புதுடெல்லி: ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க அனுமதி கோரி வேதாந்தா நிறுவனம் தாக்கல் செய்த மறுஆய்வு மனுவை உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.
தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில் இருந்து வெளியேறிய நச்சுப்புகை மற்றும் கழிவுகள் காரணமாக இந்த ஆலையை மூடக் கோரி தூத்துக்குடி மற்றும் சுற்றுவட்டார பொதுமக்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்நிலையில், கடந்த 2018 மே 22 அன்று இந்த போராட்டம் வன்முறையாக மாறியதால் போலீஸார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 13 பேர் இறந்தனர். அதையடுத்து ஆலையை தமிழக அரசு மூடி சீல் வைத்தது. தமிழக அரசின் இந்த நடவடிக்கையை எதிர்த்து ஸ்டெர்லைட் ஆலை தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், கடந்த 2020-ம் ஆண்டு ஆக.18 அன்று தள்ளுபடி செய்து தீர்ப்பளித்தது. அதை எதிர்த்து வேதாந்தா தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றமும், சென்னை உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பை உறுதி செய்து, மேல்முறையீட்டு மனுவை கடந்த பிப்ரவரி மாதம் 29-ம் தேதி தள்ளுபடி செய்தது.
இந்நிலையில் இந்த உத்தரவை மறுஆய்வு செய்யும் வகையில் வேதாந்தா நிறுவனம் தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் மறுஆய்வு மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. இந்த மனு மீதான விசாரணை தலைமை நீதிபதியாக ஏற்கெனவே பதவி வகித்த டி.ஒய்.சந்திரசூட் மற்றும் நீதிபதிகள் ஜே.பி.பர்திவாலா, மனோஜ் மிஸ்ரா ஆகியோர் அடங்கிய அமர்வில் நடந்தது.
விசாரணைக்கு உகந்தது அல்ல: அப்போது நீதிபதிகள், “இந்த வழக்கில் சென்னை உயர் நீதிமன்றம் சரியான தீர்ப்பை அளித்திருப்பதால், ஏற்கெனவே வேதாந்தா தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்தோம். தற்போது உச்ச நீதிமன்றம் அளித்த அந்த தீர்ப்பை மறு ஆய்வுசெய்யும் வகையில் தாக்கல் செய்யப்பட்டுள்ள இந்த மனு உச்ச நீதிமன்ற விதிகளின்படி விசாரணைக்கு உகந்தது அல்ல என்பதால் இந்த மனுவை பட்டியலிட முடியாது” என மறுத்து, தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளனர்.