கேரள மாநிலம் நிலக்கல் அருகே சபரிமலைக்கு சென்ற பேருந்தில் திடீர் தீ விபத்து

By KU BUREAU

சபரிமலை: ஐயப்ப பக்தர்களை ஏற்றுவதற்காக நேற்று அதிகாலை பம்பையில் இருந்து நிலக்கல் நோக்கிச் சென்ற கேரள அரசுப் பேருந்தில் திடீரெனத் தீப்பற்றியதில், பேருந்து முழுவதும் எரிந்து கருகியது. பேருந்தில் பக்தர்கள் யாரும் இல்லாததால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.

மண்டல பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோயில் நவ. 15-ம் தேதி மாலை திறக்கப்பட்டது. இதையடுத்து, தமிழகம், ஆந்திரா, தெலங்கானா, கர்நாடகா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் தினமும் தரிசனத்துக்காக வருகின்றனர். இவர்கள் வரும் வாகனங்கள் அனைத்தும் நிலக்கல்லில் நிறுத்தப்படுகின்றன.

பின்னர், பக்தர்கள் அங்கிருந்து கேரள அரசுப் போக்குவரத்துக் கழகப் பேருந்துகள் மூலம் 20 கி.மீ. தொலைவில் உள்ள பம்பைக்குச் செல்கின்றனர். கார் மற்றும் சிறிய ரக வாகனங்கள் மட்டுமே பம்பை வரை அனுமதிக்கப்படுகின்றன.

இந்நிலையில், நேற்று அதிகாலை பம்பையில் இருந்து நிலக்கல்லுக்கு பக்தர்களை ஏற்றுவதற்காக கேரள அரசுப் பேருந்து சென்று கொண்டிருந்தது. பேருந்தில் பக்தர்கள் யாரும் இல்லாத நிலையில், சாலக்கயத்துக்கு அருகே 30-ம் வளைவில் சென்றபோது பேருந்தின் இன்ஜினிலிருந்து திடீரென புகை வந்தது. அதிர்ச்சியடைந்த ஓட்டுநரும் , நடத்துநரும் பேருந்தை விட்டு அவசரமாக கீழே இறங்கினர். அதற்குள் பேருந்து முழுவதும் தீ பரவியது.

இதுகுறித்து பம்பை, நிலக்கல் தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. எனினும், தீயணைப்பு வீரர்கள் வருவதற்குள் பேருந்தின் பெரும்பாலான பகுதிகள் தீயில் கருகின. இது தொடர்பாக பம்பை போலீஸார் வழக்கு பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE