இம்பால்: கடந்த வாரம் குக்கி தீவிரவாதிகள் என சந்தேகிக்கப்படும் நபர்களால் 6 பேர் கொல்லப்பட்டதற்கு வருத்தம் தெரிவித்த மணிப்பூர் முதலமைச்சர் பைரன் சிங், இந்த கொடூரமான செயலின் பின்னணியில் உள்ளவர்கள் விரைவில் சட்டத்தின் முன் நிறுத்தப்படுவார்கள் என்று கூறினார்.
18 மாத காலமாக கலவரத்தால் பாதிக்கப்பட்ட மணிப்பூர் மாநிலத்தில், மீண்டும் வன்முறை அலை வெடித்துள்ளது. இது தொடர்பாக தனது முதல் எதிர்வினையை பதிவுசெய்த மணிப்பூர் முதல்வர் பைரன் சிங், “கடந்த வாரம் ஜிரிபாம் மாவட்டத்தில் ஆற்றில் இருந்து சடலமாக மீட்கப்பட்ட மூன்று பெண்கள் மற்றும் குழந்தைகளைக் கொன்றவர்களைக் கண்டுபிடிக்க தேடுதல் நடவடிக்கைகள் நடந்து வருகிறது.
பெண்கள் மற்றும் குழந்தைகள் கொல்லப்படுவது மனித குலத்திற்கு எதிரான குற்றம். மூன்று அப்பாவி குழந்தைகள் மற்றும் மூன்று அப்பாவி பெண்கள் குக்கி பயங்கரவாதிகளால் ஜிரிபாமில் பணயக்கைதிகளாகப் பிடித்துக் கொல்லப்பட்டதைக் கண்டிக்க நான் ஆழ்ந்த சோகத்துடனும் கோபத்துடனும் இங்கு நிற்கிறேன்
இதுபோன்ற காட்டுமிராண்டித்தனமான செயல்களுக்கு எந்த நாகரீக சமூகத்திலும் இடமில்லை. இந்த பயங்கரவாதிகளுக்கான வேட்டை தற்போது நடைபெற்று வருகிறது, விரைவில் அவர்கள் சட்டத்தின் முன் நிறுத்தப்படுவார்கள் என்று நான் உங்களுக்கு உறுதியளிக்கிறேன். அவர்களின் மனிதாபிமானமற்ற செயல்களுக்கு அவர்கள் பொறுப்பேற்கப்படும் வரை நாங்கள் ஓய மாட்டோம்." என்று பைரன் சிங் தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்ட வீடியோவில் கூறினார்.
குக்கி தீவிரவாதிகளுக்கும் பாதுகாப்புப் படையினருக்கும் இடையே நடந்த துப்பாக்கிச் சண்டையில், 10 கிளர்ச்சியாளர்கள் சமீபத்தில் கொல்லப்பட்டனர். இதனை தொடர்ந்து, ஜிரிபாமில் உள்ள இடம்பெயர்ந்தோருக்கான முகாமில் இருந்து நவம்பர் 11 முதல் ஆறு பேரை குக்கி தீவிரவாதிகள் கடத்தியதாக சொல்லப்படுகிறது. அவர்கள் அதன்பின்னர் ஆற்றில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவத்தால் மணிப்பூரில் மீண்டும் வன்முறை வெடித்துள்ளது.
மணிப்பூர் 18 மாதங்களுக்கும் மேலாக வன்முறையின் கோரப்பிடியில் உள்ளது. அங்கே மெய்தி மற்றும் குக்கி சமூகத்தினரிடையே வெடித்த இனக்கலவரம் குறைவதற்கான அறிகுறிகள் எதுவும் தற்போதைக்கு இல்லை.