திருப்பதி தேவஸ்தானத்தில் பணியாற்றும் வேற்று மத ஊழியர்களை நீக்க அரசுக்கு பரிந்துரை: அறங்காவலர் குழு கூட்டத்தில் தீர்மானம்

By என். மகேஷ்குமார்

திருமலை திருப்பதி தேவஸ்தானத்தில் பணியாற்றும் வேற்றுமத ஊழியர்களை நீக்க அல்லது கட்டாய ஓய்வு அளிக்க அரசிடம் பரிந்துரை செய்வது என தேவஸ்தான அறங்காவலர் குழு கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் அறங்காவலர் குழு கூட்டம் அதன் தலைவர் பி.ஆர்.நாயுடு தலைமையில் நேற்று திருமலையில் நடைபெற்றது. புதிய அறங்காவலர் குழு பதவியேற்ற பிறகு நடைபெற்ற முதல் கூட்டம் இதுவாகும். இக்கூட்டத்தில் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முக்கிய தீர்மானங்கள் குறித்து அறங்காவலர் குழு தலைவர் பிஆர் நாயுடு, தேவஸ்தான நிர்வாக அதிகாரி சியாமள ராவ் ஆகியோர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

ஏழுமலையானை தரிசிக்க பக்தர்கள் அதிக நேரம் காத்திருக்கும் நிலை உள்ளது. இதை தவிர்த்து 2 அல்லது 3 நேரத்திற்கும் பக்தர்கள் தரிசனம் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும். இதற்கு செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் பயன்படுத்தப்படும்.

திருமலை திருப்பதி தேவஸ்தானத்தில் பணியாற்றும் வேற்றுமத ஊழியர்களை நீக்க அல்லது கட்டாய ஓய்வு அளிக்க அரசிடம் பரிந்துரை செய்வது என ஒருமனதாக தீர்மானிக்கப்பட்டுள்ளது.

திருப்பதியில் தேவஸ்தான நிதியில் கட்டப்பட்டுள்ள பாலத்திற்கு ’கருட பாலம்’ என பெயர் சூட்டப்படும். அலிபிரியில் சுற்றுலா கழகம் மூலம் 20 ஏக்கர் நிலம் கடந்த ஆட்சியில் மும்தாஜ் ஓட்டல் நிறுவனத்தாருக்கு வழங்கப்பட்டுள்ளது. இதனை அறங்காவலர் குழு ரத்து செய்கிறது. ஆன்மிக திருத்தலமான திருமலையில் அரசியல் பேச தடை விதிக்கப்படுகிறது.

தனியார் வங்கிகளில் டெபாசிட் செய்யப்பட்டுள்ள ஏழுமலையானின் பணம், நகைகள் அரசு வங்கிகளில் டெபாசிட் செய்யப்படும். நித்ய அன்னதானத்தில் கூடுதலாக ஒரு உணவு சேர்க்கப்படும்.

தமிழகம் பிற மாநில சுற்றுலா துறைகளுக்கும், ஆந்திர அரசு போக்குவரத்து கழகத்திற்கும் ரூ.300 சிறப்பு தரிசன டிக்கெட்டுகள் ஒதுக்கப்படுகிறது. இதில் பல்வேறு முறைகேடுகள் நடப்பது தெரியவந்ததால் இவை அனைத்தும் ரத்து செய்யப்படுகிறது.

திருப்பதி உள்ளூர்வாசிகளுக்கு பழையபடி, ஒவ்வொரு மாதமும் முதல் செவ்வாய்க்கிழமை ஏழுமலையானை தரிசிக்க அனுமதி வழங்கப்படும். லட்டு பிரசாதத்திற்கு தரமான நெய்யை பயன்படுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர்கள் கூறினர்

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE