புதுடெல்லி: தொழிலதிபர் கவுதம் அதானியை உடனடியாகக் கைது செய்து, அவரது பாதுகாவலர் செபி தலைவர் மாதாபி பூரி புச் மீது விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி வேண்டுகோள் விடுத்துள்ளார். பிரதமரை கடுமையாக தாக்கிப் பேசிய ராகுல் காந்தி, அதானியுடன் ஊழலில் நரேந்திர மோடியும் கைகோத்ததாக குற்றம்சாட்டினார்.
இது தொடர்பாக செய்தியாளர் சந்திப்பில் பேசிய ராகுல் காந்தி, “அமெரிக்க சட்டம் மற்றும் இந்திய சட்டங்கள் இரண்டையும் அதானி உடைத்துள்ளார் என்பது இப்போது அமெரிக்காவில் தெளிவாக நிரூபிக்கப்பட்டுள்ளது. அவர் அமெரிக்காவால் குற்றம் சாட்டப்பட்டுள்ளார். ஆனால் அதானி எப்படி இந்த நாட்டில் சுதந்திரமான மனிதனாக சுற்றி வருகிறார் என்று நான் ஆச்சரியப்படுகிறேன்?. அதானி ரூ.2,000 கோடி ஊழல் மற்றும் பலவற்றில் ஈடுபட்டிருந்தாலும், பிரதமர் மோடியால் பாதுகாக்கப்படுவதால் அதானி சுதந்திரமாக இயங்குகிறார்
நாங்கள் இதை மீண்டும் மீண்டும் எழுப்பி வருகிறோம். செபி தலைவர் மாதபி புச் பிரச்சினையை நாங்கள் ஏற்கெனவே எழுப்பியுள்ளோம், இது நாங்கள் கூறியதை நிரூபிக்கிறது. பிரதமர் அதானியைப் பாதுகாக்கிறார், பிரதமரும் அதானியுடன் சேர்ந்து ஊழலில் ஈடுபட்டுள்ளார். இது தெளிவாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது” என்று ராகுல் காந்தி கூறினார்.
துறைமுகங்கள், விமான நிலையங்கள், நிலக்கரி, மின் உற்பத்தி மற்றும் ரியல் எஸ்டேட் உள்ளிட்ட தொழில்களில் ஈடுபட்டு வருகிறார் அதானி குழும நிறுவனத் தலைவர் கவுதம் அதானி. அவர் மீது அமெரிக்க செக்யூரிட்டி கவுன்சில் தற்போது பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளது.
» சேர்ந்து வாழ விருப்பம் இல்லை; நீதிமன்றத்தில் ஆஜரான தனுஷ்- ஐஸ்வர்யா!
» மகாராஷ்டிராவில் 65.2% வாக்குப்பதிவு - 1995ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலுக்குப் பிறகு அதிகபட்சம்!
அமெரிக்காவில் சூரிய சக்தி திட்டத்தில் முதலீட்டாளர்களை ஏமாற்றியதாகவும், அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுத்ததாகவும் கவுதம் அதானி மீது குற்றச்சாட்டுகள் அடுக்கப்பட்டுள்ளன. அதானி, அவரது உறவினர் சாகர் அதானி உள்ளிட்ட 7 பேர் சுமார் 265 மில்லியன் டாலர்களை லஞ்சமாக இந்திய அதிகாரிகளுக்கு வழங்க ஒப்புக்கொண்டதாக அந்த ஆணையம் தெரிவித்துள்ளது. இதன் மூலம் 20 ஆண்டுகளில் 2 பில்லியன் டாலர் லாபம் ஈட்டும் ஒப்பந்தத்தை அவர்கள் பெற முடியும் என்ற தகவல் வெளியாகியுள்ளது. இந்த குற்றச்சாட்டை அடுத்து நீதிமன்றம் பிடிவாரண்ட் பிறப்பித்தது.
இந்தத் திட்டத்தில் கடந்த 5 ஆண்டுகளில் பல பில்லியன் டாலர்களை முதலீடு செய்த ‘வால் ஸ்ட்ரீட்’ (அமெரிக்க பங்குச்சந்தை) முதலீட்டாளர்களை அதானி குழுமம் ஏமாற்றி உள்ளது என ஆணையம் தெரிவித்துள்ளது. இந்தச் செய்தியை அடுத்து அதானி க்ரீன் எனர்ஜி பத்திரங்கள் மூலம் சுமார் 600 மில்லியன் டாலர்களை திரட்டும் திட்டத்தை ரத்து செய்தது. இதை அமெரிக்காவில் இருந்து கிடைத்த தகவல் உறுதி செய்துள்ளன.
இந்த விவகாரம் குறித்து அதானி குழுமம் எந்தவித விளக்கத்தையும் இதுவரை தரவில்லை. இதன் எதிரொலியாக இந்தியாவில் வியாழக்கிழமை காலை பங்கு வர்த்தகம் தொடங்கியதும் அதானி குழும பங்குகள் சுமார் 20 சதவீதம் சரிவை எதிர்கொண்டது. ஆசிய அளவிலும் அந்த நிறுவன பங்குகள் சரிவை கண்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.