டெல்லி அமைச்சர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு, ஆம் ஆத்மி கட்சியிலிருந்து விலகிய கைலாஷ் கெலாட் நேற்று பாஜகவில் இணைந்தார்.
டெல்லியில் அதிஷி தலைமையிலான ஆம் ஆத்மி அரசில் போக்குவரத்து துறை அமைச்சராக இருந்தவர் கைலாஷ் கெலாட். டெல்லி உயர் நீதிமன்ற மற்றும் உச்ச நீதிமன்ற வழக்கறிஞருமான கைலாஷ் கெலாட் கடந்த 2015 முதல் டெல்லி எம்எல்ஏவாக இருந்து வருகிறார். போக்குவரத்து துறைக்கு முன் உள்துறை, நிர்வாக சீர்திருத்தங்கள் உள்ளிட்ட துறைகளுக்கும் அமைச்சராக இருந்துள்ளார்.
இந்நிலையில் கைலாஷ் கெலாட் நேற்று முன்தினம் தனது அமைச்சர் பதவியை ராஜினமா செய்துவிட்டு ஆம் ஆத்மி கட்சியை விட்டும் விலகினார். இதுகுறித்து கட்சியின் ஒருங்கிணைப்பாளர் அர்விந்த் கேஜ்ரிவாலுக்கு அவர் எழுதிய கடித்ததில், "மக்களின் உரிமைகளுக்காகப் போராடுவதற்கு பதிலாக, நாம் நமது சொந்த அரசியல் நலனுக்காக மட்டுமே போராடி வருகிறோம். மக்களுக்கு அளித்த உறுதிமொழிகளை ஆம் ஆத்மி நிறைவேற்றவில்லை. மக்களுக்கு சேவை செய்யும் உணர்வை அரசியல் ஆசைகள் முந்திவிட்டன" என்று குற்றம் சாட்டியிருந்தார்.
இந்நிலையில் கைலாஷ் கெலாட் நேற்று பாஜகவில் இணைந்தார். டெல்லியில் உள்ள பாஜக தலைமை அலுவலகத்தில் மத்திய அமைச்சர்கள் மனோகர் லால் கட்டார், ஹர்ஷ் மல்கோத்ரா, டெல்லி பாஜக தலைவர் வீரேந்திர சச்தேவா, ஊடகப் பிரிவின் தேசிய தலைவர் அனில் பலுனி உள்ளிட்டோர் முன்னிலையில் அவர் பாஜகவில் இணைந்தார்.
கைலாஷ் கெலாட் பாஜகவில் இணைந்திருப்பது டெல்லி அரசியலில் திருப்பு முனையை ஏற்படுத்தும் என அமைச்சர் மனோகர் லால் கட்டார் கூறினார். கைலாஷ் கெலாட் நல்ல பணிகளுக்கு பெயர் பெற்ற தலைவர் என்று வீரேந்திர சச்தேவா பாராட்டினார்.
டெல்லியில் ஆம் ஆத்மி கட்சியிடம் இருந்து ஆட்சி அதிகாரத்தை கைப்பற்ற பாஜக தீவிரம் காட்டி வரும் நிலையில் கெலாட் பாஜகவில் இணைந்திருப்பது எதிர்வரும் டெல்லி பேரவை தேர்தலில் பாஜகவின் வெற்றிவாய்ப்பை அதிகரிக்கும் என அக்கட்சி நம்புகிறது. இதற்கிடையில் கைலாஷ் கெலாட் மீது மத்திய அமைப்புகள் தொடர்ந்துள்ள வழக்குகள் காரணமாக அவர் இந்த முடிவை எடுத்துள்ளதாக ஆம் ஆத்மி கட்சி கூறியுள்ளது.
புதிய அமைச்சராகிறார் ஷோகீன்: டெல்லியின் நங்லோய் ஜாட் தொகுதி எம்எல்ஏ ரகுவிந்தர் ஷோகீன், அதிஷி அரசில் புதிய கேபினட் அமைச்சராக இணைவார் என்று ஆத்மி கட்சி நேற்று அறிவித்தது. கைலாஷ் கெலாட் பாஜகவில் இணைந்த அடுத்த சில நிமிடங்களில் இந்த அறிவிப்பு வெளியானது.
1883-88-ல் குருஷேத்ரா என்ஐடி-யில் (அப்போதையை பிராந்திய பொறியியல் கல்லூரி) பொறியியல் பட்டம் பெற்ற ரகுவிந்தர் ஷோகீன், கல்லூரி நாட்களில் அரசியலில் தீவிரமாக செயல்பட்டவர். வெளிப்புற டெல்லியின் ஜாட் தலைவராக அறியப்படுகிறார்\