அமராவதி: ஒய்.எஸ்.ஜெகன் மோகன் ரெட்டி ஆட்சியில் இருந்தபோது, அதானி குழுமத்திடம் பெற்ற ஆதாயத்துக்காக மாநிலத்தில் முக்கிய உள்கட்டமைப்புத் திட்டங்கள் வழங்கப்பட்டதாக ஆந்திரப் பிரதேச காங்கிரஸ் தலைவர் ஒய்.எஸ்.ஷர்மிளா குற்றம் சாட்டியுள்ளார்.
தொழிலதிபர் கவுதம் அதானி சம்பந்தப்பட்ட லஞ்சக் குற்றச்சாட்டுகள் தொடர்பாக ஆந்திரப் பிரதேச முன்னாள் முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி ஊழல் செய்ததாக காங்கிரஸ் தலைவர் ஒய்.எஸ்.ஷர்மிளா குற்றம் சாட்டியுள்ளார்.
இந்திய சூரிய ஒளி மின்சார நிறுவனத்தின் (Solar Energy Corporation of India) ஒப்பந்தத்தில் கையெழுத்திட, அப்போதைய ஆந்திர முதல்வர் ஜெகன் மோகனுக்கு லஞ்சம் கொடுக்க அதானி உறுதி அளித்தகாக அமெரிக்க பாதுகாப்பு மற்றும் பரிவர்த்தனை ஆணையம் தெரிவித்துள்ளது. கடந்த 2021-ம் ஆண்டு ஆகஸ்ட்டில் ஜெகனைச் சந்தித்த அதானி இந்த உறுதியினை அளித்தார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. பெயர் குறிப்பிடப்படாத வெளிநாட்டு அதிகாரி ஒருவர் ஆந்திர அரசு அதிகாரிக்கு ரூ.1750 கோடி லஞ்சம் கொடுக்க முன்வந்தார் என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்தச் சந்திப்புக்கு பின்பே அப்போதைய ஆந்திர அரசு இந்திய சூரிய மின்சார நிறுவனத்திடம் இருந்து 7 ஜிகாவாட் மின்சாரம் வாங்க ஒப்புக்கொண்டது என்றும், இது வேறு எந்த மாநிலமும் வாங்காத அதிக அளவாகும் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.
இதனை கடுமையாக விமர்சித்துள்ள ஒய்.எஸ்.ஷர்மிளா, “இந்தியாவை அதானி களங்கப்படுத்துகிறார் என்றால், ஜெகன் மோகன் ரெட்டி ஆந்திராவை களங்கப்படுத்துகிறார். சூரிய சக்தி ஒப்பந்தத்தில் ரூ.1,750 கோடி லஞ்சம் கொடுக்கப்பட்டது. இதை மறைக்க, ஜெகன் மோகன் ரெட்டி, மாநிலத்தின் மீது ரூ.17,000 கோடி சுமையை ஏற்றியுள்ளார். கங்காவரம் துறைமுகத் திட்டத்தில் 10 சதவீத பங்குகளை விற்பது உள்ளிட்ட முக்கிய உள்கட்டமைப்பு திட்டங்களை ஜெகன் மோகன் ரெட்டி கிக்பேக்குகளுக்கு ஈடாக அதானி குழுமத்திடம் ஒப்படைத்தார். அவர் ஆந்திராவை "பிளாங்க் செக் போல" அதானியிடம் ஒப்படைத்தார்.
» திண்டுக்கல்: இளைஞர்களை ஈர்த்தால் சட்டசபை தேர்தலில் வெற்றி பெறலாம் - அதிமுக நிர்வாகிகள் யோசனை
» இசையமைப்பாளர் ரஹ்மான் பற்றிய வதந்தி; பதிலடி கொடுத்த மகன் அமீன்!
கங்காவரம் துறைமுகம் அரசின் கட்டுப்பாட்டில் இருக்க வேண்டும் என்பது ஒய்.எஸ். ராஜசேகர ரெட்டியின் கனவாக இருந்தது, ஆனால் அதன் மதிப்பு ரூ.9,000 கோடியாக இருந்தபோது அதில் 10 சதவீதத்தை அதானிக்கு ரூ.640 கோடிக்கு ஜெகன் விற்றார். இந்த ஒப்பந்தத்தில் ஜெகன் மோகன் ரெட்டிக்கு எவ்வளவு லஞ்சம் கிடைத்தது?. ஜெகன் மோகன் ஆந்திராவை அதானி ராஷ்டிராவாக மாற்றியுள்ளார்” என்று கூறினார்
தொடர்ந்து பேசிய அவர், “ இந்த சர்ச்சைக்குரிய மின்சார ஒப்பந்தத்தை ரத்து செய்ய வேண்டும். அதானியை கருப்புப் பட்டியலில் சேர்க்க வேண்டும். ஜெகன் மோகன் ரெட்டிக்கும் அதானிக்கும் இடையேயான அனைத்து ஒப்பந்தங்களும் விசாரிக்கப்பட்டு மறுபரிசீலனை செய்யப்பட வேண்டும். லஞ்சம் மற்றும் ஊழல் புகார்களை விசாரிக்க நாடாளுமன்ற கூட்டுக் குழுவை மத்திய அரசு அமைக்க வேண்டும். பிரதமர் மோடி அவர்களே, நீங்கள் நடவடிக்கை எடுப்பீர்கள் என்று நாங்கள் இப்போது நம்புகிறோம். அதானி உடனடியாக கைது செய்யப்பட்டு இங்கு வழக்குத் தொடரப்படவேண்டும் அல்லது அமெரிக்காவிற்கு நாடு கடத்தப்படவேண்டும்" என்று ஷர்மிளா கூறினார்.
அதானி குழுமம், இந்த லஞ்ச புகார்களை "அடிப்படை ஆதாரமற்றது" என்று கடுமையாக நிராகரித்துள்ளது. இந்த குற்றச்சாட்டுகள் குறித்து விளக்கமளித்துள்ள ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி, ‘ஆந்திர அரசுக்கு அதானி குழுமத்துடன் எந்த விதமான நேரடி ஒப்பந்தமும் இருந்தது இல்லை. அமெரிக்க ஆணையத்தின் குற்றப்பத்திரிகையை மேற்கோள் காட்டி சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டு தவறானது ’ என்று தெரிவித்துள்ளது.