மும்பை: 288 உறுப்பினர்களைக் கொண்ட மகாராஷ்டிரா சட்டப்பேரவைக்கு நேற்று நடந்த தேர்தலில் 65.02 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளதாக தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. 1995 சட்டமன்றத் தேர்தலில் 71.7 சதவீத வாக்குகள் பதிவான நிலையில், அதனையடுத்து தற்போது அதிகளவில் வாக்குப்பதிவு நடந்துள்ளது.
2024 மக்களவைத் தேர்தலின்போது 61.39 சதவீத வாக்குகளும், 2019 சட்டமன்றத் தேர்தலில் 61.4 சதவீத வாக்குகளும் பதிவான நிலையில், தற்போது 65.02 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளதாக தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
மகாராஷ்டிராவில் இந்தமுறை அனைவரும் வாக்களிக்க வேண்டும் என பிரபலங்கள், அரசியல்வாதிகள் மற்றும் சமூக ஆர்வலர்கள் அதிகளவில் பிரச்சாரம் செய்தனர். மேலும், வாக்காளர்களின் வசதிக்காக இந்திய தேர்தல் ஆணையம் பல விரிவான ஏற்பாடுகளையும் செய்தது.
இந்தியத் தேர்தல் ஆணையத்தின் தரவுகளின்படி, மாநிலத்தில் உள்ள 36 மாவட்டங்களில், பத்து சட்டமன்றத் தொகுதிகளைக் கொண்ட கோலாப்பூரில் அதிகபட்சமாக 76.25 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன. அதைத் தொடர்ந்து கட்சிரோலி மாவட்டத்தில் 73.68 சதவீதமும், ஜல்னா மாவட்டத்தில் 72.30 சதவீதமும் பெற்றுள்ளன.
» வகுப்பறையில் ஆசிரியர் ரமணி படுகொலை: பள்ளிக் கல்வித் துறையை சாடுவது சரியா?
» நீதிமன்ற வளாகத்தில் வழக்கறிஞரை வெட்டிய தம்பதியர் சிறையிலடைப்பு!
பத்து சட்டசபை தொகுதிகளை உள்ளடக்கிய மும்பை நகர் மாவட்டத்தில், மிகக் குறைந்த அளவாக 52.07 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன. தானேவில் உள்ள 18 மாவட்டங்களில் 56.05 சதவீதம் வாக்குகளும், மும்பை புறநகர் மாவட்டத்தில் உள்ள 26 தொகுதிகளில் 55.77 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளன.
முந்தைய சட்டப்பேரவை மற்றும் மக்களவைத் தேர்தல்களின் போது மகாராஷ்டிராவின் நகர்ப்புறங்களில் தொடர்ந்து குறைவான வாக்குப்பதிவு பதிவான நிலையில், அதனை அதிகரிக்க சிறப்பு கவனம் செலுத்தப்பட்டதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.