வாக்கு வங்கி அரசியலை புறக்கணித்து மக்கள் நலனில் அக்கறை செலுத்துகிறோம்: பிரதமர் நரேந்திர மோடி கருத்து

By KU BUREAU

புதுடெல்லி: வாக்கு வங்கி அரசியலை புறக்கணித்து மக்கள் நலனில் அக்கறை செலுத்துகிறோம் என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

தனியார் ஊடகத்தின் 100-வது ஆண்டு விழா டெல்லியில் நேற்று நடைபெற்றது. இதில் பிரதமர் நரேந்திர மோடி பேசியதாவது: கடந்த 70 ஆண்டுகளாக காஷ்
மீரில் தீவிரவாத பிரச்சினை நீடித்தது. தற்போது அங்கு அமைதி திரும்பி வருகிறது. கடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் காஷ்மீர் மக்கள் பெருந்திரளாக வாக்களித்து ஜனநாயகத்தின் மீதான நம்பிக்கையை வெளிப்படுத்தினர். அசாமில் கடந்த 50 ஆண்டுகளாக வன்முறை நீடித்தது. தற்போது அங்கு அமைதி நிலவுகிறது. கடந்த 2008-ம் ஆண்டில் மும்பையில் மிகப்பெரிய தீவிரவாத தாக்குதல் நடத்தப்பட்டது. அப்போது மக்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாக இருந்தது. தற்போது நிலைமை தலைகீழாக மாறி, தீவிரவாதிகளின் பாதுகாப்பு கேள்விக்குறியாகி இருக்கிறது.

கரோனா பெருந்தொற்று காலத்தில் இந்தியா பெரும் பாதிப்புக்கு உள்ளாகும் என்று உலக நாடுகள் கணித்தன. அந்த கணிப்பை பொய்யாக்கி கரோனாவுக்கு எதிரான போரை இந்தியா திறம்பட வழிநடத்தியது. பல்வேறு நாடுகளில் ஒவ்வொரு பொதுத்தேர்தலின்போதும் ஆட்சி மாற்றம் நடைபெறுகிறது. ஆனால் இந்தியாவில் 3-வது முறையாக தேசிய ஜனநாயக கூட்டணி மத்தியில் ஆட்சி அமைத்திருக்கிறது. இந்திய மக்கள் பாஜக கூட்டணி மீது மிகுந்த நம்பிக்கை வைத்துள்ளனர்.

கடந்த கால ஆட்சியாளர்கள் வாக்கு வங்கி அரசியலை முன்னிறுத்தி செயல்பட்டனர். தற்போதைய தேசிய ஜனநாயக கூட்டணி அரசு வாக்கு வங்கி அரசியலை புறக்கணித்து, மக்கள் நலனில் மட்டுமே அக்கறை செலுத்துகிறது. கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு இந்தியாவில் ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் கிடையாது. தற்போது நாடு முழுவதும் 1.25 லட்சம் ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் செயல்படுகின்றன. இதன் மூலம் ஏராளமான இளைஞர்கள் வேலைவாய்ப்பை பெற்று உள்ளனர். புதிய தொழில்முனை வோர்கள் உருவாகி உள்ளனர். இவ்வாறு அவர் பேசினார்.

பாஜகவினருக்கு அறிவுரை: வரும் 20-ம் தேதி மகாராஷ்டிர சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளது. இதையொட்டி அந்த மாநில பாஜக தொண்டர்களிடம் பிரதமர் நரேந்திர மோடி காணொலி வாயிலாக பேசியதாவது: மகாராஷ்டிர அரசின் திட்டங்கள் குறித்த வீடியோ, பதிவுகளை மக்களிடம் பரப்ப வேண்டும். குறிப்பாக பெண்கள், இளைஞர்கள், விவசாயிகளின் முன்னேற்றம் தொடர்பான திட்டங்களை மக்களிடம் எடுத்துரைக்க வேண்டும். மகா விகாஸ் அகாடி தலைவர்கள் பொய்களை பரப்பி வருகின்றனர். இந்த பொய்களை மக்களுக்கு புரிய வைக்க வேண்டும். சாதிவாரியாக மக்களை பிளவுபடுத்த காங்கிரஸ் சதி செய்கிறது. இந்த சதியை பாஜகதொண்டர்கள் முறியடிக்க வேண்டும். மகாராஷ்டிராவின் ஒவ்வொரு சட்டப்பேரவைத் தொகுதியிலும் பூத்வாரியாக பணியாற்ற வேண்டும். வரும் தேர்தலில் பாஜக கூட்டணி வெற்றி பெறுவது உறுதி. இவ்வாறு பிரதமர் நரேந்திர மோடி பேசினார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE