கடனில் சிக்கித் தவிக்கும் இமாச்சலப் பிரதேசம் - அரசின் 18 ஹோட்டல்களை மூட நீதிமன்றம் உத்தரவு

By KU BUREAU

சிம்லா: இமாச்சலப் பிரதேசத்தில் உள்ள காங்கிரஸ் அரசு பெரும் கடனில் சிக்கித் தவித்து வருவதால், அதன் செலுத்தப்படாத நிலுவைத் தொகைக்கு உதவும் வகையில், அரசுக்குச் சொந்தமான நஷ்டத்தில் இயங்கும் 18 ஹோட்டல்களை மூட இமாச்சலப் பிரதேச உயர் நீதிமன்றம் இன்று உத்தரவிட்டது. அவை "வெள்ளை யானைகள்" என்று நீதிபதிகள் கூறியுள்ளனர்.

இமாச்சல் அரசாங்கம் அதன் ஊழியர்களுக்கு நிதிப் பலன்களை வழங்காதது தொடர்பான வழக்கில், 56 அரசு ஹோட்டல்கள் செய்த வணிகம் குறித்த தகவல்கள் உயர் நீதிமன்றம் முன்பு வைக்கப்பட்டது. இதில் பல ஹோட்டல்கள் நஷ்டத்தில் இயங்குவது தெரியவந்தது. இதனையடுத்து, இந்த ஹோட்டல்களை சுற்றுலா வளர்ச்சிக் கழகம் பராமரிப்பதில், அரசின் நிதி வீணாகாமல் இருப்பதை உறுதி செய்ய ஹோட்டல்களை மூடுவது அவசியம் என்று உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மாநில அரசு தனது நிதி நெருக்கடி குறித்து பலமுறை பேசுவதை மேற்கோள் காட்டிய நீதிபதி, சுற்றுலா வளர்ச்சிக் கழகம் அதன் சொத்துக்களை லாபம் ஈட்டுவதற்கு பயன்படுத்த முடியவில்லை என்று கூறினார்.

இதனையடுத்து, தி பேலஸ் ஹோட்டல் சைல், ஹோட்டல் கீதாஞ்சலி டல்ஹவுசி, ஹோட்டல் பகால் தத்லகாட், ஹோட்டல் தௌலதர் தர்மஷாலா, ஹோட்டல் குணால் தரம்ஷாலா, ஹோட்டல் காஷ்மீர் ஹவுஸ் தர்மஷாலா, ஹோட்டல் ஆப்பிள் ப்ளாசம் ஃபாகு, ஹோட்டல் சந்திரபாகா கீலாங், ஹோட்டல் தியோதர் கஜ்ஜியார், ஹோட்டல் கிரிக்ஹரிங்கார், ஹோட்டல் கிரிக்ஹரிங்கார், மேக்தூத் கியாரிகாட், ஹோட்டல் சர்வாரி குலு, ஹோட்டல் லாக் ஹட்ஸ் மணாலி, ஹோட்டல் ஹடிம்பா காட்டேஜ் மணாலி, ஹோட்டல் குஞ்சும் மணாலி, ஹோட்டல் பாக்சு மெக்லியோட்கஞ்ச், ஹோட்டல் தி கேஸில் நக்கர் குலு மற்றும் ஹோட்டல் ஷிவாலிக் பர்வானூ உள்ளிட்ட ஹோட்டல்கள் இன்று மூடப்பட்டன.

இந்த உத்தரவை நிறைவேற்றுவதை உறுதி செய்வதற்கு சுற்றுலா வளர்ச்சிக் கழகத்தின் நிர்வாக இயக்குநர் தனிப்பட்ட முறையில் பொறுப்பேற்க வேண்டும் என நீதிபதி அஜய் மோகன் கோயல் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து மாநில வருவாய்த்துறை அமைச்சர் ஜகத் சிங் நேகி கூறுகையில், “ஹெச்பிடிடிசி ஹோட்டல்கள் சுற்றுலாவை ஊக்குவிக்க அரசால் கட்டப்பட்டது. இவை முதன்மையான இடங்களில் அமைந்துள்ள சொத்துகள். ஹோட்டல்கள் நிதி ரீதியாக சிறப்பாக செயல்படவில்லை என்றால், பிரச்சினைக்கு தீர்வு காண நடவடிக்கை எடுப்போம்" என்று கூறினார்.

இந்த வார தொடக்கத்தில் செலி ஹைட்ரோபவர் நிறுவனத்துக்கு ரூ. 64 கோடி மின் பாக்கியை செலுத்தாததற்காக, புதுடெல்லியில் உள்ள மாநில விருந்தினர் மாளிகையான இமாச்சல் பவனை ஜப்தி செய்ய உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இந்த தீர்ப்பை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர உள்ளதாக முதல்வர் சுக்விந்தர் சிங் சுகு தெரிவித்துள்ளார்.


VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE