஒரு தொகுதியிலும் முன்னிலை வகிக்கிறது.
» தங்கம் சவரன் ரூ.58,000யைக் கடந்தது... இன்றைய விலை நிலவரம்!
» சென்னையில் சுய உதவிக்குழுக்களின் இயற்கை சந்தை: இன்றும், நாளையும் நடக்கிறது
ஜார்க்கண்டில் ஆட்சியமைக்க 42 இடங்கள் தேவை என்ற சூழலில், இண்டியா கூட்டணி அங்கே மீண்டும் ஆட்சியமைப்பது உறுதியாகியுள்ளது.