புதுடெல்லி: டெல்லி முதல்வர் அதிஷி, முன்னாள் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலை விட ஆயிரம் மடங்கு சிறந்தவர் என்று டெல்லி துணைநிலை ஆளுநர் வி.கே.சக்சேனா பாராட்டியுள்ளார்.
இந்திரா காந்தி டெல்லி பெண்கள் தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தின் 7வது பட்டமளிப்பு விழாவில் பேசிய டெல்லி துணைநிலை ஆளுநர் வி.கே. சக்சேனா, "டெல்லியின் முதல்வர் ஒரு பெண் என்பதில் நான் இன்று மகிழ்ச்சியடைகிறேன். மேலும் அவர் தனது முன்னோடியை( அரவிந்த் கேஜ்ரிவால்) விட ஆயிரம் மடங்கு சிறந்தவர் என்று என்னால் நம்பிக்கையுடன் சொல்ல முடியும்.
நீங்கள் முன்னேறும்போது, உங்களுக்கு நான்கு வழிகாட்டும் நட்சத்திரங்கள் உள்ளன. முதலில் உங்களைப் பற்றிய உங்கள் பொறுப்பு, இரண்டாவது உங்கள் பெற்றோர் மற்றும் குடும்பத்தினருக்கான உங்கள் பொறுப்பு, மூன்றாவது பொறுப்பு சமூகம் மற்றும் தேசத்தைக் கட்டமைப்பதில் உள்ளது. பாலினம் என்ற உச்சவரம்பை உடைத்து, அனைத்துத் துறைகளிலும் மற்றவர்களுக்கு இணையாக நிற்கும் பெண்களாக உங்களை நிரூபிப்பது நான்காவது பொறுப்பு" என்று அவர் கூறினார்.
கலால் கொள்கை விவகாரத்தில் கைதாகி ஜாமீனில் வெளிவந்த அரவிந்த் கேஜ்ரிவால் தனது பதவியை ராஜினாமா செய்ததை அடுத்து, கடந்த செப்டம்பர் மாதம் டெல்லியின் முதலமைச்சராக அதிஷி பதவியேற்றார்.
அரவிந்த் கேஜ்ரிவால் தலைமையிலான டெல்லி ஆம் ஆத்மி அரசு மற்றும் துணைநிலை ஆளுநர் சக்சேனா இடையில் கடந்த காலங்களில் கடும் மோதல் போக்கு இருந்த நிலையில் தற்போது அவர் அதிஷியை பாராட்டியுள்ளது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை உருவாக்கியுள்ளது.